காங்கிரஸ் கட்சிக்கு பாலாலயம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Jul, 2019 06:47 pm
special-article-about-congress-party

சிதம்பரம், ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில் போன்றவற்றில், மூலவர் சிறப்பாக இருப்பார்கள். அவரை தரிசனம் செய்ய பக்தர்கள் படைஎடுத்து வருவார்கள். வயலுார், திருநாகேஸ்வரம், திருநள்ளாறு போன்ற கோயில்களில் மூலவர் ஏதோ ஒரு பெயரில் இருந்தாலும், பரிவாரங்களில் உள்ள தெய்வங்களை வழிபடத்தான், பக்தர்கள் வருவார்கள். 

ஒரு கோயில் என்றால் இப்படி மூலவரோ, பரிவார தெய்வமோ சக்தி, கீரத்தி மிக்கதாக இருக்க வேண்டும். அப்போது தான் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எந்த ஒரு கோயில் கும்பாபிஷேகம் செய்ய பாலாலயம் செய்யும் போது மூலவர், பரிவார தெய்வங்கள் சக்தி அனைத்தையும், கும்பத்திற்குள் அடைத்து விடுவார்கள்.

அப்போது அவர்கள் யாருக்கும் எந்த சக்தியும் இருக்காது. இந்த சூழ்நிலையில், கும்பாபிஷேகம் ஏதாவது ஒரு காரணத்தால் தட்டிப் போனால், காலப் போக்கில் தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் இது சோழர் கால கோயில், சேரன் கட்டியது என்று கோயில் வரலாறு கூறி டிக்கெட் வசூல் செய்வாரே தவிர்த்து, பக்தன் ஒருவனும் தலைவைத்து கூட படுக்க மாட்டான்.

இப்படி பட்ட பாலாலயம் செய்யும் சூழல் தான், இப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ராகுல் வயதை விட கூடுதல் அனுபவம் கொண்ட தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தலைமையின் கீழ் ராகுல் இருந்து அரசியல் படித்து இருக்க வேண்டும். அல்லது சோனியா திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தன் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததைப் போல சொல்லிக் கொடுத்து இருக்க வேண்டும். 

இன்றைக்கு திமுக தலைவராக ஸ்டாலின் இருப்பதற்கான பணி, அவர் துணைமுதல்வராக இருந்த காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. முதலில், தனது ஆதரவாளர்கள் சிலரை மாவட்ட செயலாளராக மாற்றி, அதன் பின்னர் தனது ஆதரவாளர்களை மட்டுமே மாவட்ட செயலாளராக அமர்த்தி, கருணாநிதியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தலைவர் பதவியை தன் வசமாக்கியவர் ஸ்டாலின். தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்டாலின் முதல்வர் என்ற நினைப்பு அவரை விட திமுக தொண்டர்கள், இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு தற்போது அதிகம் உள்ளது.

ஆனால், இது போன்ற எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் தலைவராக உருவெடுத்தவர் ராகுல். அதனால் தான் அவரால் தலைவர் பதவியில் சோபிக்க முடியவில்லை. சோனியாவின் உடல் நிலை சரியில்லாத நிலையில், தலைவர் பதவிக்கு வந்தவர் ராகுல். இம்சை அரசன் 23ம் புலிகேசியை வடிவேலு போல, அவர் தலைவராக இருந்தால் கூட ஆட்டுவித்தவர்கள் என்னவோ ராகுலை சுற்றி இருந்தவர்கள் தான். 

அதனால் தான் அவர் சுயத்தை இழந்து, ஒரு இடத்தில் காஷ்மீர் பிராமணன் வேடம், மற்றொரு மாநிலத்தில் சிறுபான்மையின பாதுகாவலர் வேடம் என்று நடிகர்களை தோற்கடிக்கும் விதமாக மாறி மாறி வேடம் கட்டியும் அவரை மக்கள் தலைவராக ஏற்கவில்லை. இதனால் தான், அவர் அமேதியில் தோற்றுப் போனார். பாரம்பரியமாக அவர் குடும்பத்திற்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்கள் கூட ராகுலுக்கு ஓட்டுப் போடவில்லை. 

இதில் பெற்ற பாடம் தான் ராகுலை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது. அதை விட, கட்சித் தலைவராக இருந்தாலும் கூட மூத்த, முதிய காங்கிரஸ் கட்சியின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று மறுக்க முடியவில்லை.

