சென்று வாருங்கள் பார்லோ! - ஒரு நெட்டிசனின் இரங்கற்பா

  சைபர்சிம்மன்   | Last Modified : 11 Jul, 2018 02:07 pm

இணையம் அதன் அபிமான பிள்ளைகளில் ஒருவரை இழந்திருக்கிறது. எனினும் அது கண்ணீர் வடிக்கவில்லை, துயரமும் கொள்ளவில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறது. நெகிழ்ச்சியோடு அவரை நினைத்துப் பார்க்கிறது. இனி எப்போதும் நினைவில் வைத்திருக்கவும் செய்யும். ஏனெனில் மறைந்த ஜான் பெரி பார்லோ இணையத்தின் ஆன்மாவை உணர்ந்தவர், அது காக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தவர். எல்லையில்லான புதிய உலகாக உருவெடுத்த சைபர்வெளியின் சுதந்திரத் தன்மையை பிரகடனம் செய்தவர். அதற்காக இடைவெளி இல்லாமல் போராடி வந்தவர். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இணைய சுதந்திரத்தின் மீது நடக்கக் கூடிய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு உந்துசக்தியாக இருக்கக் கூடியவர். 

இணைய முன்னோடி, பாடலாசிரியர், இணைய சுதந்திரத்தை காப்பதற்கான அமைப்பின் நிறுவனர், டிஜிட்டல் உரிமைகள் போராளி என்றெல்லாம் அறியப்படும் பார்லோ, தனது பன்முக தன்மைக்கு ஏற்ப இணைய நலனுக்காக பலவிதங்களில் பங்களிப்பு செலுத்தினாலும், 1996-ம் ஆண்டு அவர் வெளியிட்ட சைபர் சுதந்தர பிரகடனமே இணைய உலகிற்கான அவரது மிகப்பெரிய கொடையாக இருக்கிறது.

இணைய சுதந்திரத்திற்கான ஈடு இணை இல்லாத ஆவணமாக கருதப்படும் இந்த பிரகடனத்தை முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும் எனில் மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு நிகரானதாக இதைக் கொள்ளலாம். இதன் உள்ளடக்கம் இரண்டு பக்கங்களில் அடங்கிவிடக்கூடியது என்றாலும், இதன் வீச்சும் சாரம்சமும் இணையத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரையும் எழுச்சி பெறச்செய்யக் கூடியது. (சைபர்வெளி சுதந்திரத்திற்கான பிரகடனத்தின் தமிழாக்கம் இந்தக் கட்டுரையின் கீழ்ப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.)

சைபர்வெளியின் சுதந்தர பிரகடனம்

பார்லோ 1996-ம் ஆண்டு இந்தப் பிரகடனத்தை ஒரு இமெயிலாக உருவாக்கி உலகிற்கு அளித்தார். சுவிட்சலாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட பார்லோ மிகவும் உணர்வெழுச்சியான மனநிலையில் இந்த பிரகடனத்தை வெளியிட்டார். 

சைபர்வெளி என குறிப்பிடப்படும் இணைய உலகில் அரசுகளுக்கு வேலையில்லை, எனவே அவை இந்த உலகில் அதிகார மூக்கை நுழைக்காமல் வெளியேற வேண்டும் என்பதுதான் அவரது இந்த பிரகடனத்தின் சாரம்சம். 'தொழில் உலகின் அரசுகளே, உள்ளத்தின் புதிய இல்லமான சைபர்வெளியில் இருந்து வரும் நான், கடந்த காலத்தை சேர்ந்த உங்களை விலகி இருக்குமாறு கோருகிறேன்' என மிக கம்பீரமாக இந்தப் பிரகடத்தை அவர் துவங்குகிறார்.

தொடர்ந்து இணையவெளி என்பது எப்படி இதுவரை அறியப்பட்ட நிஜ உலகில் இருந்து வேறுபட்டது என்றும், சுதந்திரத் தன்மையே அதன் ஆன்மாவாக இருக்கிறது என்றும், அதில் அரசுகளின் அதிகாரத்திற்கும், கட்டுப்பாடுகளுக்கும் இடமில்லை என்றும் அறிவிக்கிறார். 

