மோஜோ 9 | செய்திக் கதைகளும் காட்சி ஆதாரமும்!

  சைபர்சிம்மன்   | Last Modified : 25 Apr, 2018 03:02 pm

நவீன செல்பேசியின் கேமராவைக் கொண்டு படம் எடுப்பது எளிதானது. இந்தத் திறனை கொண்டு செல்பேசியிலேயே செய்திக் கதைகளை உருவாக்குவதும் சாத்தியம்தான். ஆனால் அது எளிதானது அல்ல. அதற்கு அடிப்படையான நுட்பங்களை கற்றுத்தேர வேண்டும். இதழியல் நோக்கில் பயிற்சியும் தேவை. ஏனெனில் செல்பேசி கேமராவை இயக்கி காட்சிகளை பதிவு செய்வதால் மட்டுமே அது செய்திக் கதைகளின் தன்மையை பெற்றுவிடாது. காட்சிகளை படம் எடுப்பதற்கு என்று அடிப்படையான நெறிமுறைகள் இருக்கின்றன. இவற்றுக்கு உட்பட்டு செயல்படும்போதே, செல்பேசியில் எடுத்து தொகுக்கப்பட்ட படங்கள் ஈர்ப்பு மிக்கதாகவும், தொழில்முறை தன்மையுடனும் இருக்கும்.

இப்படி காட்சி ஊடகத்திற்கான இலக்கணப்படி படம் எடுக்க வேண்டிய அவசியத்தை செல்பேசி இதழியல் பயிற்சியாளரான இவோ புரும், 'காட்சி ஆதாரம்' என குறிப்பிடுகிறார். மோஜோவுக்கான கையேட்டில், ஸ்மார்ட்போன் மூலம் காட்சி ஆதாரங்களை உருவாக்குவது எனும் தலைப்பிலான கட்டுரையில் இது பற்றி அவர் விவரிக்கிறார்.

காட்சி நிரூபணம் அல்லது காட்சி ஆதாரம் என புரும் குறிப்பிடுவது, செய்திக் கதைகளை சொல்வதற்கு தேவையான நல்ல காட்சிகளை தான். அதாவது ஒரு செய்திக் கதையை வலுவாகச் சொல்ல எந்த வகையான காட்சிகள் தேவை என உணர்ந்து அதற்கேற்ப படம் பிடிக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளையும் அவர் விவரிக்கிறார்.

உபகரணங்களை தேர்வு செய்க:

முதலில் தாங்கள் சொல்ல விரும்பும் கதைக்கு ஏற்ற செல்பேசி இதழியல் உபகரணங்களை தேர்வு செய்ய வேண்டும். நவீன செல்பேசி அடிப்படை தேவை என்றாலும், கதையின் தன்மைக்கேற்ப அதிக திறன் வாய்ந்த படம் எடுக்க டி.எஸ்.எல்.ஆர் கேமரா தேவைப்படலாம். அல்லது சக்தி வாய்ந்த லென்ஸ் தேவைப்படலாம். செல்பேசியை அசையாமல் வைத்திருக்க தனியே சாதனம் தேவைப்படலாம். படங்களை எடுத்த பிறகு அவற்றை லேப்டாப்பிற்கு மாற்ற வேண்டி வரலாம். இவற்றை எல்லாம் குறிப்பிட காரணம், செல்பேசி இதழியலில் தொழில்நுட்பத்தை விட செய்தி சேகரிப்பு மற்றும் கதை சொல்லல் அமசங்களே பிரதானமானது என்பதாகும்.

சரியான உபகரணங்களை தேர்வு செய்த பிறகு களத்தில் இறங்கி மெனக்கெட தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தால், தொலைக்காட்சி படக்குழுவினரைப் போலவே தொழில்முறையிலான காட்சிகளை படமாக்கலாம்.

