சூப்பர்... ப்ளு... பிளட் மூன்! இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க...

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 31 Jan, 2018 04:53 pm

இன்றைக்குச் சந்திரகிரகணம்... அது மட்டுமல்ல சூப்பர் மூன் (பூமிக்கு அருகில் நிலவு வரும் நிகழ்வு), ப்ளு மூன் (ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி) என்று மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே நாளில் ஏற்பட உள்ளது. இதனால், இந்தச் சந்திர கிரணத்தைக் காண உலகம் முழுக்க விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

முதலில் அறிவியல் பூர்வமான சில உண்மைகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம். சந்திர கிரகணம் என்பது முழு நிலவும் பூமியின் நிழலில் மறைந்து வெளிவரும் நிகழ்வாகும். சூரிய ஒளி பூமியின் மீது பட்டு ஒரு V வடிவத்தில் இருள் பகுதியை ஏற்படுத்துகிறது. இந்த நிழல் பகுதிக்கு உம்ரா என்று பெயர். இந்த இடத்துக்குள் நிலவு வந்தால் முழுச் சந்திர கிரகணம் ஏற்படும். அதுவே, நிழல் பகுதிக்கு வெளியே பென்னும்ரா என்றும் பகுதியில் நிலவு இருந்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படும்.

இந்த முறை நிலவு உம்ரா பகுதிக்குள்தான் வருகிறது. எனவே, சந்திரன் முழுவதும் மறையும் நிகழ்வை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். இந்தியா, மத்திய கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இதை முழுமையாகக் காணலாம். இந்தியாவில், நாளை மாலை 5.18க்கு தொடங்கும் கிரகணம் இரவு 8.41-க்கு முடிவடைகிறது. மொத்தம் 77 நிமிடங்கள் இந்தச் சந்திர கிரகணம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும். பொதுவாக ஒரு வருடத்தில் 2 - 5 சூரிய கிரகணமும், 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். மூன்று கிரகங்களும் நேர்கோட்டில் சந்திக்கும்போது, பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி, தூரத்தைப் பொருத்து மூன்று வகையான சந்திரகிரகணம் ஏற்படுகிறது. அவை பூரணச் சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பூமியின் நிழல் நிலவுக்குள் விழும் சந்திரகிரகணம்.

சந்திரகிரகணம் 40 நிமிடங்களில் இருந்து மூன்று மணி நேரம் வரை நிகழலாம். 2000ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட சந்திரகிரகணம் 106 நிமிடங்கள் 25 விநாடிகள் நீடித்தது. 1859ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி ஏற்பட்ட சந்திர கிரகணத்தின் போது வெறும் மூன்று விநாடிகள் மட்டுமே நிலவு மறைக்கப்பட்டது. 4753ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி ஏற்படப் போகும் சந்திரகிரகணம் தான் மிக நீண்ட சந்திர கிரகணமாக இருக்கப்போகிறது. அந்த ஆண்டு 106 நிமிடங்கள் 35 விநாடிகள் சந்திரகிரகணம் நிகழப்போகிறது.

இந்து சமய நம்பிக்கைப்படி, சந்திரகிரகணம் ஏற்பட ராகு தான் காரணம். சந்திர கிரகணத்தின்போது சமைக்கப்படும் உணவு தூய்மையற்றதாகக் கருதப்படும். கோயில் நடைகள் அடைக்கப்படும். சந்திரகிரகணத்தைப் பார்ப்பதால் ஏதுவும் நிகழாது. வெறும் கண்களாலேயே காணலாம். சூரிய கிரகணம் போலக் கண்களைப் பாதுகாக்க பிரத்தியேக கருவிகள் எதுவும் தேவையில்லை. பைனாக்குலர் வைத்துப் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

அடுத்தது சூப்பர் மூன்... இந்த மாதம் நிகழும் இரண்டாவது சூப்பர் மூன் இது. ஜனவரி 1ம் தேதி சூப்பர் மூன் ஏற்பட்டது. நாளை நிகழும் சூப்பர் மூன் போது நிலவு பூமியில் இருந்து 3 லட்சத்து 58 ஆயிரத்து 995 கி.மீ தொலைவில் இருக்கும்.

பூமியானது நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல், நிலவும் நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்றுகிறது. நிலவு தன் நீள் வட்டப்பாதையின் பூமிக்கு மிகக் குறைந்த தூரத்துக்கு வரும் நிகழ்வைத்தான் சூப்பர் மூன் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, வழக்கத்தை விட நிலவு பெரியதாகத் தெரியும்.

இன்றைக்கு வழக்கத்தை விட நிலவு 10 - 14 சதவிகிதம் பெரியதாகத் தெரியுமாம். அதேபோல், வழக்கத்தை விட 30 சதவிகிதம் கூடுதல் வெளிச்சத்துடன் இருக்குமாம். அடுத்தச் சூப்பர் மூன் 2019 ஜனவரியில் தான் ஏற்படும். 1943க்குப் பிறகு 2016ம் ஆண்டுப் பூமிக்கு மிக அருகில் நிலவு வந்தது. இதன்பிறகு 2034ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதிதான் பூமிக்கு மிக அருகில் நிலவு வர உள்ளது.

ப்ளு மூன் என்றால் பலரும் நிலவு நீல நிறமாகத் தெரியும் என்று நினைக்கின்றனர். உண்மையில், ஒரே மாதத்தில் ஏற்படக் கூடிய இரண்டு முழு நிலவு நிகழ்வைத்தான் நீல நிலவு என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். அதாவது, முழு நிலவு முதல் நிலவு தேய்பிறையாக அமாவாசை வருகிறது. அதன்பிறகு வளர்பிறையாக முழு நிலவு ஏற்படுகிறது. இதற்கு 29.5 நாட்கள் ஆகிறது.

அதனால், ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி, ஒரு அமாவாசை வருவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால், இரண்டு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருவது உண்டு. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி பௌர்ணமி வந்தது. தற்போது, 31ம் தேதி மீண்டும் பௌர்ணமி வருகிறது.

இதன் பிறகு வருகிற மார்ச் மாதம் 1ம் தேதியும் 31ம் தேதியும் முழு நிலவு ஏற்படுகிறது. அடுத்த ப்ளு முனைக் காண 19 வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம். ஆம், 2037ம் ஆண்டுதான் இதுபோல ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருகிறதாம். கடைசியாக, சந்திரகிரகணம், ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி, சூப்பர் மூன் என மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடந்தது 1866ம் ஆண்டிலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.