மோஜோ 4 | மோஜோவுக்கு முன் விஜே!

  சைபர்சிம்மன்   | Last Modified : 11 Jul, 2018 02:11 pm

செல்பேசி இதழியலின் வரலாற்றை அறிந்துகொள்ள முற்படும்போது இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்று, இத்துறையின் துவக்கத்தில் நோக்கியாவின் பங்களிப்பு. மற்றொன்று, இத்துறை வளர்ச்சியில் வீடியோ இதழியலின் தாக்கம். உண்மையில் வீடியோ இதழியலின் நீட்சியாகவே செல்பேசி இதழியலை கருத வேண்டியிருக்கிறது. இரண்டுக்குமான தொடர்பு மற்றும் பொதுத்தன்மையை பார்ப்பதற்கு முன் நோக்கியா நிறுவனத்தின் பங்களிப்பை புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

செல்பேசி இதழியலின் ஆற்றல் பற்றி பேசும்போது எல்லாம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனே பிரதானமாக குறிப்பிடப்படுகிறது. செல்பேசி இதழியல் முன்னோடிகள் பலர் ஐபோனையே பயன்படுத்துவதை பார்க்கலாம். அவர்கள் பகிரும் அனுபவக் குறிப்புகளும் ஐபோன் சார்ந்ததாகவே இருக்கின்றன. செல்பேசி இதழியலுக்கான வழிகாட்டி புத்தகங்களும் ஐபோனை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. செல்பேசி இதழயலுக்கான சிறந்த கையேடுகளில் ஒன்றாக கருதப்படும் இவோ புரும் - ஸ்டீபன் குவைன் எழுதிய புத்தகத்தின் துணை தலைப்பு, 'ஒளிபரப்பு தரத்திலான வீடியோவை ஐபோன் அல்லது ஐபேடில் உருவாக்குவது எப்படி?' என்பதாகவே இருக்கிறது. 

ஐபோன் தரம் மற்றும் செயல்திறன் செல்பேசியை கொண்டு படம் எடுக்க ஏற்றதாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக ஐபோனின் கேமரா தரம் விஷேசமானதாக இருக்கிறது. மேலும் பிரத்யேக கேமரா செயலிகள் இயக்கத்தற்கு அதன் செயல்திறன் ஈடுகொடுக்கிறது. 

ஐபோன் பரவலாக மோஜோ முன்னோடிகளால் விரும்பபடுகிறது என்றாலும், ஐபோனில் மட்டும்தான் செல்பேசி இதழியலில் ஈடுபட முடியும் என்றில்லை. ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளிட்ட எந்தப் பொருத்தமான போனும் இதற்கு போதுமானது. மேலும் தற்போது ஆண்ட்ராய்டு போன்கள் ஐபோன் தரத்திற்கு இணையாக வந்திருக்கின்றன. ஐபோனை உயர்த்துவதோ அல்லது ஆண்ட்ராய்டு போனுடன் ஒப்பிடுவதோ இதன் நோக்கமல்ல. மோஜோ சார்ந்த முயற்சிகளில் ஐபோன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதே நோக்கம்.

ஸ்மார்ட்போன் வரலாறும் மோஜோவும்

ஸ்மார்ட்போன் வரலாற்றில் திரும்பிப் பார்த்தாலும், ஐபோன் முக்கிய மைல்கல்லாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஐபோனுக்கு முன் ஸ்மார்ட்போன் என்று சொல்லப்படுபவை இருந்தாலும் 2007-ல் இதன் அறிமுகத்திற்கு பிறகே ஸ்மார்ட்போன் பிரிவில் எழுச்சி உண்டானது. குறிப்பாக ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக செயலிகள் உருவாக்கத்தில் ஐபோனின் தாக்கம் மறுக்க முடியாதது. 

செல்போனிலேயே பதிவு செய்யலாம், படம் எடுக்கலாம், அவற்றை திருத்தித் தொகுக்கலாம் எனும் வகையில் ஐபோன் ஏற்படுத்திய வியப்பே செல்பேசி இதழியலுக்கான முக்கிய உந்துசக்தியாக இருந்தது. ஐபோன் பிரலமாகி, ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பரவாக்கிய காலக்கட்டத்தில் தான் ஊடகவியலாளர்கள் பலரும் செய்தி சேகரிப்பு பணியில் ஐபோனை ஆர்வத்துடன் பயன்படுத்த துவங்கினர். பலர் கேமரா அல்லது லேப்டாப்பிற்கு பதில் ஐபோனே போதும் என நினைக்கத் துவங்கினர்.