ஐந்து புள்ளி திட்டம்

தயாரவது என்றால், உடனடி செய்திகளைப் படம் பிடிக்கச் செல்லும்போது முன்கூட்டியே அந்த நிகழ்வு தொடர்பான அடிப்படை மற்றும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். இணையம் மற்றும் சமூக ஊடகங்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். செய்திக்கான முக்கிய அம்சம் என்ன? யாரிடம் எல்லாம் பேச வேண்டும் என்று யோசிக்க வேண்டும். எந்த விதமான காட்சிகளை படமாக்க உள்ளோம் என ஒரு திட்டம் இருக்க வேண்டும். கோப்புக் காட்சிகள் தேவைப்படுமா, அங்கே எவ்வளவு நேரம் இருக்க வேண்டியிருக்கும் என்பது போன்ற விஷயங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.

இவைத் தவிர செல்பேசியில் படம் பிடிப்பதற்கான அடிப்படை பாலபாடங்களையும் நினைவில் கொள்ள வேண்டும். செய்திக்கான ஆய்வை செய்து முடிக்கும்போது, படம் பிடிப்பதற்கான ஐந்து புள்ளி திட்டம் உருவாகி இருக்கும். எந்தச் செய்தி அல்லது கதையும், ஒரு துவக்கம், இடைப்பட்ட பகுதி மற்றும் முடிவை கொண்டிருக்கும். இவற்றுக்கு மத்தியில் நிகழ்வை வளர்த்தெடுக்கும் முக்கிய அம்சமும் இருக்கும். இவையே ஐந்து புள்ளி திட்டம் என குறிப்பிடப்படுகிறது. ஒரு துண்டு காகிதத்தில் இந்த அம்சங்களை குறித்து வைத்துக்கொள்வது களத்தில் வழிகாட்டும். 

அடுத்த கட்டமாக ஸ்கிராப் அம்சம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்திகொள்ள வேண்டும். கதை என்ன? அதில் வரும் பாத்திரங்கள் யார்? கதையின் அமைப்பு என்ன? அதன் நிகழ்வுகள் எவை, தயாரிப்புக்கான திட்டமிடல் என்ன? ஆகிய அம்சங்களை இதன் மூலம் கதையில் கொண்டு வரலாம்.

காட்சிகளை படம் பிடிக்கும்போது, இயன்ற வரை நிகழ்வுக்கு அருகமையில் சென்று படம் பிடிப்பதும், கேமராவை அசையாமல் நிலையாக வைத்திருப்பதும் முக்கியம். தேவை எனில் டிரைபாடு சாதனத்தை பயன்படுத்தலாம் அல்லது செல்பேசிக்கான ஹோல்டர் சாதனம் மூலம் கையில் அசையாமல் வைத்திருக்கலாம்.

சில குறிப்புகள்:

* ஒரு சுவர் மீது சாயந்தபடி நிலையாக நிற்கலாம் அல்லது முழங்கையை மேஜை மீது வைத்துக்கொள்ளலாம்.

* செல்பேசி கேமராவை ஒரிடத்தில் நிலையாக வைத்திருக்கலாம் என்றாலும், காட்சிகள் போக்கிற்கு ஏற்ப படம் பிடிக்க வசதியாக கையில் இருக்க வேண்டும்.

* முழங்கையை உடலுக்கு அருகே வைத்திருந்தால் கேமரா மூலம் ஒரு முக்கோண வடிவை உருவாக்கலாம். காட்சி எடுக்க இது உதவும் என்றாலும், இதே முறையில் நடப்பது கடினம்.

* கேமரா கோணங்களை மாற்றி படம் எடுக்கும்போது, உடல் எடையின் மையத்தை உணரும் வகையில் முழங்கால் மற்றும் முழங்கையை வளைத்துக்கொள்ளவும்.

இந்த முன்னேற்பாடுகள் மூலம் காட்சிகளை அசைவு இல்லாமல் படம் எடுப்பதோடு, கதை நிகழ் களத்திற்கு அருகாமையிலும் இருக்கலாம். ஒலியும் துல்லியமாக பதிவாகும். 

