அதிகாரிகளுக்கு கெட்ட நேரம் இது!

  பாரதி பித்தன்   | Last Modified : 27 Jun, 2019 12:25 pm
special-article-about-action-against-bad-officers

 
தேசத்தின் உயிர் நாடி அதிகாரிகள். எந்த அரசு வந்தாலும் அவர்களை இயக்குபவர்கர்கள் இவர்கள் தான். அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் தங்களுக்கு விருப்பமான அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்து கொள்வதும், புதிய அமைச்சர்கள் ஏற்கனவே இருப்பவர்களை அதே பதவியில் தொடர செய்வதும் இதனால் தான்.

அமைச்சர்கள் முக்கிய கோப்புகளை பார்க்கிறார்கள் என்றால் அவர்கள் முழுமையாக படிக்க மாட்டார்கள். அந்த துறையின் செயலாளர் 3 விதமான குறிப்புகளை கோப்புகளின் வெளியே குறிப்பிட்டு இருப்பார்கள். அது சட்டப்படி இந்த விவகாரத்தில் இப்படி முடிவு எடுக்க வேண்டும், இது விதி முறை மீறல் தான் என்றாலும் நமக்கு அல்லது நம் கட்சிக்காரர்களுக்கு இவ்வளவு லாபம், இந்த முடிவு சட்ட விரோதம் ஆனால் அதனால் கிடைக்கும் நன்மை, அல்லது லாபம் இவ்வளவு என்பது தான் அந்த முடிவுகள் அதைப் பார்த்து அமைச்சர் எதைத் தேர்வு செய்கிறாரோ அதன் படிதான் நடவடிக்கை இருக்கும்.

இதனால் தான் அதிகாரிகள் எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஐஏஎஸ் அதிகாரிகளை வேலையும் தெரியும் லஞ்சம் வாங்க மாட்டார், வேலை தெரியும் ஆனால் கைசுத்தம் கிடையாது, வேலையும் தெரியாது, வலுவாக லஞ்சம் வாங்குவார் என்று மூன்றாக பிரித்து அதற்கு ஏற்ப துறைகளை ஒதுக்குவார். அதாவது முதல்பிரிவில் இருப்பவர்கள் நிதி, சட்டம் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகளாக இருக்கும், மற்றவர்களுக்கு அரசு, மாநிலத்திற்கு பிரச்னை ஏற்படாத துறைகளாக இருக்கும். இதனால் அவர் ஆட்சியை சிறப்பாக நடத்த முடிந்தது.

அதேநேரத்தில் அமைச்சருக்கும், பதவி வழி அவரது செயலாளருக்கும் மோதல் ஏற்பட்டால், அதை தீர்ப்பதே முதல்வர், பிரதமருக்கு ஒரு வேளையாகிவிடும். உதாரணமாக முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத் மலானிக்கு, அவரது செயலாளராக இருந்த பெண்மணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மலானி அவருக்கு கோப்புகளை அனுப்பவே வேண்டாம் என்று உத்தரவிட்டார். அந்த அளவிற்கு மோதல் வெடித்தது.

அதிகாரிகள் நினைத்தால் அரசின் எந்த திட்டத்தையும் கவிழ்த்துவிட முடியும். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது ஒரே ஒரு 500, ஆயிரம் ரூபாய் வைத்திருந்தவன் அதை திரும்ப பெறுவதற்கு பட்டபாடு, அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். அதே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் பல 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கட்டுகட்டாக வாங்கி அடுக்கி கொள்ள முடிந்தது.  இதே போல நிதி துறையின் பலவிதமான ஊழல்களுக்கு பின்புலத்தில் அதிகாரிகள் தான் இருந்தனர்.

இன்னொருபுறம் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கடத்தி வருபவர்கள் சம்பந்தப்பட விமானநிலையத்தில் யார், எப்போது பணியாற்றுகிறார் என்பதை அறிந்து தான் விமானமே ஏறுவார்கள். எந்த விதமான சிக்கலும் இல்லாமல் அவர்கள் பொருள் நாட்டுக்குள் வந்து சேரும். பொருட்கள் என்று மட்டும் அல்லாமல் ஆட்களின் வருகையும் அப்படித்தான்.