ஆனால், ஐபோனின் இத்தனை பெருமைகளையும் மீறி, செல்பேசி இதழியலின் துவக்கப்புள்ளியாக அதைக் கருத முடியாது. அந்த பெருமையை பெறும் போன்களில் ஒன்றாக நோக்கியா இருப்பதை செல்பேசி இதழியல் தொடர்பான ஆரம்பகட்ட முயற்சிகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 2005-ம் ஆண்டில் அமெரிக்காவின் புளோரிடாவில் 'தி நியூஸ் பிரஸ்' நாளிதழில் செல்பேசி மூலம் செய்தியாளர்கள் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதன் பிறகு 2007-ம் ஆண்டில் தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செல்பேசி இதழியலுக்கான முயற்சியில் ஈடுபட்டபோது நோக்கியாவுடன் இணைந்தே அதற்கான செல்பேசி சாதன தொகுப்பை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம்.

நோக்கியாவின் இந்த பங்களிப்பு பற்றி இன்னமும் நெருங்கி பார்ப்பதன் மூலம் செல்பேசி இதழியலுக்கான தேவை உணரப்பட்டவிதத்தை இன்னும் நன்றாக புரிந்து கொள்ளலாம். 

இந்த இடத்தில் செல்பேசி இதழியல் என்பது செல்பேசி சார்ந்தது என்பதை விட, இதழாளர் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் செய்தி சேகரித்து அளிக்கக் கூடியவராக இருப்பதன் ஆற்றலையே குறிப்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதழியல் என்பது எப்போதுமே நடமாடக் கூடியதாக இருந்துள்ளது என்று தனது இதழியல் சகா வாதிடுவதாக அமெரிக்க இதழியல் பேராசிரியர் ஜூட் ஸ்லிவ்கா (Judd Slivka) சொல்வதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். இதழாளர்கள் எப்போதுமே களத்திற்கு சென்று செய்தி சேகரித்துள்ளனர். கையில் கிடைத்ததை கொண்டு செய்தி வெளியிட்டுள்ளனர். கெடுவுக்குள் செய்தி வெளியிட வழி செய்ய இதழாளர்கள் அருகாமையில் இருக்கும் எந்த நுட்பத்தையும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

எனில் செல்பேசி இதழியலில் புதிதாக என்ன இருக்கிறது என்று கேட்கலாம் என்கிறார் பேராசிரியர் ஸ்லிவ்கா. செல்பேசி இதழியல் என்று சொல்வது கேமரா இதழியல் என்று சொல்வது போல அபத்தமானது என்று சொல்பவர், செல்பேசி இதழியலும் அடிப்படையில் இதழியல் தான், செல்பேசி என்பது இங்கு நடமாடும் தன்மையை குறிக்கிறது என்கிறார். செல்பேசி இதழியல் தொடர்பாக அவர் எழுப்பும் கேள்விகள் இந்தத் துறையை மேலும் தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வகையில் அமைகின்றன என்றாலும், அதைவிட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், இதழாளர்கள் செய்தி சேகரிப்பை மேம்படுத்துவதற்கான சாதனங்களை தொடர்ந்து நாடி வந்திருக்கின்றனர் என்பது தான். 

லேப்டாப் இதழியல் என்று ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் லேப்டாப் இதழாளர்களின் மிகச்சிறந்த நண்பனாக விளங்கியது. இணையம் இதழியலில் தாக்கம் செலுத்த துவங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் செய்தியாளர்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்த அலுவலகம் வரவேண்டும் என்ற தேவையில்லாமல் செய்தி சேகரித்த இடத்தில் இருந்து செய்தியை டைப் செய்து அனுப்ப லேப்டாப் வழி செய்தது. பின்னர் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருத்தி மேம்படுத்தி அனுப்பி வைக்கவும் லேப்டாப் வழி செய்தது. இணைய வசதி இணைக்கப்பட்டிருந்தால் லேப்டாப்பிலிருந்தே செய்திகளை அனுப்பவும், ஊடக இணையதளங்களில் வெளியிடுவதும் சாத்தியமானது.

