நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி 1

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 15 May, 2019 02:39 pm
special-article-about-river-linking-project

சமூக ஆர்வலர் பட்டத்திற்கு மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று, இந்த “தேசிய நதிநீர் இணைப்பு” ஆதரவு. "ஏன் சார் இந்திய நதிகளை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கவேண்டும்?" என்று கேட்டுப் பாருங்கள். முதல் பதிலாக, "அநாவசியமாகக் கடலில் கலக்கும் நீரினை விவசாயத்திற்கு பயன்படுத்தி, விவசாயத்தைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக" என்று பதில் வரும். கொஞ்சம் கூடுதலான பதிலாக, உள்நாட்டில் நீர்வழிப் போக்குவரத்தினை உருவாக்க என்று வரும். 

கூட்டத்தில் அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று, தானும் சேர்ந்து கூச்சல் போடுவதற்குப் பெயர் சமூக ஆர்வலர் இல்லை. அது ஒரு வகையான குழு மனப்பான்மை! (Herd Mentality) மந்தை புத்தி!

தேசிய நதிநீர்களை இணைப்பது என்பது சாத்தியமா, இல்லையா? சாதகமா, பாதகமா? என்று பார்ப்பதற்கு முன், உபரியாக வரும் நீரினை, கடலில் சென்று வீணாகக் கலப்பதைத் தடுப்போம் / தவிர்ப்போம் என்று ஆர்வமாக இருப்பவர்கள், சில அறிவியல் சங்கதிக்கு விளக்கமோ, மாற்று ஏற்பாடோ சொல்லுங்களேன் ப்ளீஸ்.

 


அதென்ன அநாவசியமாக கடலில் கலக்கும் நீர்? 

கடலில் கலக்கும் நீரினை, அநாவசியம் என்று சொல்ல நாம் யார்? இந்த பூமியில் நாம் மட்டும் தான் வாழ்கிறோமா? வெறும் மனித இனம் மட்டும் இந்த பூமியில் வாழ்ந்துவிடுவோமா? இல்லை முடியுமா? என்னமோ பூமியில் இருக்கும் ஒட்டு மொத்த தண்ணீரும் மனிதர்களுக்காக மட்டும் இருப்பதாக நினைப்போ? நதிநீர் கடலில் கலக்காவிட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை உணர பெரிய அறிவியல் அறிவெல்லாம் வேண்டாம்; அடிப்படை புத்தியே போதும்.

முதலில் ஒரு சின்ன புள்ளிவிபரம் பார்ப்போம்.
பூமியின் நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களில், அதிகம் தண்ணீரை உட்கொள்ளும் உயிரினம் பாலூட்டிகளே! அதற்கு அடுத்தபடியாகத் தான் தாவரங்களைச் சொல்லலாம். ஒட்டு மொத்த பூமியில் வாழும் உயிரினங்கள், 87 லட்சம் உயிரின வகைகள். 

அதில் பாலூட்டி வகைகள் வெறும் ஐயாயிரத்தி நானூறு மட்டுமே. எண்பத்தி ஏழு லட்சத்தில், 5400 என்பது 0.062% மட்டுமே. (ஐயாயிரத்தி நானூறில் நாம் ஓர் உயிரினம். அளவில் பாதி கூட கிடையாது) அதே நேரத்தில் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை, இருபத்தி இரண்டு லட்சம் வகைகள். அதாவது, பூமிப் பந்தின் மொத்த உயிரினங்களில் 25%. 

பூமியில் பொழியும் மழை, ஓடும் நதிகள் இவை இந்த எண்பத்தி ஏழு லட்சம் உயிரினங்களுக்கும் பொதுவானது தான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? பூமியின் நுண் சிறுபான்மையினரான (micro minority) மனிதன் இருபத்தி ஐந்து சதவீதம் கொண்ட உயிரினங்கள் வாழும் கடலுக்கு நீரை அனுப்ப மறுக்கும் சதி நடக்கிறது. 

இது எவ்வளவு பெரிய வன்முறை? இதே மனிதன் தான், தன் சொந்த நாட்டின் அண்டை மாநிலத்திலிருந்து, தன் மாநிலத்திற்கு நீரினைச் சரியாகப் பங்கிட்டு கொடுக்காதது குற்றம் என்று குதிப்பவன். கடலில் கலக்கும் நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கானது. அதைத் தடுப்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எத்தனை கேடோ அத்தனை தரைவாழ் உயிரினங்களுக்கும் கேடு.

அதான் கடலில் அவ்வளவு தண்ணீர் இருக்குல்ல? அப்புறம் நாம வேற எதுக்கு தண்ணீரை அதற்குள் வெட்டியா அனுப்பணும்? அதான உங்க கேள்வி? திரும்பக் கேள்வி கேட்கிறேன். உங்கள் உடல் எடையில் அறுபது சதவீதம் நீர் தானே இருக்கு. அப்புறம் ஏன் தண்ணீர் குடிக்கிறீங்க? 

அதுவும் குறைந்தது ஒரு நாளைக்கு மூணு லிட்டராவது குடிக்கணும்னு பார்த்துப் பார்த்து குடிக்கிறீங்களே ஏன்? நாம எவ்வளவு சுயநலமிகள் பாருங்கள். சக மனிதன், தான் இருக்கும் இடத்தில் அணை கட்டி, தண்ணீரைத் தடுத்து வைத்தானென்றால் சண்டைக்குப் போகும் அதே புத்தியால், அடுத்த உயிரினங்கள் வாழ தண்ணீர் செல்வததே அநாவசியம் என்று சொல்கிறோம்.

ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். அநாவசியமாக கடலில் ஏன் நன்னீர் கலக்கவேண்டும் என்று நினைத்து, நிலத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட கடலில் கலக்கவிடாமல் சில ஆண்டுகள் தடுத்து விட்டோமென்றால் என்னவாகும்? 
1, பூமியின் நிலப்பரப்பில் மழை பெய்வது கிட்டத்தட்ட நின்று விடும்.
2, கடலோரப் பகுதிகள் அனைத்தும் பாலைவனமாகிவிடும்.
3, கடல் உயிரினங்கள் பாதிக்கும் மேல் உடனடியாக அழிந்து விடும்.
4, உணவு மற்றும் நீர் சுழற்சி தடைபட்டு உலகம் அழிந்து விடும். 
5, அப்படி அழிந்தவர்களின் பட்டியலில் நீங்களும் நானும் இருப்போம். 

சும்மா பயமுறுத்தவில்லை. சத்தியமான உண்மை அல்லது உண்மையான சத்தியம். எப்படி என்று விரிவாகப் பார்ப்போமா? 

அடுத்த பகுதிக்காக காத்திருங்கள்...
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close