நேரத்தை சேமிக்கும் ‛டைம் பேங்க்’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 

  விசேஷா   | Last Modified : 29 Apr, 2019 06:02 pm
do-you-know-about-time-bank-a-smart-way-to-utilize-your-time-for-peaceful-future

நாம் அனைவரும் ஓடி, உழைத்து ஓடாய் தேய்ந்து சம்பாதிக்கும் பணத்தை, வங்கியில் போட்டு வைத்து, தேவைப்படும் நேரங்களில் அதை செலவு செய்கிறோம். அதே சமயம்,  நமக்கு உடல் நிலை சரியில்லாத காலத்திலோ, வயது முதிர்வால் தனிமையில் தவிக்கும் நிலையிலோ, எவ்வளவு பணம் இருந்தாலும், உதவி செய்ய ஒருவர் இல்லையென்றால், நாம் சேர்த்து வைத்த பணத்தால் என்ன பயன். 

சரி, ஆயிரம், லட்சம், கோடிகளை கொட்டிக் கொடுத்தால், வேலையாட்கள் கிடைப்பார்களே என நீங்கள் நினைப்பதும் சரியே. ஆயினும், எவ்வளவு பணம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அது கரைந்து போய்விடும் அல்லவா. அப்படிப்பட்ட நிலை உருவாகும் போது, நீங்கள் சேமித்தது பணமாக இல்லாமல், ‛டைம்’ எனப்படும் நேரமாக இருந்தால், அந்த நேரம் உங்களுக்கு கை கொடுத்தால், எவ்வளவு சவுகரியமாக இருக்கும். 

ஆம்...இப்படிப்பட்ட அற்புத திட்டத்தை, சுவிட்சர்லாந்து அரசு செயல்படுத்தி வருகிறது. அந்நாட்டில், ஓய்வு வயதை எட்டியவர்களுக்கு, அரசின் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனினும், பணத்தின் பலத்தை விட, ஆள் பலம் மிக முக்கியம் என்பதை உணர்ந்த அந்நாட்டு அரசு, தனிமையில் வாழும், வயதானவர்களை கவனித்துக் கொள்வதற்கென்றே அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

அதாவது, ஓய்வு வயதை எட்டிய ஒருவர், தன் உடலில் பலம் உள்ளவரை, தன்னை விட வயதான ஒருவருக்கு சேவை செய்யலாம், அவரை கவனித்துக்கொள்ளுதல், அவருக்கு தேவையானவற்றை செய்து தருதல் என செய்யலாம். தினமும் எத்தனை மணி நேரங்கள் அவர், சேவையில் ஈடுபடுகிறார் என்பது கணக்கில் கொள்ளப்படுகிறது. அது, அவரது ‛டைம் பேங்க்’ கில் வரவு வைக்கப்படுகிறது. 

உதாரணத்திற்கு, 60 வயதை எட்டிய ஒருவர், 10 ஆண்டுகள், மூத்த குடிமக்களுக்கான சேவையில் ஈடுபடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த நபருக்கு, 70 வயது ஆகிறபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவரை கவனித்துக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை.

இப்போது அவர் என்ன செய்வார்? தன் ‛டைம் பேங்க்’ கில் உள்ள நேர இருப்பை கழித்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். ஓய்வு வயதுக்குப் பின், எத்தனை மணி நேரங்கள் மூத்த குடிமக்களுக்கான சேவை செய்தாரோ, அத்தனை மணி நேரங்கள், அரசின் சார்பில் நியமிக்கப்படும் நர்ஸ் ஒருவர், அவருக்கு இலவசமாக சேவை செய்வார். இதற்காக அவரிடம் எந்த ஒரு சிறு தொகையும் வசூலிக்கப்படாது. 

ஆம்... சுவிட்சர்லாந்தில் தனியாக வாழும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கவனித்தில் கொண்ட அந்நாட்டு அரசு, இப்படி ஒரு அருமையான திட்டத்தை அமல்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. இதனால், யார் துணையும் இன்றி தனியாக வாழும் மூத்த குடிமக்கள், தங்கள் எதிர்காலம் கருதி கவலை கொள்ள தேவையில்லை. 


தங்களால் முடிந்த வரை, பிறருக்கு உதவி விட்டு, பின் தங்களால் முடியாத காலத்தில், அதே சேவையை அரசாங்கத்திடமிருந்து பெறுவது தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம். சுவிட்சர்லாந்தின் இந்த அருமையான திட்டத்தை வரவேற்றுள்ள பிரிட்டன், சிங்கப்பூர் அரசுகள், அங்கும் இதே திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனவாம்!

‛முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது நம் நாட்டு பழமொழி, அதாவது ‛நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்' என்பது தான் அதன் பொருள். சுவிட்சர்லாந்தில் செயல்படுத்தப்படும் ‛டைம் பேங்க்’ திட்டம், இந்த பழமொழிக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றே கூறலாம். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close