எங்கள் மத்தியில் உங்களை வரவேற்கவில்லை, உங்கள் இறையாண்மைக்கு இங்கு இடமும் இல்லை என்று அறைகூவல் விடுப்பவர், அரசுகளின் அதிகார தலையீட்டால் இணைய உலகில் ஏற்படக்கூடிய இடர்களை சுட்டிக்காட்டி, எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார். சுதந்திரத்தையும், மனித தன்மையையும், தடையில்லா உரையாடல் மற்றும் கருத்துப் பகிர்வையுமே அவர் இணைய உலகின் நியதிகளாக முன்வைக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், புதிதாக உருவாகி வலுப்பெற்றுக்கொண்டிருந்த இணையவெளி, அரசுகளின் தலையீட்டிற்கு அப்பாற்பட்டதாக, அதன் அதிகார கரை படியாததாக, கூட்டு முயற்சியின் நியதிகளால் சுயமாக நிர்வகிக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இணைய சமநிலைக்கு எதிரான போராட்டத்தில் துவங்கி, தணிக்கை மற்றும் கண்காணிப்பு முயற்சி என எல்லா வகையான அதிகார வர்க்க செயல்களுக்கும் எதிராக இணைய சுதந்திர ஆதாரவாளர்களின் தாரக மந்திரமாக அமைந்திருப்பது பார்லோவின் இந்த அறைகூவலே.

பார்லோ இதை, இணையம் என்பது அப்போது தான் வெகுஜன உலகில் அறிமுகத் துவங்கியிருந்த 1996-ல் இந்தப் பிரகடனத்தை எழுதினார் என்பது ஆச்சர்யமானது. அதன்பிறகு இணையம் எத்தனையோ மாற்றங்களை சந்தித்து வெகுவாக மாறியும் இருக்கிறது. ஆனால் அதன் அடிப்படைகள் மாறவில்லை. அதன் மீதான தாக்குதலும் மாறவில்லை. அதைக் காப்பதற்கான தேவையும் மாறிவிடவில்லை. இத்தகையப் பிரகடனத்தை உருவாக்கியது பார்லோவின் தொலைநோக்கிற்கு சான்றாக இருக்கிறது.

அப்போது டேவோசில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தாங்கள் பயன்படுத்தாத மற்றும் தங்களுக்குப் புரியாத இணைய வெளியை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்து வெகுண்டெழுந்தே பார்லோ இந்தப் பிரகடனத்தை உருவாக்கியதாக அறிய முடிகிறது. 

இணையத்தில் ஆபாசமான உள்ளடக்கத்தை பகிர்வதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டத்தில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட முடிவு செய்திருந்ததும், அவரை கடும் சினம் கொள்ள வைத்திருந்தது. தங்களுக்கான நியாயமான விதிகள் கொண்ட இணைய உலகிற்குள் அரசுகளின் ஊடுருவலாக இதைக் கருதிய பார்லோ, 'எங்கள் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என குறுப்பிட்டிருந்தார். அதிகார வரம்புகளுக்கு உட்படாத எல்லையில்லா வெளியாக இணையத்தை அவர் கருதினார். நிஜ உலகின் அநீதிகளும் அடக்குமுறைகளும் இல்லாத சமத்துவமான உலகமாக சைபர்வெளி உருவாகும் என அவர் நம்பினார். இந்த நம்பிக்கையால் உண்டான அவரது குமுறல்களை பிரகடனத்தில் உணரலாம்.

பார்லோவின் பயணம்

அமெரிக்காவில் பண்ணை பகுதியில் 1947-ம் ஆண்டு பிறந்த பார்லோ இயற்கையோடு இணைந்து வளர்ந்ததோடு கலை உள்ளத்தையும் கொண்டிருந்தார். 'கிரேட்புல் டெட்' எனும் இசைக்குழுவில் பாடலாசிரியராக இருந்தவர், இணையத்தின் ஆரம்ப கால விவாத சமூகமான வெல் குழுவில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இந்த அனுபவம் தந்த சுதந்திர உணர்வே சைபர்வெளியின் தனித்தன்மை மீது அவரை நம்பிக்கை கொள்ள வைத்தது.