 

ஆக, கம்ப்யூட்டரோ, லேப்டாப்போ, கையடக்க கேமராவோ இவை எல்லாமே இதழாளர்கள் செய்தி சேகரிப்பில் பயன்படுத்தும் சாதனங்களாக இருக்கின்றன. இந்த வரிசையில்தான் செல்பேசியும் வருகிறது என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். செய்தி சேகரிப்பில் செல்பேசியின் மிகப்பெரிய பலம், எப்போதுமே அது உடனிருப்பதுதான். இந்த அம்சத்துடன் செல்பேசியின் ஆற்றலும், செயல்திறனும் இணையும்போது புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, ஒலிப்பதிவு செய்வது என பலவற்றை மேற்கொள்ள வழி செய்கிறது. செய்திகளை பதிவு செய்வது மட்டும் அல்ல, அவற்றை தொகுத்து ஒளிபரப்பு தரத்தில் உருவாக்கவும், தேவை எனில் நேரலை செய்யவும் கூட நவீன செல்பேசிகள் வழி செய்கின்றன. இத்தகைய சாத்தியங்களே, செல்பேசிகள் இதழியலை பாக்கெட்டில் கொண்டு வந்திருப்பதாக வர்ணிக்க வைக்கின்றன.

செல்பேசி இதழியல், பாக்கெட் இதழியல் என்றே ஆரம்பத்தில் குறிப்பிட்டதை இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். நோக்கியா இதழாளர்களின் தேவையை மனதில் கொண்டு என் 92, 95 வகை செல்பேசிகளை முன்னிறுத்தியபோது, செல்பேசியை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் செய்தி சேகரிப்பு பாக்கெட் இதழியல் என்றே குறிப்பிடப்பட்டதை 2005-க்கு பிறகு வெளியான கட்டுரைகளில் இருந்து அறிய முடிகிறது.

 

செல்பேசிகள் எப்போதுமே செய்தியாளர்களின் உற்ற நண்பனாக இருந்து வந்திருக்கின்றன என்றாலும், அவை கேமரா ஆற்றலை பெற்ற போது தான், அவற்றின் இதழியல் பயன்பாட்டில் பெரும் மாற்றம் நிகழத்தத் துவங்கியது. துவக்கத்தில் குரல் வழி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வழியே அலுவலங்களுக்கு செய்திகளை அனுப்ப செல்பேசிகள் உதவின. குறுஞ்செய்தி வசதி ஊடகத்துறையால் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்ட முன்னோடி முயற்சிகள் பல இருக்கின்றன என்றாலும், இந்த காலக்கட்டத்தில் செல்பேசி என்பது இதழாளர்களுக்கான ஒரு கருவியாகவே இருந்தது. மிக பயனுள்ள கருவி!

ஆனால், செல்பேசி ஒன்றே போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதுவே இதழியலின் மையமாக உருவாக, தொழில்நுட்ப நோக்கில் பல விஷயங்கள் தேவைப்பட்டன. செல்பேசியுடன் சிறிய கேமராவை இணைத்து அதன் மூலமே படம் எடுக்கும் ஆற்றல் இவற்றில் முதன்மையாக அமைகிறது. புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் கேமராபோன்கள் பிரபலமாகத்துவங்கிய போது அதனால் ஏற்பட்ட உற்சாகமும், பரபரப்பும் நிகரில்லாதவை என்றே சொல்ல வேண்டும். 2004-ம் ஆண்டில் பிபிசி இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரை செல்பேசிகளின் படம் எடுக்கும் ஆற்றல் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை அழகாக விவரித்துள்ளது. திடிரென பார்த்தால் எந்த இடத்திலும் படம் எடுக்க முடிகிறது, சாமானியர்கள் கண்ணில் படும் பிரபலங்களை உடனடியாக கிளிக் செய்ய முடிகிறது என்பது முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாமானியர்கள் எடுக்கும் தற்செயல் படங்களை ஊடகங்கள் பயன்படுத்துவது மட்டும் அல்ல, இதழாளர்களே வலைப்பதிவு மூலம் நிகழ்வுகளை பதிவு செய்ய இந்த ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு, மோபிலாக் ஜர்னலிசம் என இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. செல்பேசி கேமரா படங்களின் துல்லியத்தைவிட, கையில் உள்ள செல்பேசியில் இருந்தே படம் எடுக்க முடிவதே இந்த காலகட்டத்தில் முக்கிய அம்சமாக இருந்தது.

