பூமிக்கு ஆபத்தான விண்கற்களை தகர்க்க நாசாவின் மெகா விண்வெளி ஓடம்!

  SRK   | Last Modified : 19 Mar, 2018 01:55 pm


பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கற்களை உடைக்க, ஹேமர் என்ற பெயரில் நவீன விண்வெளி ஓடத்தை தயாரிக்க நாசா திட்டமிட்டு வருகிறது. 

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான விண்கற்கள் வந்து விழுகின்றன. இவையனைத்தும் மிகச்சிறியதாக இருப்பதால், பூமியின் மேற்பரப்பை வந்தடைவதற்குள் எரிந்து சாம்பலாகி விடுகின்றன.

ஆனால், பூமியை அழிக்கும்  சக்தி வாய்ந்த ஆபத்தான பெரிய விண்கற்களும் பல உள்ளன. இதுபோன்ற கற்கள், வந்து விழுந்தால், பூமியை முற்றிலும் அழித்துவிட வாய்ப்புள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்ற விண்கல் பூமியில் விழுந்ததால் தான் டைனோசர் இனமே அழிந்ததாக பல விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. 

நம் சூரிய குடும்பத்தில் உள்ளவற்றில் குறிப்பிடத்தக்கது பென்னு என்ற விண்கல். சுமார் 1600 அடி அகலம் கொண்ட பென்னு, ஒரு மணி நேரத்திற்கு 63,000 மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. பூமியில் இருந்து 5.4 கோடி மைல்கள் தொலைவில் அது இருப்பதனால், எந்த உடனடி ஆபத்தும் கிடையாது. 

2135ம் ஆண்டு, இந்த விண்கல் பூமியை நெருங்கி வருமாம். அப்போது அது பூமியை தாக்க மிகச்சிறிய (1 / 2700) வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.  அப்படி விழுந்தால், அதன் தாக்கம் 1450 மெகாடன் டி.என்.டி வெடிகுண்டுகள், அதாவது, உலகில் இதுவரை சோதனை செய்யப்பட்ட அத்தனை அணு ஆயுதங்களை சேர்த்து வெடிக்கவைப்பதை விடவும் பயங்கரமாக இருக்குமாம்.

இதுபோன்ற சமயத்தில் விண்கற்களை தடுப்பது குறித்து நாசா வெகு நாட்களாக திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், ஹேமர் (Hypervelocity Asteroid Mitigation Mission for Emergency Response) என்ற பெயரில் ஒரு விண்வெளி ஓடத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த ஹேமரால், விண்வெளியில் உள்ள ஆபத்தான விண்கற்களை பாதை மாற்றி விடவோ அல்லது முற்றிலும் தகர்த்து சிறிய துண்டுகளாக உடைக்கவோ முடியுமாம்.

சிறிய விண்கல்லை, ஹேமர் ஓடத்தில் உள்ள 8.8 டன் எடை கொண்ட 'இம்பாக்டர்' என்ற ஆயுதத்தால் தாக்கி உடைத்து விட முடியுமாம். பெரிய விண்கற்களை, அணு ஆயுதங்களின் உதவியோடு ஹேமர் தகர்க்குமாம். 


பென்னு விண்கல்லை ஆய்வு செய்ய, விஞ்ஞானிகள் OSIRIS-REx என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளனர். இந்த செயற்கைகோள், பென்னு-வில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு 2023ம் ஆண்டு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அந்த விண்கல்லை பற்றிய மேலும் பல விவரங்கள் நமக்கு தெரிய வரும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.