இணைய சுதந்திரம் காப்பதற்காக அவர் உருவாக்கிய எலக்ட்ரானிக் பிராண்டியர் பவுண்டேஷன் அமைப்பு இணையம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுத்தும், இணையம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆதராவாக செயல்படுவதையும் தனது பணியாக கொண்டிருக்கிறது.

"நாம் இன்று அறிந்திருக்கும், அனுபவிக்கும் இணையத்தின் பெரும் பகுதி பார்லோவின் தொலைநோக்கு மற்றும் தலைமை பண்பால் அமைந்திருக்கிறது என்பது மிகையல்ல" என பார்லோவின் மறைவு குறித்து இந்த அமைப்பின் இயக்குனர் சிண்டி கோஹன் குறிப்பிட்டிருக்கிறார். இது 100 சதவீதம் என்பதை பார்லோவின் பிரகடனத்தை வாசிக்கும்போது உணரலாம்.

இணைய உலகம் தலை வணங்கி மரியாதை செலுத்தும் அந்த முன்னோடி மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சைபர்வெளி சுதந்திரத்திற்கான பிரகடனத்தை தமிழாக்கத்தை வழங்குகிறேன்.

 

சைபர்வெளியின் சுதந்திர பிரகடனம்: ஜான் பெரி பார்லோ

இரும்பு, சதையால் ஆன களைப்போன ஜாம்பவான்களான, தொழில் உலகின் அரசுகளே, உள்ளத்தின் புதிய இல்லமான சைபர்வெளியில் இருந்து வருபவன் நான். எதிர்காலத்தின் சார்பாக, கடந்த காலத்தை சேர்ந்த உங்களை விலகி இருக்குமாறு கோருகிறேன். எங்கள் மத்தியில் உங்களுக்கு இடமில்லை. நாங்கள் கூடும் வெளியில் உங்களுக்கு இறையாண்மை இல்லை. 

எங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கிடையாது, இத்தகைய அரசுக்கான வாய்ப்பும் இல்லை, எனவே எப்போதும் சுதந்திரம் தனக்காக பேசும் அதிகாரத்தை தவிர வேறு எந்த அதிகாரத்துடனும் உங்களுடன் பேசவில்லை. நாங்கள் உருவாக்க விரும்பும் உலகாலவிய சமூக வெளி, நீங்கள் எங்கள் மீது திணிக்க விரும்பும் எதேச்சதிகாரத்தில் இருந்து இயல்பிலேயே விடுபட்டது என அறிவிக்கிறேன். எங்களை ஆட்சி செய்யும் அதிகாரமோ, நாங்கள் உண்மையில் அஞ்சக்கூடிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான வழிமுறையோ உங்களிடம் இல்லை.

அரசுகள் தங்களுக்கான அதிகாரத்தை, ஆளப்படுபவர்களின் ஒப்புதலில் இருந்து பெறுகின்றன. நீங்கள் எங்களை அழைக்கவும் இல்லை, வரவேற்கவும் இல்லை. நாங்கள் உங்களை அழைக்கவும் இல்லை. உங்களுக்கு எங்களை தெரியாது. எங்கள் உலகையும் நீங்கள் அறியமாட்டீர்கள். சைபர்வெளி என்பது உங்கள் எல்லைகளுக்கு இல்லை. அதை ஏதோ ஒரு பொதுக் கட்டுமானத் திட்டம் போல உருவாக்க முடியும் என நினைக்க வேண்டாம். உங்களால் அது முடியாது. அது இயற்கையின் செயல்பாடு மற்றும் எங்கள் கூட்டு செயல்பாடால் தானாக வளர்வது. 