 

இந்தக் குறையை போக்கும் வகையில் செல்பேசி நிறுவனங்கள் கேமரா உள்ளிட்ட அவற்றின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. இதில் நிறுவனங்களிடையே போட்டியும் நிலவிய சூழலில் நோக்கியா ஸ்மார்ட்போன் என கருதக்கூடிய என் வரிசை செல்பேசிகளை அறிமுகம் செய்தது. வழக்கமான செல்பேசியை விட இவற்றின் விலை அதிகம் என்றாலும் செயல்திறனும் அதிகமாக இருந்தது. இந்த செல்பேசி ஓரளவு சிறந்த புகைப்படம் எடுக்கும் ஆற்றல் பெற்றிருந்ததோடு, வீடியோ எடுக்கும் திறனும் பெற்றிருந்தது. அது மட்டும் அல்லாமல் தகவல்களை உள்ளீடு செய்வதற்கான கீபோர்டு வசதி, மைக் வசதி, அதிவேக இணைய வசதி ஆகிய அம்சங்களையும் பெற்றிருந்தது. இந்த செல்பேசியில் செயல்படக்கூடிய பிரத்யேக மென்பொருள்களையும் அளித்தது. இவற்றோடு டிரைபாடு மற்றும் சோலார் சார்ஜர் ஆகியவற்றை சேர்த்து, இதழியலுக்கான தொகுப்பாக நோக்கியா முன் வைத்தது. 

இதழாளர்கள் நோக்கில் பார்த்தால் இந்த மாற்றங்களை அற்புதம் என்றே புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்னர் அதிகட்சமாக செல்பேசி மூலம் தொடர் குறுஞ்செய்திகள் வாயிலாக செய்தியை அனுப்ப முடிந்த நிலை மாறி தற்போது, கீபோர்டு துணை கொண்டு நீளமான செய்திகளையும் டைப் செய்ய முடிந்தது. இது லேப்டாப் சுமையில் இருந்து விடுவிப்பதாக இருந்தது. இந்த செல்பேசி மூலமே படம் எடுக்க முடிந்தது தனியே கேமராவை கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்தது. விளைவு, இத்தகைய செல்பேசி இருந்தால் போதும் இதழாளர்கள் எந்த இடத்தில் இருந்தும் செய்தி சேகரிப்பில் ஈடபடலாம் எனும் நிலை உண்டானது. ஆனால், இந்த மாற்றம் உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை. படிப்படியாகவே நிகழந்தது. 

நவீன செல்பேசியின் தாக்கம்

நவீன செல்பேசி கேமரா புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் ஆற்றல் பெற்றிருப்பது களத்தில் இதழாளர்களுக்கு உதவியாக இருந்தாலும், இது இரண்டாம் பட்ச தேர்வாகவே இருந்தது. அதாவது வழக்கமான கேமரா பயன்படுத்த முடியாத அல்லது கையில் இல்லாத இடத்தில் செல்பேசியை கொண்டு படம் பிடிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு, திட்டமிடல் நிகழும் செய்திகளை உடனடியாக வெளியிடும் தேவை ஏற்படும் இடங்களில் செல்பேசிகள் கொண்டு செய்தி சேகரிப்பது பெரும் வரப்பிரசாதமாக கருதப்பட்டது. 

இப்படி செல்பேசிகள் இதழாளர்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்தாலும், அவை ஒரு துணை சாதனமாகவே நீடித்த நிலையில், செயல்திறனில் ஏற்பட்ட தொழில்நுட்ப பாய்ச்சல் மற்றும் செயலிகள் வடிவில் நிகழத்துவங்கிய மென்பொருள் புரட்சி, நவீன செல்பேசியை எல்லாம் வல்ல சாதனமாக ஆக்கியதால், செல்பேசி எனும் சாதனத்தை மட்டுமே மையமாக கொண்ட செய்தி சேகரிப்பு, வெளியீடு முயற்சிகள் அதிகரிக்கத் துவங்கின. இதுவே செல்பேசி இதழியல் அலையாக உருவெடுக்கத் துவங்கியது. 

இந்த நிகழ்வுகளில் நோக்கியாவின் தாக்கம் என்பது அத்தனை முக்கியம் அல்ல; அந்த காலக்கட்டத்தில் செல்பேசிகள் ஸ்மார்ட்போன்களாக உருவெடுக்கத்துவங்கியது இதழியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என்பதே முக்கியம். நோக்கியா அதை உணர்ந்து, அதேற்ற சாதனங்கள் மற்றும் மென்பொருள் தொகுப்பையும் வழங்கத் துவங்கியது. பின், நோக்கியா எப்படி நவீன செல்பேசி புரட்சியில் பின்தங்கி போனது என ஆய்வுக்குரியது என்றாலும், அது தனியே கவனம் செலுத்த வேண்டியதாகிறது.

