செய்வது முறையா அசோக் லாவசா?

  பாரதி பித்தன்   | Last Modified : 19 May, 2019 08:08 pm
special-article-about-election-commissioner-ashok-lavasa

நீதிமன்றம், தேர்தல் கமிஷன் போன்ற சுயேட்சை அமைப்புகளின் முடிவுகளில், சர்வாதிகாரம் எட்டிப்பார்த்து விடக் கூடாது என்பதால் தான், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக, ஏதேனும் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்பதால் தான், ஒற்றைப்படை இலக்கமே பின்பற்றப்படுகிறது. 

நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி, 3 பேர் கொண்ட பெஞ்ச், 5 பேர் கொண்ட பெஞ்ச் என்று தான் நியமிக்கப்கிறார்கள். இரட்டை படையாக நியமனம் இருந்தால், அதன் தலைமை தனியாக தான் இருப்பார். முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படும் போது அவர் தன் கருத்தை தெரிவித்து அது ஏற்கப்படும். இதுவே நடைமுறை. 

ஜனநாயகத்தை கடைபிடிக்கும் கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழும். கருத்து மோதல்கள் அனல் பறக்கும்; ஆனால் முடிவு எடுத்த பின்னர் அனைத்து கருத்துக்களும் ஒன்றாக இணைந்து எடுக்கப்பட்ட முடிவுக்கு, அனைவரும் கட்டுப்படுவார்கள். அதன் பின்னர் செயற்குழு கூட்டத்தில் நடந்த விவாதம் எதுவும் வெளிப்படாது.

தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா, இந்த மரபுகளை உடைத்து, தேவையற்ற குழப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். கோல்கத்தாவில், பா.ஜ., - திரிணாமுல் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்கிறது.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் பற்றிய கேள்வி எழுப்பியது.

அதற்கு ஏற்ப, அசோக் லாவசா தான் யார் என்று வெளிப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் அமித் ஷா ஆகியோர் நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில், தேர்தல் கமிஷன் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று முடிவு செய்து விட்டது. ஆனால் அதில் தான் மாறுபட்ட கருத்தை கூறியதாகவும், சிறுபான்மை என்பதால், என் முடிவு கவனத்தில் இல்லை என்றும் அசோக் லாவசா குற்றம்சாட்டி உள்ளார்.

இந்திய தேர்தல் கமிஷன், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, அசோக் லாவசா ஆகியோரைக் கொண்டதாக  உள்ளது. இவர்கள் ஆலோசனை செய்து ஒத்த முடிவு எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது பெரும்பான்மையானவர்கள் முடிவு என்னவோ, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது விதி.

பெரும்பான்மை முடிவுகளின் போது, மாறுபட்ட முடிவு கொண்டவர்கள் மவுனம் காப்பதும், பிரச்னைகளை கடந்து சென்ற பின்னர், அவற்றை வெளிப்படுத்துவும் கடந்த காலத்தில் நடந்தவை. 

தேர்தல் முடிவதற்கு முன்பாகவே அதை நடத்தும் தேர்தல் கமிஷனின் ஒரு உறுப்பினர் அறைக்குள் நடந்ததை அம்பலப்படுத்துவதும், அதுவும் அரசுக்கு எதிராக அது இருப்பதும், திட்டமிட்ட செயல் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இது தேர்தல் முடிந்த பின்னர் எதிர்கட்சியினர் தொடங்க இருக்கும் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழியாக அமையும். இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு தேர்தல் நடத்துவது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதைப் போலவே நீதித்துறையில் ஒவ்வொரு வழக்கிலும் பேசத் தொடங்கினால், அதன் விளைவுகள் பலத்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். கடந்த, 30 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி, ஓய்வுக்கு பின்னர் தேர்தல் கமிஷனராக பணியாற்றும் அசோக் லாவசா இப்படி முறையற்ற வகையில் செயல்படுகிறார். 

அதுவும், நடைமுறைகள் தெரிந்தே செயல்படுகிறார் என்றால், அது நியாயம் இல்லை. ஆனால், அவர்கள் பெரிய இடத்தில் இருப்பதால் தட்டிக் கேட்க ஆள் இல்லை. இவர்களை நம்பித்தான் இந்த தேசம் இருக்கிறது என்றால், அதை விட கொடுமை எதுவும் இல்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close