எங்களுடைய மகத்தான, ஒன்றுகூடும் உரையாடலில் நீங்கள் பங்கேற்கவில்லை, எங்கள் சந்தையின் செல்வத்தையும் உருவாக்கவில்லை. உங்கள் திணிப்புகள் மூலம் உண்டாகக் கூடிய ஒழுங்கைவிட, அதிக ஒழுங்கை ஏற்கெனவே எங்கள் சமூகத்திற்கு வழங்கியிருக்கும் எழுதப்படாத நெறிமுறைகள், எங்கள் அறம் அல்லது எங்கள் கலாச்சாரம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. 

நீங்கள் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் எங்கள் மத்தியில் இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். எங்கள் எல்லைக்குள் நுழைவதற்கான காரணமாக இதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். இவற்றில் பல பிரச்சனைகள் இல்லவே இல்லை. எங்கு உண்மையான முரண்கள் இருக்கின்றனவோ, எங்கு தவறுகள் உள்ளனவோ, அவற்றை கண்டறிந்து எங்கள் வழியில் தீர்வு காண்போம். எங்களுக்கான சமூக ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதற்கான ஆளுகை, உங்கள் உலகப்படி அல்லாமல் எங்கள் உலக நிலைக்கு ஏற்ப அமையும். எங்கள் உலகம் வேறுபட்டது. 

சைபர்வெளி, பரிவர்த்தனைகள், உறவுகள் மற்றும் எங்கள் தகவல் தொடர்பு வலையில் நிற்கும் அலைகளாக அடுக்கப்பட்டிருக்கும் எண்ணங்களால் ஆனது. எங்கள் உலகம் என்பது எங்கும் இருப்பது மற்றும் எங்கும் இல்லாதது, இரண்டும்தான். ஆனால் இங்கு உடல்கள் வாழ்வதில்லை. இனம், பொருளாதார ஆற்றல், ராணுவ பலம் அல்லது பிறப்பிடம் சார்ந்த சலுகைகள் அல்லது பாரபட்சமான அணுகுமுறை இல்லாமல் அனைவரும் நுழையக் கூடிய உலகை நாங்கள் உருவாக்குகிறோம்.

எந்த அளவு தனியாக இருந்தாலும் சரி, எந்த இடத்திலும், எவரும், மவுனமாக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் அச்சம் இல்லாமல் தனது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான உலகை உருவாக்கிறோம்.

உங்களுடைய சட்டப்பூர்வமான கருத்தாங்களான சொத்து, வெளிப்பாடு, அடையாளம், நகர்வு மற்றும் சூழல் எங்களுக்கு பொருந்தாது. இவை எல்லாம் பருப்பொருள் சார்ந்தவை, இங்கோ பருப்பொருள் இல்லை.

எங்கள் அடையாளங்களுக்கு உடல்கள் இல்லை. எனவே, உங்களைப் போல பெளதீக அச்சுறுத்தல் மூலம் எங்களை பணிய வைக்க முடியாது. அறம், சுய ஆர்வம் மற்றும் பொது நலன் ஆகியவை சார்ந்து உங்கள் ஆளுகை நிர்வாகம் உருவாகும் என நம்புகிறேன். உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பல இடங்களில் எங்கள் அடையாளம் விரிந்து இருக்கும். எங்களுடைய அனைத்து கலாச்சாரங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே சட்டம் பொற்கால ஆட்சி தான். இதனடிப்படையில் எங்களுக்கான தீர்வுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஆனால், நீங்கள் தீணிக்க விரும்பும் தீர்வுகளை ஏற்க முடியாது. 

அமெரிக்காவில் உங்கள் சொந்த அரசியல் சாசனத்தையே மறுக்கும் மற்றும் ஜெபர்சன், வாஷிங்டன், மேடிசன், டிடோக்வில்லே மற்றும் பிராண்டிசின் கனவுகளை இழிவுபடுத்தும் சட்டத்தை, தொலைத் தொடர்பு சீரமைப்பு சட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். இந்தக் கனவுகள் இப்போது எங்களுக்குள் புதிதாக பிறந்தாக வேண்டும்.  

