"அரசியலை விட தேசமே முக்கியம்" - 'வாஜ்பாய்' எனும் அரசியல் சகாப்தம்!

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 09:24 am
atal-bihari-vajpayee-life-history

அரசியல் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் அடல் பிஹாரி வாஜ்பாய். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். அவரது இளைமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் ஆற்றிய முக்கிய சாதனைகளின் சுருக்கமான தொகுப்பு..

► மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924 டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் வாஜ்பாய். இவரது பெற்றோர் கிருஷ்ணா தேவி - கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய். இவரது தந்தை, பள்ளி ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். வாஜ்பாயும் இளமையிலே கவித்திறமை பெற்றவர். 

► குவாலியரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், டிஏவி கல்லூரியில் சட்டம் படித்தார். தனது தந்தையும் சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தெரிவிக்கவே, இருவரும் ஒன்றாக இணைந்து ஒரே கல்லூரியில்  சட்டம் படித்தது தான் ஆச்சரியமான ஒன்று.

► உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லக்ஷ்மிபாய் கல்லூரியில் (முன்னதாக விக்டோரியா கல்லூரி) அவர் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப்படங்களிலும் அவர் பட்டம் பெற்றுள்ளார்.

► ஆர்.எஸ்.எஸ்-இல் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, 1939ல் அந்த இயக்கத்தில் இணைந்தார். 1940-44 காலகட்டங்களில் அங்கு முழுவதுமாக பயிற்சி பெற்று 1947 முதல் ஆர்.எஸ்.எஸ்-இல் தனது முழு சேவையை ஆரம்பித்தார். பின்னர் ஜனதா கட்சியில் இணைந்து பங்காற்றினார். 

► வாஜ்பாயின் வியத்தகு பேச்சாற்றலைக்கண்டு, 'வருங்காலத்தில் நீ பிரதமராவாய்' என முன்னாள் பிரதமர் நேருவே அவரை ஒருமுறை பாராட்டியுள்ளார்.  

► 1975ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, போராட்டம் நடத்தியதன் காரணமாக வாஜ்பாய் சில ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர், மன்னிப்பு கேட்டு இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியதன் காரணமாக விடுவிக்கப்பட்டார். 

► 1977ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அப்போது முதல் முறையாக வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

► 1979ல் மொரார்ஜி தேசாய் தனது பிரதமர் பதவியை விட்டு விலகிய பிறகு, ஜனதா கட்சியின் நிலைமை மோசமானது. வாஜ்பாய், எல்.கே.அத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள் ஒன்று சேர்ந்து 1980ல் பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கினர். பா.ஜ.கவின் முதல் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார் வாஜ்பாய். 

► நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 9 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

► வாஜ்பாய் மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996ம் ஆண்டு மே 16ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் வெறும் 13 நாட்கள் பிரதமராக இருக்க முடிந்தது. பின்னர் 1998 மார்ச் மாதம் முதல் 1999 ஜூலை வரை 13 மாதங்கள் பிரதமராக பதவி வகித்தார். தொடர்ந்து 1999 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் 2004 வரை பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சி சாராத ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவி வகித்த பெருமை வாஜ்பாயையே சாரும். 

► இவர் குறுகிய காலமே பிரதமராக இருந்திருந்தாலும், அவரது சாதனைகள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை அடையாளம் காட்டியதாகவே இருந்தது. 

► வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தான் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்துல்கலாம் தலைமையில் நடந்த  சோதனையில் வெற்றி கண்டு உலகிற்கு இந்தியாவின் பலத்தை நிரூபித்தது அனைவரும் அறிந்ததே. 

► இந்தியா - பாகிஸ்தான் இடையே முதல் முதலாக பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது வாஜ்பாய் தான். 1999ல் டெல்லி - லாகூர் இடையே சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2001ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் சேவை நிறுத்தப்பட்டது. 

► டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் 'தங்க நாற்கர சாலைத் திட்டம்' கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்டது.

► எதிர்கட்சிகள் என்று கூட பாராமல் அவர்களோடும் சிறந்த நட்பு பாராட்டியவர் வாஜ்பாய். அரசியல் நாகரிகத்தை கடைசி வரை கடைபிடித்தவர். 

► ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர்.

► கடந்த 2009ம் ஆண்டு வரை அரசியலில் முழு ஈடுபாட்டுடன் இருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அவருக்கு 20 அறுவை சிகிச்சைகள் வரை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

► கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது. அவரது பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி, பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினத்தை 'சிறந்த நிர்வாக தினமாக' (Good Governance Day) கொண்டாட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

► எவ்வளவோ சாதனைகள் புரிந்திருந்தாலும் வாஜ்பாய் தனது சாதனைகள் பற்றி அவர் எப்போதும் பேசியதில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

► வாஜ்பாய் தனது வாழ்நாள் முழுவதும் துணையின்றியே வாழ்ந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை. நமீதா பட்டாச்சார்யா என்பவரை தத்தெடுத்து  தனது மகளாக வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

► வாஜ்பாய் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். 2018 ஆகஸ்ட் 16ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இன்று அவரது முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

► வாஜ்பாய் அவர்கள் இவ்வுலகத்தை விட்டு மறைந்தாலும், அவரது பணிகள் இந்திய வரலாற்றில் என்றும் பேசப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close