வாஜ்பாயின் சபதத்தை நிறைவேற்றிய மாேடி!

  விசேஷா   | Last Modified : 24 May, 2019 07:03 pm
modi-achieved-to-deram-come-true-of-vajpayee

பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், பார்லிமென்ட்டில் எதிர்க் கட்சிகள் மத்தியில் விட்ட சவாலை நிறைவேற்றிக் காட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மாேடி. 

கடந்த, 1996ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, 161 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 140 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, தனிப் பெரும் கட்சியான பாரதிய ஜனதாவை மத்தியில் ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார். 

இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தது. 

அப்பாேது, ஆட்சி தொடர தேவையான, பெம்பான்மை எண்ணிக்கையிலான எம்.பி.,க்கள் இல்லாததை அடுத்து, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பார்லிமென்ட்டில் உரையாற்றி விட்டு, தன் பதவியை ராஜினாமா செய்தார். 1996ம் ஆண்டு பார்லிமென்ட்டில் வாஜ்பாய் பேசியதாவது:

‛‛நாங்களும் இந்த தேசத்திற்கு சேவை செய்யவே விரும்புகிறோம். ஒரு வேளை நாங்கள் ஆட்சி அதிகாரத்தை மட்டும் விரும்பியிருந்தால், சுயநலமற்ற வகையில் சேவை செய்யாமல், ஆட்சிப் பற்றி மட்டும் சிந்தித்திருந்தால், நாங்கள் ஆட்சி அமைக்க 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆம்... எங்களிடம் 40 ஆண்டு கால அனுபவம் உள்ளது. 

பாரதிய ஜனதா கட்சி, ஏதோ இன்று, நேற்று முளைத்த கட்சி அல்ல. திடீரென குக்கரில் சமைப்பது போல், தேர்தல் களத்தில் போட்டியிடும் கட்சியும் அல்ல. நாங்கள், மக்கள் மத்தியில் நேரடியாக சென்றோம், உழைத்தோம், அவர்களிடம் எங்கள் வாக்குறுதியை சொல்லி ஓட்டு கேட்டோம். இந்த கட்சி, ஆண்டின் 365 நாட்களும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி. 

எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும். ஜனாதிபதி வாய்ப்பளித்ததின் பேரில் நாங்களும் ஆட்சி அமைத்தோம். ஆனால், ஆட்சியை தொடர எங்களிடம் பெரும்பான்மை பலம் இல்லை. இருப்பினும், நாங்கள் மிகப் பெரிய பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அமருவோம். 

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, சபையை சரியான வகையில் நடத்த ஆட்சியாளர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதியளிக்கிறேன். 

ஆனால் ஒன்று, நீங்கள் எப்படி ஆட்சி அமைப்பீர்கள், எந்த கொள்கை அடிப்படையில் ஆட்சி அமைப்பீர்கள், அதை எப்படி தொடர்வீர்கள் என்பது எனக்கு தெரியாது.  

இந்த சபையில், எஸ்.சி., எனப்படும், பட்டியல் இனத்தை சேர்ந்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 77. அவர்களில், 29 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். வேறெந்த கட்சிக்கும் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் இல்லை. அதே போல், பழங்குடியினத்தை சேர்ந்த எம்.பி.,க்களும் எங்கள் கட்சியில் தான் அதிகம் உள்ளனர். 

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு ஆதரவான கட்சி பாரதிய ஜனதா என்பதற்கு இதை விட சிறந்த சான்று வேறென்ன வேண்டும்? சிறிய கட்சிகள் சேர்ந்து காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முற்படுகிறீர்கள். அது எவ்வளவு நடைமுறை சாத்தியம் என்பது எனக்கு தெரியாது. 

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு முன்பும் காங்கிரஸ் தலைவர்களிடம் சென்று கை கட்டி நிற்க வேண்டியிருக்கும். அவர்கள் அனுமதியின்றி நீங்கள் எதையும் செய்ய முடியாது. இப்படி பார்லிமென்ட்டுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தால், மக்களைப் பற்றியும், நாட்டை பற்றியும் சிந்திக்க உங்களுக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கும்?

நாங்கள் மக்களின் ஆதரவை பெறாதவர்கள் என்கிறீர்கள். ஆம் ஜனநாயக நாட்டில் எண்கள் மிக முக்கியம். எங்களிடம் இன்று போதிய அளவிலான எம்.பி.,க்கள் பலம் இல்லை தான். நீங்கள் ஆட்சி அமைக்க விரும்புவதை நான் வரவேற்கிறேன். எங்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இன்று எங்களிடம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.பி.,க்கள் எண்ணிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் முன்னெடுத்த தேச நலனுக்கான காரியங்கள் முடியும் வரை ஓயமாட்டோம். அதுவரை ஓய்வென்பதோ, துாக்கம் என்பதோ கிடையாது. இந்த சபையில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துக் காட்டுவோம். 
அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். நான் என் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளிக்கவிருக்கிறேன்’’  எனப் பேசிவிட்டு, பார்லிமென்ட்டிலிருந்து வாஜ்பாய் புறப்பட்டு சென்றார். 

அவருக்குப் பின், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜரால் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமர் பதவி வகித்தனர். இருவரின் அரசுகளும் மிகக் குறுகிய காலத்தில் கவிழ்ந்தன. அதன் பின் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, வாஜ்பாய், 1998ல் மீண்டும் பிரதமர் ஆனார். ஆனாலும், 13 மாதங்களில் அவரது அரசு மீண்டும் கவிழ்க்கப்பட்டது. அதன் பின் 1999ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில், தே.ஜ., கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. 

அப்போது, மூன்றாவது முறையாக, பிரதமரான வாஜ்பாய், 2004ம் ஆண்டு வரை அந்த பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில், பார்லிமென்ட்டில் வாஜ்பாய் விடுத்த சவாலை, பிரதமர் நரேந்திர மாேடி நிறைவேற்றி காட்டியுள்ளார். அதாவது, 2014ம் ஆண்டு தேர்தலிலேயே, அவரது வாக்கு பலித்துவிட்டது. 

அப்போதே, பாரதிய ஜனதா கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான, 272 இடங்களை விட கூடுதலாக 10 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. தற்போது, 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 300க்கும் அதிகமான இடங்களில் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளது. 

தன் அரசியல் வாழ்வில் குருநாதராக கருதிய வாஜ்பாயின் கனவு, சபதத்தை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மாேடி, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close