எவ்வளவு கொடுங்கோல் ஆட்சியாக இருந்தாலும், அல்லது பொற்கால ஆட்சியாக இருந்தாலும் 5 ஆண்டுகள் தான்.அதன் பிறகு தேர்தல் முடிவுகள் அவர்களை துாக்கி எறிந்துவிடும். ஒரு சிலரைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள் 2 வது முறையாக ஆட்சியை பிடிப்பதே சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஒரு முறை எப்படியோ துறையில் நுழைந்துவிட்டால் பிறகு அவர் ஓய்வு பெறும் வரை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது, வேண்டுமானால் தற்காலிக வேலை நீக்கம் செய்யலாம். அதுவும் குறிப்பிட்ட காலம் வரைதான், இல்லாவிட்டால் காத்திருப்போர் பட்டியலில் வைத்து வேலையே கொடுக்காமல் சம்பளம் வழங்க வேண்டும்.

இதுவரையில் இது தான் நடை முறையில் இருந்தது. இப்போது அப்படி அல்ல, மத்திய அரசு உலுத்துப் போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. 2வது முறையாக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே வருமானவரித்துறையில் பாலியல் சீண்டல், லஞ்சம் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய 12 அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பபட்டுள்ளனர். 

இவர்கள் தான் பல முதலாளிகள் வருமான வரி ஏய்ப்பு செய்ய காரணமானவர்கள், கோடிக்கணக்கான ஊழல்களில் குற்றவாளிகள் வெளியேற காரணமானவர்கள், தவறானவர்களின் லாபியில் சிக்க தயாராக இருக்கும் விலாங்கு மீன்கள் இவர்கள். கடந்த முறை நிதி அமைச்சகத்தில் பல அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்று சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டினார். எதிர்கட்சிகள் வேறு விவகாரங்களில் நிதித்துறை மீது குற்றம்சாட்டியது.

அடுத்த கட்டமாக கலால் அதிகாரிகள் சிக்கி இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 15 பேர் கட்டாய ஓய்வில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆட்சி வந்த உடன் மாநில கவர்னர்கள், வெளிநாட்டு துாதர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள். அந்த இடத்தில் புதிய ஆட்சியாளர்கள் தங்களுக்கு ஏற்றவர்களை அமர்த்தி ஆட்சியில் சிக்கல் வாராமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த முறை கடந்த ஆட்சியே தொடர்வதால் அது போன்று எதுவும் நடக்கவில்லை. அதற்கு பதிலாக ஊழல் அதிகாரிகள் களை எடுக்கப்படுகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்று தருவதற்கு பதிலாக இப்படி கட்டாய ஓய்வில் அனுப்பி வைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுப்பபடுகிறது. அவர்கள் ஏதோ சில இடங்களில் தவறு செய்தாலும் பலவிதத்தில் நேர்மையாளர்களாக இருந்து இருக்கிறார்கள். நிரூபிக்க முடியாத வகையிலேயே தவறுகள் அரங்கேறி இருக்கின்றன. 

அதன் காரணமாக கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இந்தியாவே புரட்டிப் போட்ட 2 ஜி வழக்கில் கடைசியில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள் அல்லவா அதைப் போன்ற நிலை கூட இவர்கள் மீது தொடரப்படும் வழக்கில் ஏற்படலாம். அந்த சூழ்நிலை எழுந்தால் மத்திய அரசு மீது களங்கம் ஏற்படும். அதனால் தான் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை மாவட்ட அளவிற்கு கீழ் இறங்கி வர வேண்டும். அப்போது தான் ஊழல் ஒழியும். அமைச்சர்கள் நேர்மையாளர்களாக இருந்தால் தான் அது அரங்கேறும். இந்த நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தினால் கூட அதன் பலன் பெரிதாக தான் இருக்கும். இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பது இனி வரும் காலங்களில் புரிந்து விடும்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close