இதனிடையே, பொதுமக்கள் மத்தியில் செல்பேசி பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியது, அவர்கள் செல்பேசி மூலமே பலவற்றை மேற்கொள்ளத் துவங்கியது, முக்கியமாக செய்திகளை செல்பேசி வாயிலாகவே நுகரத் துவங்கியது ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மற்ற துறைகளை விட இதழியலில் இதன் தாக்கம் தீவிரமாக இருந்தது. ஏனெனில் இதழியல் எப்போதுமே தொழில்நுட்பத்தின் தாக்கத்தை அதிகம் உணரும் துறையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இணையத்தின் வருகை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் எழுச்சி, இதழியலை தலைகீழாக மாற்றியது என்று கூட சொல்லலாம். இந்தத் தாக்கத்தின் நீட்சியாகவே நவீன செல்பேசியின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 

டிஜிட்டல் இதழியலில் இருந்து செல்பேசி இதழியல்

இதழியல் துறையில் ஏற்கெனவே டிஜிட்டல் அம்சம் முன்னிலை பெற்றிருந்த காலம் இது. ஆனால், டிஜிட்டல் பதிப்பு அல்லது இணைய பதிப்பு என்பது துவக்கத்தில் அச்சுப் பதிப்பின் நீட்டிப்பாகவே இருந்தது. இணையத்தில் இடம்பெற்றிருப்பது அவசியம் எனும் நிதர்சனம் உரைத்த நிலையில் ஊடகங்கள் இணைய பதிப்புகளை வெளியிடத் துவங்கின. அச்சில் வெளியான செய்திகள் அப்படியே இணையத்தில் பதிவேற்றப்பட்டன. இதற்கென இணையதளங்கள் வடிவமைக்கப்பட்டன. அல்லது அச்சுப் பிரதி அப்படியே மின் பிரதியாக பதிவேற்றப்பட்டது. 1990களின் இறுதியில் இது போதும் என ஊடகங்கள் நினைத்தன. ஆனால் இணையத்தின் வளர்ச்சி அந்த நிம்மதியை குலைத்தது. 

இணையம் என்பது ஏற்கெனவே உள்ள ஊடக உள்ளடக்கத்திற்கான நீட்டிப்பு வசதி மட்டும் அல்ல, அதுவே பிரதான வெளியீட்டு வசதி எனும் புதிய உண்மையை ஊடகங்கள் உணரத் துவங்கின. வாசகர்கள் அல்லது நேயர்கள் இணையவாசிகளாக மாறியதும், அவர்கள் இணையம் வாயிலாக பிரதானமாக செய்திகளை அணுகத் துவங்கியதாலும் இந்த மாற்றம் அவசியமானது. 

அச்சு வடிவம் அல்லது தொலைக்காட்சி மூலம் செய்திகளை பெறுவதை விட இணைய தலைமுறை இணையதளம் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டின. இதே காலக்கட்டத்தில் வலைப்பதிவு எனும் ஜனநாயக பதிப்பு வசதி பிரபலமானது மற்றும் இதன் தொடர்ச்சியாக சமூக ஊடகங்கள் எழுச்சி பெற்றது இணைய வழி செய்திகளை பிரதானமாக்கியது.

இந்தப் போக்கை புரிந்துகொண்ட ஸ்டீவ் பட்ரி போன்ற முன்னோடி பத்திரிகையாளர்கள் டிஜிட்டல் பர்ஸ்ட் எனும் கருத்தாக்கத்தை வலியுறுத்த துவங்கினர். அதாவது அச்சு ஊடக செய்திகளை இணையத்தில் மறு பதிப்பு செய்வதற்கு பதில் முதலில் இணையத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். இணையத்தில் உடனுக்குடன் செய்திகளை பகிர்ந்து கொண்ட பிறகு, ஆழமான அலசல்களை அச்சு ஊடகத்தில் வெளியிடலாம் எனும் நிலை உண்டானது. 