இவை எல்லாவற்றுக்கும் முதலில் உங்கள் கதை நிகழ் களத்தையும், நேர்காணல் செய்பவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதையும், அவசர காலத்தில் வெளியேறும் வழியையைம் கவனித்து வைக்க வேண்டும்.

கேமரா கோணம்:

இனி கேமரா கோணத்தை கவனிக்கலாம். கேமரா கையாளப்படும் விதம் மற்றும், எடுக்கப்படும் காட்சிகளின் தன்மைக்கேற்ப உங்கள் கதையின் பாணி அமையும். இந்த பாணிக்கு ஏற்பவே காட்சிகளை எடிட் செய்து தொகுப்பதும் அமையும்.

காட்சிகளை பதிவு செய்யும்போது, ஒரே நீளமான காட்சியாக எடுத்து தள்ளுவதை தவிர்க்க வேண்டும். தொழில்முறை படம் பிடித்தலின் முதல் பாலபாடம் இதுதான். நேர்த்தியான கதை சொல்லுதலுக்கு சிறு சிறு காட்சிகளாக படம் பிடிக்க வேண்டும். அந்த சிறு காட்சிகளும் ஒரு தொடர் வரிசையில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதை சீக்வன்ஸ் என்கின்றனர். கதை நிகழ்வை கேமராவில் பின் தொடர்ந்தபடி, ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு செல்ல மாறுபட்ட திரை அளவு கொண்ட சிறு காட்சிகளை பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு, கால்பந்து பயிற்சியை படம் பிடிப்பது என்றால், மைதானத்தில் கால்பந்தாட்ட பயிற்சியை பரந்த காட்சியாக காண்பிப்பதன் மூலம் பயிற்சி நடக்கும் இடம் மற்றும் அதில் பங்கேற்பவர்களை உணர்த்தலாம். அதன் பிறகு தனிப்பட்ட வீரர்களை மத்திய காட்சிகளாக காண்பித்து, அவர்கள் செயல்களை நெருக்கமான காட்சியாக காண்பிக்கலாம். அடுத்தடுத்து இடம்பெறும் இந்த காட்சிகள் கால்பந்து பயிற்சியை உயிரோட்டமாக பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும்.

இந்தக் காட்சிகள் படத்தொகுப்பின் போது, மூல காட்சியின் மீது கூடுதல் தகவல்களை பதிய வைக்க உதவும். இப்படி தொடர் வரிசையில் காட்சிகளைப் படம்பிடிப்பது, திரையில் வலுவான உணர்வை உருவாக்க அவசியம். இதற்கு, ஐந்து சிறு காட்சி முறை வலியுறுத்தப்படுகிறது.

ஐந்து ஷாட் முறை:

* கைகள் - என்ன நிகழ்கிறது என்பதை காண்பிக்கிறது. நெருக்கமான கோணத்தில் இருப்பதால் உணர்வுபூர்வமானது.

* முகம் - செயலை செய்வது யார் என காண்பித்து, அவரது உணரவை புரியவைக்கும்.

* இரண்டு ஷாட் - முகம் மற்றும் கைகளுக்கு இடையிலான உறவை உணர்த்தும். அந்த இரண்டு காட்சிகளின் வேறுபட்டு நிற்பதை தவிர்க்க உதவும். தொகுப்பில் எந்த இடத்திலும் பயன்படுத்தலாம்.

* தோள்பட்டை மீதான காட்சி - கொஞ்சம் சிக்கலான காட்சி. நிறைய பயிற்சி தேவை. நாற்காலியில் ஏறி நின்று கொண்டும் எடுக்கலாம். படம் எடுக்கப்படுபவரின் தலை மற்றும் கைகள் இடையே காட்சியை பதிவு செய்யலாம்.

* சிறப்பு காட்சி - திட்டமிடாமல் களத்தில் திர்மானமாகும் விஷேச காட்சி.

