அமெரிக்காவுக்கே சவால்விடும் ராக்கெட்... இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 18 Mar, 2018 06:13 pm

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத் தலைமுறை ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ராக்கெட் திறன் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மத்திய விண்வெளி ஆய்வுத் துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர் சிங் விளக்கம் அளித்தார். அப்போது, "இந்தியாவால் தற்போது நான்கு டன் வரையிலான செயற்கைக்கோள்களை, புவிக்கு இணையான வட்டப் பாதையில் விண்ணில் செலுத்த முடியும். ஆனால், நம்மைக் காட்டிலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஆற்றல் மற்ற நாடுகளிடம் உள்ளது. இதனால், இஸ்ரோவும் 16 டன் எடை வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது" என்றார்.

இந்தியாவிடம் தற்போது பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என மூன்றுவிதமான ராக்கெட்கள் உள்ளன. பி.எஸ்.எல்.வி என்பது துருவப் பாதைக்கு ஏற்ப பயணிக்கும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த உதவும் ராக்கெட். இதன்மூலம், 1.75 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை சூரிய வட்டப் பாதையில் 600 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்த முடியும். பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம்தான் நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் செயற்கைக்கோளை இந்தியா அனுப்பியது.

ஜி.எஸ்.எல்.வி என்பது புவிக்கு இணையான வட்டப் பாதையில் பயணிக்கும் தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது. இதன் மூலம் 2.2 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை மட்டும்தான் விண்ணில் செலுத்த முடியும். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாகத்தான் நிலவுக்குச் செல்லும் இரண்டாவது பயணத்துக்கான கலன்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3, ஜி.எஸ்.எல்.வி-யின் மேம்படுத்தப்பட்ட வடிவம். இதன்மூலம் நான்கு டன் வரை எடை கொண்ட செயற்கைக்கோளைப் புவிக்கு இணையான வட்டப் பாதையில் நிலைநிறுத்தலாம்.

இந்தியா மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வெளிநாட்டில் இருந்துதான் விண்ணுக்கு அனுப்புகிறது. வழக்கமாக ஏரியான் 5 என்ற ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. இந்த ராக்கெட் இரண்டு தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோளைக் கூடச் சர்வசாதாரணமாக நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டது.

அமெரிக்கா உள்படப் பல நாடுகள் தங்கள் சிறிய ரகச் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப இந்தியாவின் உதவியை நாடுகின்றன. இதனால், செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. 16 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்பும் ஆற்றல் மட்டும் இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால், எல்லா நாடுகளும் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் நிலை ஏற்படும்.

தற்போது 16 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்ப உதவும் ராக்கெட் தயாரிப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் தயாரிக்கும் பணியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அதிகபட்சமாக அமெரிக்க ராக்கெட் மூலம் 14 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப முடியும். சீனாவால் 13 டன் எடை கொண்ட ராக்கெட்டையும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 10.5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளையும், ரஷ்யாவால் 6.25 டன் எடை கொண்ட செயற்கைக் கோளையும் விண்ணில் செலுத்தலாம்.

இதுதவிர, ஜப்பானிடமும் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தும் தொழில்நுட்பம், ஆற்றல் உள்ளது. ஜப்பானால் 8 டன் வரையிலான செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப முடியும். சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 26.7 டன் எடைக்கொண்ட பொருளை விண்ணுக்கு அனுப்பியது. இதுதான், உலகின் அதிக எடைக்கொண்ட சரக்கை சுமந்து செல்லும் ராக்கெட் ஆகும். இந்தியா 16 டன் சுமையை சுமந்து செல்லும் ராக்கெட்டை வடிவமைத்துவிட்டால், யார் கண்டது நாளை மிகப்பெரிய செயற்கைக்கோளை செலுத்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நம் ஊருக்கு வர ஆரம்பித்துவிடுவார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close