தாம்பூலம் முதல் தாம்பத்தியம் வரை... வெற்றிலையின் அசத்தல் பலன்கள் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 07:09 pm

amazing-medicinal-benefits-of-betel-leaf

`அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே', ‘வேண்டாத உறவுக்கு வெறும் வெற்றிலை’- வெற்றிலை பற்றிய பழமொழிகள் இவ்வாறு இருக்க  `வெற்றிலை சாப்பிட்டால் மாடு முட்டும்' என்று சிறு வயதுப் பிள்ளைகளை பயங்காட்டி வைப்பதும் ஒருபுறம் இருக்கிறது. எதுஎப்படியோ வெற்றிலைக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு. 

வெற்றிலை... Piper betle என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதற்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்ற பல பெயர்கள் உள்ளன. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என்ற வகைகள் உள்ளன.

வெற்றிலையில் அதன் இலையும் வேறும் மருத்துவப்பலன் தரக்கூடியது. கொடி வகையைச் சேர்ந்த இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவு விளைகிறது. நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களில் அகத்தி மரங்களில் வெற்றிலையை படர விடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்திலோ கிளுவை எனப்படும் மரங்களை நட்டு அதில் இதன் கொடியை படரச் செய்வார்கள். சில இடங்களில் மூங்கில் கம்புகளையும் இதற்குப் பயன்படுத்துவார்கள்.

கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வீரியமிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் உள்ளது. வெப்பம் உண்டாக்கக்கூடியது. வெற்றிலையை மருந்துக்காகப் பயன்படுத்தும்போது இளம் வெற்றிலையாக இருப்பது நல்லது. வெற்றிலையின் காம்பு, நடு நரம்புகளை நீக்கிவிட்டு பயன்படுத்தினால் மருத்துவக்குணங்கள் முழுமையாகக் கிடைக்கும்.  வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உணவுக்குப்பின் உண்டு வந்தால் வாத, பித்த, சிலேத்துமங்களின் (திட, திரவ, நீராவி) ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தி அவற்றால் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அதனால்தான் மங்கல நிகழ்ச்சிகளில் வெற்றிலை நிச்சயம் இடம்பெறுகிறது.

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால், உமிழ்நீர் சுரப்பதுடன் பசி உண்டாகும்; பால் சுரக்கும். நாடி நரம்புகளை உரமாக்குவதுடன் காமத்தைத் தூண்டும். இது இயற்கை தந்த அற்புதம். ஆகவே அடிக்கடி வெற்றிலை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைபாடு நீங்கும். வாய்நாற்றம் நீங்கும். இரண்டு வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய் ஒரு அரிசி எடை, ஜாதிப்பத்திரி ஒரு அரிசி எடை, கஸ்தூரி ஒரு கடுகு அளவு, ஏலக்காய் ஒன்று, லவங்கம் ஒன்று, பாதாம் அரை பருப்பு, முந்திரி அரை பருப்பு, திராட்சை 4, குல்கந்து கால் டீஸ்பூன் சேர்த்து இரவு உணவுக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஊறும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரித்து தாம்பத்யம் சிறக்கும். வெற்றிலையுடன் கால் அரிசி அளவு கோரோசனையை சேர்த்துச் சாப்பிட்டால் அது தாம்பத்யம் சிறக்க உதவும். ஆண், பெண் இருவரும் இதைச் சாப்பிடலாம். இதன்மூலம்  இது ஓர் இயற்கை வயாகராவாக திகழ்கிறது. 

வெற்றிலைச் சாறுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகி வந்தால் சிறுநீர் நன்றாகப் பிரியும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி மார்பில் கட்டி வந்தால் மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். இலைச்சாறுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வரக்கூடிய சளி, இருமல் போன்றவை குணமாகும். 

வெற்றிலையை தீயில் வாட்டி அதனுள் 5 துளசி இலைகளை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாதக் குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டுகள் வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி மார்பில் பற்று போட்டு வந்தால் சளி குறையும். விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால் வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி போன்றவை குணமாகும். 

வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இதை இரவில் கட்டுவது நல்லது.

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.