நீதிபதிகளே நீங்கள் செய்வது நியாயம் தானா?

  பாரதி பித்தன்   | Last Modified : 27 Apr, 2019 12:14 pm
special-article-about-indian-judges-and-their-judgements

கண் தெரியாத கடவுளுக்கு கட்டுப்படாதவர்கள் கூட, கட்டுப்ப வேண்டிய அமைப்பாக இருப்பது, நீதிமன்றங்கள். இதனால் தான் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை, மைலாட் (என் கடவுளே) என்று அழைக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத கடவுள் கூட, பல அநியாய அக்கிரமங்களை, தன் பக்தன் படும் துன்பத்தை கண்டும் காணாமல் இருந்தால், மக்கள், அது அது விதிப்படி நடக்கிறது என்று மவுனசாட்சியாக இருக்கிறார்கள். 
ஆனால் வாழும் மைலாடுக்கள் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதிலேயே தங்களின் முழு நேரக் கடமையாக கொண்டு இருக்கிறார்கள். 

வழக்கு தொடுப்பவன் யார், அவனுக்கு இந்த வழக்கின் மூலம் கிடைக்கும் ஆதாயம் என்ன என்றெல்லாம், விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. காவல்துறை, அரசுகளின் குடுமி தங்கள் கையில் இருக்கிறது என்பதால் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டு விக்கிறார்கள். 

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சிவகாசியில் ஒராண்டு அன்றாடக் கூலிக்கு உழைத்து உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், ஒரே நாளில் வெடிக்கப்படுகிறது. இதனால் மாசு ஏற்படுகிறது என்று தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கிறது நீதிமன்றம். 

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது மாசு அளவு அதிகரிக்க என்ன காரணம். பட்டாசு விற்பனை கடந்த 100 ஆண்டுகள் எவ்வளவு அதிகரித்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் எவ்வளவு மாசு பட்டாசால் ஏற்பட்டது, அது எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்றெல்லாம் கணக்கு பார்த்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. மனு வந்ததா, எதிரிக்கு ஆதரவாக பெரியஅளவில் போராட்டம் இருக்காதா, போடு சட்டத்தை என்ற ரீதியில் தீர்ப்பளிக்கிறார்கள். 

அரசு பஸ்கள் சொல்ல முடியாத தரத்தில் இயங்கி வருகின்றன. இதனால் நாள் தோறும் விபத்துகள் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் தனியார் பள்ளி வாகனத்தில் இருந்த துளை வழியாக குழந்தை விழுகிறது. உடனே தனியார் கல்வி நிறுவன வாகனங்களுக்கு ஆயிரத்தெட்டு விதிமுறைகளை கோர்ட் விதிக்கிறது. இது தவறு இல்லை என்றாலும் இதில் 10 சதவீதமாவது அரசு போக்குவரத்து கழகத்திற்கும் விதித்திருக்க வேண்டும் அல்லவா?

இதே போல தான் சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்க வேண்டும்; அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும். கோர்ட் அனைத்து மொழிகளையும், அனைத்து மதங்களின் நடைமுறைகளையும் அறிந்து கொண்டு வழக்கு நடத்துகிறார்களா? அல்லது அந்த மதம் தொடர்பான பெரியவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்களா என்பது எல்லாம் பதில் கிடைக்காத கேள்விகள். 

ஒரு மனு வந்துவிட்டதா உடனே மக்களின் நம்பிக்கையாக இருந்தால் என்ன, யாரை தங்கள் முடிவு வேதனைப்படுத்தினால் என்ன என்பதப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரம் இருக்கிறது என்று தீர்ப்பளிக்கிறது கோர்ட். 

சபரிமலை விவகாரத்தில் பெண்களின் உரிமையை பற்றி பேசிய கோர்ட், இன்ன பிற வழக்குகளில் பாலியல் சம உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய கோர்ட், தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுந்த பின்னர் மற்ற நீதிபதிகள் தங்களுக்கு பெண் செயலாளர்களே வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். இப்போது பெண் உரிமை எங்கே போனது என்று கேட்க யாரும் இல்லை. 

தற்போது ஐகோர்ட் மதுரைக் கிளை தமிழக அரசுக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. அதன் விளைவுதான் இந்த கட்டுரையே. மதுரையை சேர்ந்தவர் ராமலட்சுமி, இவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் வள்ளலார் வழிபாட்டை புதிய மதமாக அல்லது தனி நெறியாக அறிவிக்க வேண்டும் என்று மனுச் செய்கிறார்.

இது மதசடங்குகள் அடிப்படையிலானது கோர்ட் தலையிடாது என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டிய கோர்ட், தமிழக அரசு பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கோர்ட் சொல்லிவிட்டது என்று தமிழக அரசு இதில் ஏதாவது முடிவு எடுத்து அறிவிக்கும். 

கர்நாடகாவில் லிங்காயத்துகளை தனி மதமாக அந்த மாநில அரசு ஓட்டுக்காக அறிவித்ததே, அதற்கு இணையாக இங்கேயும் ஏதாவது நடக்கும். அதன் பின்னர் ஐயா வைகுண்டர் வழி நடப்பவர்கள், இஸ்கான் அமைப்பினர், மெய்வழிசாலைகாரர்கள் என்று ஒவ்வொருவரும், இது போல தங்களை தனித் தனி மதமாக அறிக்க வேண்டும் என்று மனு செய்வார்கள்.  அதற்கு கோர்ட் உத்தரவு கொடுக்கும். 

யாரோ ஒருவர் இந்தியாவில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், செளரம் ஆகியவை தான் மதங்கள், இந்து மதம் என்று ஒன்று இல்லை. ஆதி சங்கர் தான் இவற்றை எல்லாம் ஒன்றாக்கினார். அப்போதே அவரை பலர் ஏற்க வில்லை. இதனால், இந்து மதமே இல்லை என்று உத்தரவிட மனுச் செய்வார்.

 அதையும் ஏற்று நம் நீதிபதிகள் தமிழக அரசை உத்தரவிடச் சொல்லுவர். நம்ம அரசும் கூட, தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அரசு தானே.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்வார்கள். மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பம் தான் ஏற்படும். 

ஐயா நீதிபதிகளே, உங்கள் தீர்ப்பிற்காக பல வழக்குகள் காத்து கிடக்கின்றன. அவற்றை நீங்கள் விரைந்து முடியுங்கள். அதை விடுத்து, உங்களின் நேரத்தை இது போன்ற விஷயங்களில் செலவிடாதீர்கள். 

தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டால், தீர்ப்பை பெற்றுத்தரும் புரோக்கர், தீர்ப்பை பெற லாபி செய்யலாம் போன்ற பல விஷயங்கள் வெளிப்பட்டு, உங்கள் மீது இருந்த மரியாதையை குறைத்து விட்டது. இந்த சூழ்நிலையில், தேன் கூடு போல உள்ள மத விவகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை விளைவிக்காதீர்கள். 

மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் உங்கள் நடவடிக்கைகள் நியாயமாக இருக்கிறதா என்று சிந்தனை செய்து பாருங்கள். இது தான் இந்த கணத்திற்கு தேவை. 
nestm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close