செல்பேசிகளின் எழுச்சிக்குப் பிறகு இந்த கருத்தாக்கம் செல்பேசியில் முதலில் எனும் கருத்தாக்கமாக உருபெற்றது. நவீன தலைமுறை எல்லாவற்றையும் செல்பேசியேலேயே அணுகுவதால் செய்திகளையும் செல்பேசியில் முதலில் வழங்குவது தவிர்க்க இயலாதது எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. இதை ஏற்காதவர்கள் வாசகர்களை இழந்து கொண்டிருக்கின்றனர்.

'செல்பேசியில் முதலில்' எனும் கோட்பாட்டிற்கு ஏற்ப செல்பேசியில் உள்ளட்டகத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்வதும் முன்னிலை பெற்று வருகிறது. அது மட்டும் அல்ல, தொழில்நுட்ப வளர்ச்சி ஊடக வகைகளையும் அதன் எல்லைகளையும் தாறுமாறாக கலைத்துப்போட்டு ஒன்று கலக்க வைத்திருக்கிறது. இதை கன்வர்ஜன்ஸ் என்கின்றனர். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட ஊடக வடிவங்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து ஒன்றோடு ஒன்று இணைவது. இந்த ஒருங்கிணைப்பு பல தளங்களில் அரங்கேறி வருகிறது. ஊடக வடிவ கலப்பில் இதை தெளிவாக உணரலாம்.

உதாரணத்திற்கு ஒரு காலத்தில் அச்சு ஊடகத்தில் வடி வடிவில் மட்டுமே செய்திகள் இடம்பெற்றன. அதிகபட்சமாக புகைப்படங்கள், கிராபிக்ஸ்களை சேர்க்கலாம் எனும் நிலை இருந்தது. அதே போல தொலைக்காட்சிகள் காட்டி வடிவில் மட்டும் செய்தி வெளியிட்டன. வானொலி ஒலி வடிவில் இயங்கியது. ஆனால் இணைய தொழில்நுட்பம் இந்த எல்லைகளை எல்லாம் மாற்றி அமைத்தது. 

அச்சு ஊடகம் இணையதளம் அமைத்த பிறகு, அதில் வீடீயோவையும் வெளியிடும் சாத்தியம் மற்றும் தேவை இரண்டும் உண்டானது. தொலைக்காட்சி ஊடகம் இணைய பதிப்பில் வரி வடிவில் செய்திகளை அளிக்க வேண்டியிருக்கிறது. இணையதளத்தில் ஒலி கோப்பாகவும் செய்திகளை வழங்கும் சாத்தியம் உருவாகி இருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து பல்லூடக உள்ளட்டக்கத்திற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மூல ஊடகம் எதுவாக இருந்தாலும், உள்ளடக்கம் பல்லூடக தன்மையுடன் வெளியாவது அவசியமாகி இருக்கிறது. இளம் தலைமுறை வாசகர்களை கவர வேண்டும் எனில் தளத்தில் யூடியூப் வடிவில் வீடியோ செய்தி அளிக்க வேண்டும். இன்னும் பல விதங்களில் உள்ளடக்கத்தை தேவைக்கேற்ப பலவிதங்களில் வழங்கியாக வேண்டிய அவசியம் உண்டாகியுள்ளது.

இந்த பல்லூடக உள்ளடக்க தேவையை நிறைவேற்றும் நிர்பந்தத்தின் விளைவாக செல்பேசி இதழியல் இயல்பாக எழுச்சி பெறத் துவங்கியிருக்கிறது. சூழலுக்கு ஏற்ப ஒரு செய்தியை வரி வடிவிலோ, புகைப்படத் தொகுப்பாக அல்லது வீடியோ தொகுப்பாக வழங்குவதில் நவீன செல்பேசி கைகொடுக்கிறது.

செய்திகளை பல்லூடக தன்மையில் நவீன செல்பேசியில் வழங்கும் சாத்தியமும் அதற்கான நிர்பந்தமும் தான் செல்பேசி இதழியலாக உருவெடுத்துள்ளது. செல்பேசி இதழியலின் இந்த எழுச்சி திடிரென அரங்கேறிய மாயமாகவும் தோன்றலாம். நவீன செல்பேசியிலேயே உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும் ஆற்றல் நம்ப முடியாத தன்மையை கொண்டிருந்தாலும் இதற்கு முன் வரலாறு இல்லாமல் இல்லை. 

