காங்கிரசுக்கு ‛காரியம்’ செய்துவிட்ட காரிய கமிட்டி!

  விசேஷா   | Last Modified : 25 May, 2019 05:56 pm
rahul-is-the-right-person-for-the-post-of-congress-president

மக்களவை தேர்தலில், நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பெற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆம், மாெத்தம் தேர்தல் நடைபெற்ற, 542 தொகுதிகளில், 52 இடங்களில் வெற்றி. இது, சத்தியமாக அவர்களே நினைத்து பார்த்திருக்காத வெற்றியாகத் தான் இருக்கும். கடந்த தேர்தலில், வெறும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை,  அரைசதம் அடித்து கலக்கியிருக்கிறது. 

கட்சியின் இந்த அபார வெற்றிக்கு, அந்த கட்சித் தலைவர் ராகுல் தான் காரணம் என்றால் அது மிகையாகாது. அவரின் ‛சரியான’ திட்டமிடலும், எதிர்க்கட்சிகளின் திட்டத்தை தவிடுபொடியாக்கும் ‛வியூகமும்’ தான், அந்த கட்சிக்கு இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுத்தந்துள்ளது. 

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், 46 வயதே கடந்த நிலையில், இளம் தலைவரான ராகுல், காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமாெத்த பாரத்தையும் தலையில் ஏற்றார். ஆம்... அப்போது தான், அவர் அந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பாவம், அந்த கட்சியில், இவர் அளவுக்கு ‛துடிப்பு, திறமை, அரசியல் அனுபவம்’ மிக்க தலைவர்கள் யாரும் இல்லை தான். 

அதனால் தான், அத்தனையும் ஒருங்கே பெற்ற ராகுல், மூத்த தலைவர்களின் (அதாவது வயதில் மூத்தவர்களே தவிர, அனுபவத்தில் ராகுலை ஒப்பிடுகையில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உடையவர்கள். அவ்வளவு அனுபவம் மிக்கவர் ராகுல்) வற்புறுத்தலுக்கிணங்க, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். 

அதன் பின், நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தல்களில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. இந்த வெற்றிக்கு முழுக் காரணம், ராகுல் மட்டுமே. அதாவது, கடந்த மக்களவை தேர்தலில், உ.பி.,யில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில், 71 இடங்களில் பா.ஜ., தனித்தும், அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து, 73 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

அவ்வளவு பெரிய மாேடி அலையிலும், ராகுல் காங்., துணைத் தலைவராக இருந்த போதே, அந்த மாநிலத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றிருந்தது. இந்த மாபெரும் சாதனையே, அவரை, கட்சித் தலைவர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. 

அதன் பிறகு தான் அவர் கட்சித் தலைவராக உயர்த்தப்பட்டார். அதற்குப் பின், அதே உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில், சமாஜ்வாதி, பகுஜன் சாமாஜ் ஆகிய இரு பெரும் துருவங்களை ஒன்றிணைத்த பெருமையும் ராகுலுக்கு உண்டு. அப்படி ஒன்று சேர்த்து, இரு தொகுதிகளில் அந்த கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்டார். அப்போது அந்த கூட்டணியில் காங்கிரசும் இருந்தது. 

ஆனால், 2019 மக்களவை பொதுத் தேர்தலில், மேற்கண்ட இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தனவே தவிர, அதில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க மறுத்துவிட்டன. ஆனாலும் மனம் தளராமல், அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், அங்குள்ள 80 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றுவிட்டது. 

அதுவும், ராகுலின் தாயார் வழக்கமாக போட்டியிட்டு வெற்றி பெறும் காங்கிரஸ் கோட்டையான ரேபரேலியில் தான் அந்த வெற்றி. ஆம்... தான் வழக்கமாக போட்டியிடும், கொள்ளு தாத்தா நேரு காலத்திலிருந்தே காங்கிரஸ் தலைவர்களின் பரம்பரை சொத்தாக பார்க்கப்படும் அமேதி தொகுதியில், இம்முறையும் காங்கிரஸ் சார்பில் ராகுல் தான் போட்டியிட்டார். 

கடந்த முறை, ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தன்னிடம் தோல்வியுற்ற பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பெண்மணி ஸ்மிருதி இரானி மீண்டும் தோற்றுவிட்டால், மிகவும் மனம் உடைந்து போய்விடுவாரோ என எண்ணி, இம்முறை, போனால் போகட்டும் என, 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்தார். 

ஒரு மிகச் சிறந்த அரசியல் தலைவருக்கு வேண்டிய ஒருங்கிணைக்கும் திறன், தன்னை புறந்தள்ளினாலும், தனித்து நின்று போராடும் குணம், எதிரிக்கும் பரிவு காட்டும் தன்மை என, ராகுல் எங்கோ உயர்ந்து நிற்கிறார். 

அமேதியில் தன் தோல்வியை முன்கூட்டியே முடிவு செய்துவிட்ட ராகுல், வட மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்கள் மனம் நோகாமல் இருக்க, காசி விஸ்வதாநர் ஆலயத்திலும், மத்திய பிரதசத்தில் உள்ள மஹாகாலேஸ்வர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினார். 