அதைவிட நாங்கள் வெற்றி பெற்றதால் ராகுல் தான் பிரதமர் என்று கூறிய ஸ்டாலினுக்கு இருந்த தைரியம் ராகுலுக்கு இல்லை. இதுவும் கூட காங்கிரஸ் வடமாநிலங்களில் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனால் தான் சூடுபட்ட பூனை பாலைக் கண்டாலே பாயந்து ஓடுவது போல, ராகுல் தலைவர் பதவியே வேண்டாம் என்று ஓடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

தேர்தல் நேரத்தில் மூத்த தலைவர்கள் கொடுத்த தொந்தரவுகள், இப்போது அவர்கள், நீங்கள் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, கிடா வெட்டுக்கு அழைக்கிறார்களோ என்று ராகுலை நினைக்க வைக்கிறது. இப்போது வெறும், 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. 

இதில் தமிழகத்தின் பங்கு அதிகம். தமிழகத்தில் கூட காங்கிரஸ் கட்சியை விட ஸ்டாலின் அரசியலில் நிலைக்க வேண்டும் என்ற திமுகவின் எண்ணம், ஏன் வெறி என்றே சொல்லாம் கூட்டணி அமைக்க காரணமாக இருந்தது. நாடுமுழுவதும், பாஜ எப்படி சுய பலத்தை விட, யதார்த்தமான கூட்டணி பலத்தை நம்பி கூட்டணி அமைத்ததோ, அதே போல திமுகவும் கூட்டணி அமைத்ததால் தான் வெற்றி பெற முடிந்தது. 

அதுபோன்ற கூட்டணியை, எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸ் மீது பற்று, பாசம் கொண்ட தொண்டர்களை தொடர்பு கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியை களத்தில் தெரிய வைக்க வேண்டும். இது போன்ற செயல்களை செய்து சாதிக்க வேண்டிய கட்டாயம், புதிய தலைவருக்கு முன்னால் உள்ள முதற்கடமை.  

இதற்கு ஏற்ப காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கு பதிலாக மோதிலால் ஓரா போன்ற பழம் பெரும் முதியவரை தலைவராக மாற்றினால், காங்கிரஸ் கட்சிக்கு பாலாலயம் செய்துவிட்டார்கள் என்று தான் கருத வேண்டி இருக்கும். தமிழகத்தில் மன்மோகன் சிங்,  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கேரளாவில் ஏகே அந்தோணி, போன்ற அனுபவசாலிகள், ம.பி.,யில் ஜோதிராத்திய சிந்தியா, ராஜஸ்தானில் சச்சின் பைலட் என இளைஞர்கள் கூட்டம் காங்கிரஸ் கட்சியில் நிரம்பி வழிகிறது. 

இவர்களில் யாரேணும் ஒருவரை செயல்தலைவராக அமர்த்தி, கட்சிப் பணியை முடிக்கிவிடலாம் அல்லது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைப் போல, இப்போது நீங்கள் தான் தலைவராக வர வேண்டும் என்று கத்தி கதறுகிற கூட்டத்தினரிடம் அவர்கள் பொறுப்பில் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டு தொண்டர்கள் விருப்பதிற்காக கட்சித் தலைவர் என்ற முள் கீரடத்தை ஏற்கிறேன் என்று நாடகத்தை முடிவுக்கு கொண்ட வரலாம். 

இதை செய்யலாமல், அனுபவத்தை மட்டுமே எண்ணி உடல் நிலை ஒத்துழைப்பு தராத நேரு குடும்பத்தின் புகழ் இல்லாத, ஒருவரை தலைவராக நியமனம் செய்வது, கோயிலுக்கு பாலாலயம் செய்வதை போன்றது தான். தலைவருக்கும் வேலை செய்ய உடல் நிலை இடம் கொடுக்காது, ராகுலுக்கும் மனநிலை இடம் கொடுக்காது. அப்புறம் என்ன வழிபாடு இல்லாத கோயில் என்ற வகை போல, காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும். 

அதற்கு பதிலாக, காந்தியின் விருப்பதின் போல கட்சியை காலி செய்து விடலாம். அது படிப்படியாக கட்சியை கொல்வதை விட, ஒரேடியாக முடிந்துவிடும். மம்தா போல, பலரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி சிறப்பாக செயல்படுவார். இது போன்று ஏதாவது நடந்தால், பாஜகவிற்கு தான் திண்டாட்டம். 

திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சி போன்ற மாநில கட்சிகளுடன் போட்டியிட வேண்டும். தேச பக்தர்களுக்கும், இந்தியாவை ஒன்றாக இணைக்கும் பல விஷயங்களில முக்கியமான காங்கிரஸ் கட்சியை இழந்துவிடுவார்கள். காலம் எதைக் காட்டும் என்று காத்திருப்பது தான் நம்மால் இப்போது செய்ய முடியும்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close