ஊடகத்தின் முக்கிய போக்குகளை திரும்பிப் பார்க்கும்போது தொலைக்காட்சி வளர்ச்சியின் கிளையாக உருவெடுத்த வீடியோ இதழியல் இதற்கான முன்னோடியாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். காட்சி ஊடகமான தொலைக்காட்சி நிறுவனமயமான செயல்பாட்டை கொண்டிருந்தது. அதற்கு அதிக செலவிலான உபகரணங்களும், தனிக்குழுவும் தேவைப்பட்டன. செய்தியாளரோடு, கேமராமேன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் தேவை. இந்த நிர்பந்தங்கள் ஒருவிதத்தில் தொலைக்காட்சி மூலமான செய்தி சேகரிப்பின் வீச்சை குறைத்ததாக கொள்ளலாம். எந்தச் செய்தி குறித்து தகவல்களை சேகரிக்கலாம் என்பதை தொலைக்காட்சி ஆசிரியர் குழுவும், தயாரிப்பாளர்களுமே தீர்மானித்தனர்.

இந்தப் பின்னணியில் சுயேட்சையான செயல்பாட்டை நாடிய இதழாளர்களும், படைப்பூக்கம் மிக்கவர்களும் தன்னிச்சையான வழிகளை நாடினர். அதாவது கேமரா குழுவினர் இல்லாமல், தனிநபராக தாங்களே கேமரா உள்ளிட்ட கருவிகளை எடுத்துக்கொண்டு களத்திற்கு சென்று காணொலி வடிவில் செய்தி சேகரித்து அவற்றை தாங்களே தொகுத்து ஒளிபரப்பிற்கு ஏற்ற வடிவில் வழங்கினர். இந்த வகையான செய்தி சேகரிப்பு வீடியோ இதழியல் என பிரபலமானது. 

இந்த வகை செய்தியாளர்கள் வீடியோ இதழாளர்கள் என அழைக்கப்பட்டனர். ஒருவரே எல்லாவற்றையும் சுமந்து சென்று, ஒரு குழுவின் பணியை செய்ததால் இவர்கள் தனிநபர் இதழாளர் (சோலோ ஜர்னலிஸ்ட்) என அழைக்கப்பட்டனர். இவர்கள் பேக்பேக் ஜர்னலிஸ்ட் என்றும் குறிப்பிடப்பட்டனர். 

விஜேவும் மோஜோவும்

இதே காலகட்டத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கையில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வீடியோ கேமராக்கள் அறிமுகமானதும் வீடியோ இதழாளர்களின் பணியை மேலும் எளிமையாக்கியது. கேமரா குழுவுக்கான பட்ஜெட் இல்லாத இடங்களுக்கு செல்ல விரும்பிய இதழாளர்கள் அல்லது தாங்களே தரமான செய்தி படத்தை உருவாக்க விரும்பிய இதழாளர்கள் இவ்வாறு செயல்பட்டனர். இந்தப் போக்கு அறிமுகமான 1970களில் அமெரிக்காவின் மைக்கேல் ரோசன்பிளம் போன்றவர்கள் வீடியோ இதழியலுக்கான அடிப்படை நுட்பங்களை உருவாக்கி இந்த போக்கிற்கு வலு சேர்த்தனர். கேமராமேன் உதவியில்லாமல் இதழாளரே காட்சிகளை படமாக்கி நேர்த்தியாக கதை சொல்வதற்கான படமாக்கல் உத்திகளையும் இவர் வகுத்துக்கொடுத்தார்.

'விஜே' என சுருக்கமாக குறிப்பிடப்படும் இந்தப் போக்கு தொலைக்காட்சி இதழியலில் வலுப்பெற்றதன் அடுத்த கட்டமாக செல்பேசியின் எழுச்சிக்கு பிறகு, நவீன செல்பேசியிலேயே உள்ளட்டக்கத்தை உருவாக்கும் ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளும் செல்பேசி இதழியலாக உருவெடுத்துள்ளது. வீடியோ இதழியலுக்கும், செல்பேசி இதழியலுக்கும் சில வேறுபாடுகள் இருப்பதாக இத்துறை வல்லுனர்கள் சிலர் கருதினாலும், வீடியோ இதழியலின் நீட்சியாக இதைக் கருதுவதன் மூலம் செல்பேசிய இதழியலின் எழுச்சியை சரியாகப் புரிந்துகொள்ளலாம்.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ - 3 | செல்பேசி இதழியலின் தோற்றமும் வளர்ச்சியும்! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close