அதே சமயம், சிறுபான்மை மதத்தினர் பக்கமும் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்த, சிறுபான்மை மதத்தினர் அதிகம் வசிக்கும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு, பிரமாண்ட வெற்றி பெற்றார். இது, அவரது மதசார்பின்மையை காண்பிக்கிறது என்றால் அது மிகையாகாது. 

அதே போல் பீஹார், நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் - லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளையும் ஒரு கூட்டணி குடையின் கீழ் கொண்டு வந்தார். அடிப்படை கொள்கையிலேயே முரண்பட்ட இருகட்சிகளை கூட்டணி சேர வைத்த பெருமை ராகுலை மட்டுமே சேரும். 

ஆனால், அவர்களுக்கு வந்த சாேதனை, நிதிஷ் அந்த கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ., பக்கம் சேர்ந்துவிட்டார். தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், லாலுவின் ஆர்.ஜே.டி., கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சி, மாெத்தமுள்ள 40 இடங்களில் ஒன்றில் வெற்றி பெற்றுவிட்டது. மீதமுள்ள, 39 இடங்களில் பா.ஜ., கூட்டணி வென்றிருக்கிறது. 
மீண்டும் அதே தான், 39 இடங்களில் பா.ஜ., கூட்டணி வென்றாலும், அவர்களால், காங்கிரசை ஒரு தொகுதியில் வீழ்த்த முடியவில்லை. அவர்களால், அந்த மாநிலத்தில், 100 சதவீத வெற்றியை பெறமுடியவில்லை. இந்த பெருமையும் ராகுலைத் தான் சேரும். 

அதேபோல், கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்தாலும், மூன்றாவது இடம் பிடித்த மஜத தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி, இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் அவரை ஆதரித்து வருகிறது. எவ்வளவு பெரிய தாராள குணம் இருந்தால் இதை செய்ய முடியும்?

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலிலும், தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட, பா.ஜ.,வை விட 4 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று, அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், அந்த கட்சியின் அல்லது கூட்டணியின் ஆட்சி எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்பதை விட, அங்கு ஆட்சி அமைப்பதை சாத்தியப்படுத்திக் காட்டினாரா இல்லையா என்பதே முக்கியம். 

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஆளுங்கட்சிக்கு எதிரான அலையால் பா.ஜ., தோற்கவில்லை. ராகுல் தலைமையிலான குழு அமைத்த வியூகத்தால் தான் அங்கு காங்., ஆட்சி மலர்ந்துள்ளது. ஆனாலும், அந்த இரு மாநிலங்களிலும், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு விட்டுக் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. 

அது மட்டுமா? நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய, 14 மாநிலங்கள் மற்றும் சண்டிகர், தாத்ரா நாகர்ஹவேலி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. 

இந்திய வாக்காளர்கள், இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டால் கூட, 80 தொகுதிகளை உடைய உத்தர பிரதேசம், 48 தொகுதிகளை உடைய மஹாராஷ்டிரா, 40 தொகுதிகளை உடைய பீஹார், 29 தொகுதிகள் உடைய மத்திய பிரதேசம், 28 தொகுதிகளை உடைய கர்நாடகா ஆகிய மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி அசுர பலத்துடன் வெற்றி பெற்றாலும், அந்த மாநிலங்களில் தலா ஒரு தொகுதியை, காங்கிரசிடம் இழந்துவிட்டது.

இதற்கு மேல், மேற்கு வங்கத்தில் மாெத்தமுள்ள 42 தொகுதிகளில், மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமுல் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆகிய இரு பெரும் ஜாம்பவான்களின் ஆதிக்கத்தையும் மீறி, அங்கு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றனர் காங்கிரஸ் வேட்பாளர்கள். 

இதற்கு மேல் ஓர் இளம் தலைவனால் எவ்வளவு தான் செய்ய முடியும்? அவ்வளவு உழைப்பு, அயராத பணி. அதனால் தான், அந்த கட்சியின் தலைவர் ராகுல், தேர்தல் வெற்றிக்குப் பின் சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என எண்ணி, தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார். அதுவும், பொது மேடையிலோ, பத்திரிக்கையாளர்கள் மத்தியிலோ அல்ல. 

சர்வ வல்லமையும் பொருந்திய, கட்சியை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள, கட்சியின் அடிப்படை தொண்டனும் பதவி பெறும் வகையில் செயல்படுகின்ற, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தன் முடிவை அறிவித்தார் ராகுல். ஏனென்றால், இவ்வளவு வல்லமை பொருந்திய தலைவனை நாம் இழக்கப்போகிறோமே என, கட்சியின் அடிப்படை தொண்டன் ஒருவன் கூட சாேகத்தில் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காக, தன் முடிவை மிக ரகசியமாக, காரிய கமிட்டியின் முன் வைத்தார். 

 ஆனால், கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே தொடர்ந்து பாடுபட்டு வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி, கட்சிக்கு ராகுலின் சேவை மிகவும் தேவை எனக் கூறி, அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டது. இது, ராகுலுக்கு மேலும் சுமையை அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. கட்சிக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் அவர் எவ்வளவு காலம் தான் உழைப்பாரோ?

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close