நீங்கள் எப்போதும் குடியேறியவர்களாக இருக்கக் கூடிய ஒரு உலகில், மண்ணின் மைந்தர்களாக இருப்பதால் உங்கள் குழந்தைகளை பார்த்து நீங்கள் நடுங்குகிறீர்கள். அவர்களை கண்டு நீங்கள் அஞ்சுவதால், நீங்கள் எதிர்கொள்ள கோழைத்தனமாக அஞ்சும் பெற்றோர் மன நிலை பொறுப்புகளை உங்கள் அதிகார அமைப்புகளிடம் ஒப்படைக்கிறீர்கள். எங்கள் உலகில், மோசமானதில் துவங்கி தேவதை தன்மை கொண்டது வரையான உணர்வுகள் மற்றும் மனித வெளிப்பாடுகள், எண்ணங்களால் நிகழும் உரையாடலான, சீரான முழுமையின் அங்கமாகும். சிறகுகள் அசைவதன் மூலம் உண்டாகும் காற்றில் இருந்து காற்றை எங்களால் பிரிக்க முடியாது.

சீனா, ஜெர்மனி, ரஷ்யா, சிங்கப்பூர், பிரான்ஸ், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சைபர்வெளியின் எல்லைகளில் காவல் மையங்களை அமைப்பதன் மூலம் சுதந்திரம் எனும் வைரசை விரட்ட முயற்சிக்கிறீர்கள். இது சில காலத்திற்கு வேண்டுமானால் செயல்படலாம் ஆனால், வுரைவில் எண்மங்களால் ஆன ஊடகங்களால் நிறைய இருக்கும் உலகில் இது செல்லுபடியாகாது. அதிக அளவில் காலாவதியாகி வரும் உங்கள் தகவல் தொழில்களானது, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில், உலகம் மூலம் பேச்சை கூட உரிமை கொண்டாடுவதாக கூறிக்கொள்ளும் சட்டங்களை உருவாக்குவதன் மூலம் தங்களை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. கருத்துக்களை இன்னொரு தொழில் உற்பத்தி பொருளாக அறிவிக்கும் சட்டமானது, தாது இரும்புவை விட மேலானது இல்லை. எங்கள் உலகில் மனித மூளை உருவாக்க கூடிய எதுவும், எந்த செலவில்லாமல் மறு உற்பத்தி செய்யப்பட்டு, எல்லையில்லாமல் விநியோகிக்கப்படக் கூடியவை. எண்ணங்களின் உலக பயணத்திற்கு இனியும் உங்கள் தொழிற்சாலைகள் தேவையில்லை. 

இத்தகைய மோசமான மற்றும் காலனியாதிக்க செயல்கள், தொலைவில் இருந்து வந்த மற்றும் தேவையில்லாத அதிகாரங்களை நிராகரிக்க துணிந்த எங்களுக்கு முந்தைய சுதந்திர வேட்கை கொண்டவர்கள் எதிர்கொண்ட சூழலை நாங்களும் எதிர்கொள்ள வைக்கிறது. எங்கள் உடல்கள் மீது ஆட்சியை தொடந்து ஏற்றுக்கொண்டாலும் கூட, எங்கள் மெய்நிகர் ஆன்மாக்கள் உங்கள் இறையாண்மையில் இருந்து விடுபட்டவை என அறிவிக்கிறேன். எங்கள் எண்ணங்களை யாரும் கைது செய்ய முடியாத வகையில் பூமி முழுவதும் எங்களை பரந்து விரியச்செய்ய விரும்புகிறோம்.

சைபர்வெளியின் உள்ளத்தின் நாகரிகத்தை உருவாக்குவோம். இதற்கு முன்னர் உங்கள் அரசுகள் உருவாக்கியதைவிட, அது நியாயமானதாகவும், மனித தன்மை மிக்கதாகவும் இருக்கட்டும்.

- சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close