தற்கொலை செய்துகொள்ளும் பறவையினங்கள்...!

  இளங்கோ   | Last Modified : 10 Jun, 2019 09:31 am
birds-suicide-in-assam-special-story

அஸ்ஸாமின் ஒரு சிறிய மலைகிராமம்மான ஜடிங்கா கிராமம் உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தளமாகும். கௌஹாத்தியில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில் காஸி இன பழங்குடி மக்கள் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஜதிங்கா கிராமம், வித்தியாசமான பறவை இனங்கள் வாழும் இடமாகும். இவற்றில் உள்ளூர் பறவைகளோடு வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகளும் உண்டு. இங்கு  உள்நாட்டு, வெளிநாட்டு பறவை ஆர்வலர்களை இக்கிராமம் ஈர்த்துக்கொண்டுள்ளது.  

இங்கு 45 வகையான பறவைகள் உண்டு. பெரும் எண்ணிக்கையில் இருந்த இந்தப் பறவையினங்கள், வினோத நிகழ்வு காரணமாகத் தற்போது சுருங்கி வருகின்றன. இதற்குக் காரணம், பறவைகளின் தற்கொலை எனப்படும் மர்மச் சாவுதான். ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்களில், நிலா வெளிச்சமில்லாத அமாவாசை மற்றும் அதனையொட்டி இருட்டான நாட்களில் தான் பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் விபரீதம் நடைபெறுகிறது.  

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மர்மம் இங்கு நீடிக்கிறது. கடந்த 1905-ஆம் ஆண்டில்தான் பறவைகள் கூட்டம் கூட்டமாக வெளிச்சத்தை நோக்கி வருவதையும், தரையில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதையும் இப்பகுதி மக்கள் முதன்முறையாகப் பார்த்துள்ளனர். ஓரிடத்தில் அவர்கள் ஏந்திச் சென்ற தீப்பந்தங்களை நோக்கி வேகமாக வந்த பறவைக் கூட்டம், பைத்தியம் பிடித்ததைப் போல் சுற்றி சுற்றி வந்து, தரையில் வேகமாக விழுந்ததையும் அவற்றில் பல இறந்துபோனதையும் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 

அதன் பின்னர் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் நிலா வெளிச்சம் இல்லாத இரவுகளில், ஒரு குறிப்பிட்ட இடத்தில்,  வெளிச்சத்தை நோக்கி வேகமாக பறவைகள் வருவதும் கீழே விழுந்து இறப்பதும் தொடர் கதையானது. 

இந்நிலையில் ஜதிங்கா பறவைகள் தற்கொலை மர்மம் குறித்து கண்டறிய, இந்திய வனவியல் ஆய்வு நிறுவனத்துடன் ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்தார்கள். இந்த மர்மச்சாவு இரண்டு வகைகளில் நிகழ்கிறது.  இதில் ஒன்று, இயற்கையால் ஏற்படும் வினோதம், மற்றொன்று இதனைப் பயன்படுத்தி, உள்ளூர் மக்கள் சிலரால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை விபரீதம். வழக்கமாக பறவைகள் இரவு நேரத்தில் வெளியே செல்லாமல், அவற்றின் கூடுகளிலேயே தங்கிவிடும். 

ஆனால் பருவமழைக் காலத்தின்போது, தெற்கிலிருந்து தொடர்ந்து வீசும் காற்று, மிதமான மழை மற்றும் கோள வடிவிலான வெளிச்சம் ஆகியவற்றின் காரணமாக அமாவாசை போன்ற இரவுகளில் பறவைகளுக்கு ஒருவித மனக்குழப்பம் ஏற்படுகிறது. திடீரென விடிந்து விட்டதைப்போல உணரும் பறவைகள், வெளிச்சம் வரும் திசை நோக்கி கூட்டம் கூட்டமாக வருகின்றன. சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுள்ள நெருக்கடியான இடத்தில் மேலும் பறக்க வழியில்லாமல், வெளிச்சம் தரும் விளக்கு, அல்லது தீப்பந்தத்தை கொத்திவிட்டு, பறவைகள் அயர்ந்துபோய் தரையில் விழுகின்றன. இருப்பினும் கீழே விழும் அந்தப் பறவைகள் ஏன் உடல் இறுக்கமடைந்து சில நேரங்களில் உயிரிழக்கின்றன என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும், பருவமழைக்காலங்களில், ஜதிங்கா பகுதியில் நிலவும் வித்தியாசமான தட்பவெப்ப நிலை காரணமாக, நிலத்தடி நீரில் ஒருவித காந்த ஆற்றல் தோன்றுவதாகவும், அதனால் பாதிக்கப்பட்டு பறவைகள் இதுபோல் வினோதமாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அதேநேரத்தில் பறவைகள் வினோதமாக நடந்துகொள்ளும்போது, அதனால் அச்சமடையும் சில பழங்குடி மக்கள் நீண்ட மூங்கில் கழிகளால் பறவைகளைத் தாக்குவதாகவும் அதன் காரணமாகவே தலையில் அடிபட்டு பறவைகள் இறந்து விழுவதாகவும் சில ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைகளிடம் தோன்றும் திடீர் மாற்றத்தைக் கண்டு, தீய சக்திகளால் அவை ஏவப்பட்டிருப்பதாக கருதி பழங்குடி மக்கள் அதனை இவ்வாறு கொன்றுவிடுவதாக கூறப்படுகிறது. எனவே  இயற்கை மற்றும் செயற்கை ஆகிய இரண்டும் கலந்து ஜதிங்காவில் பறவைகள் தற்கொலை என்ற மர்மச் சாவு நிகழ்வது தெரியவந்தது. ஆனால் ஒரு சில ஆய்வாளர்கள் வேறு சில காரணங்களால் பறவைகள் இறப்பதாகவும் கூறுகின்றனர். உறுதிபடுத்தப்பட்ட காரணங்கள் இன் னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close