நன்றாக எடுக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகளில் இந்த ஐந்த சிறு காட்சி அமைப்பை பார்க்கலாம். இவைதான் பார்வையாளர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் உடனடி செய்திகளை படம் பிடிக்கும்போது, இப்படி திட்டமிட்டு வெவ்வேறு கோணத்திலான காட்சிகளை அடுத்தடுத்து எடுப்பது சிக்கலானதுதான். காட்சிகளை திட்டமிட்டுக் கொண்டிருந்தால் நிகழ்வுகளை கோட்டை விட வேண்டியிருக்கும். எனவே இந்த வகையான காட்சிகளை முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டுக்கொள்வது நல்லது. அனுபவம் வாய்ந்த காட்சி இதழாளர்கள் படமாக்கும்போதே தொடர் வரிசையில் காட்சிகளை யோசித்து திட்டமிட்டு, தங்கள் உள்ளம் மற்றும் கேமராவில் எடிட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றனர். இது முதல் முறையில் வந்துவிடாது. தொடர் பயிற்சி அவசியம். நிகழ்வுகளை காட்சிரீதியாக பார்த்து, அவற்றை திரையில் கற்பனை செய்து எப்படி எடுக்க வேண்டும் என தன்னிச்சையாக தோன்றும் அளவுக்கு ஆழமான பயிற்சி அவசியம்.

தொடர் வரிசை காட்சி:

தொடர் வரிசையில் காட்சிகளை எப்படி படம் பிடிப்பது என்பதை நன்றாக உள்வாங்கி கொள்ள வேண்டும். பொதுவாக இவை, பரந்த காட்சி, மத்திய காட்சி, நெருக்கமான காட்சி ஆகியவற்றை கொண்டிருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் சைக்கிளில் வீட்டிற்கு வரும் காட்சியை எடுத்துக்கொள்வோம். அவர் சைக்கிளில் வந்து வாயில் அருகே நிற்பனை பரந்த காட்சியாக வைக்கலாம். அதன் பிறகு சைக்கிளில் இருந்து இறங்கும் காட்சியை மத்திய காட்சியாகவும், வாயில் கதவை திறப்பதை ஒரு காட்சியாகவும், பின்னர் சைக்கிளை தள்ளிச்செய்வதை பரந்த காட்சியாகவும், சைக்கிளை நிறுத்திவிட்டு, வாயில் கதவை மூடிவிட்டு வீட்டின் கதவை நோக்கி செல்வதையும் காண்பிக்கலாம். ஒவ்வொரு சிறு அசைவும் முக்கியமாக இருக்கலாம். கதையின் தன்மைக்கேற்ப இத்தகைய காட்சிகளில் எந்த அளவுக்கு விவரங்கள் தேவை என தீர்மானிக்க வேண்டும். 

ஆனால் தொடர் வரிசை காட்சி அமைப்புகளை தீர்மானிப்பதற்காக எல்லாவற்றையும் கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதாக அமைந்துவிடக் கூடாது. கதையோட்டத்தில் கவனம் செலுத்தவே இந்த முறை. தேவை எனில் குறிப்பிட்ட வகை காட்சியை மீண்டும் எடுத்துக்கொள்ளலாம். 

கதைக்கு தேவையான காட்சி அம்சங்களை படம்பிடிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய பிரேம் அமைப்புகள் இவை:

* மிகவும் பரந்த காட்சி - இதில் கதையின் மைய பாத்திரத்தை பார்க்கலாம். ஆனால் கதை நிகழும் இடம் பெரிதாக இருக்கும்.

* பரந்த காட்சி - சுற்றுப்புறம், பாத்திரத்தின் உயரம், கதையின் தொடர்பை காணலாம்.

* மத்திய காட்சி - பாத்திரத்தின் விவரங்களை உணர்த்தும். சுற்றுப்புறமும் ஒரளவு பதிவாகும். கதைக் களத்தில் கேமராவை பார்த்து விவரிக்க இந்த காட்சி பிரேம் பயன்படும்.

* ஓரளவு நெருக்கமான காட்சி - செய்திகளில் அடிக்கடி பயன்படும் காட்சி. உணர்வுகளை தெரிவிப்பதோடு, கதை பின்புலத்தையும் உணர்த்தக்கூடியது. நேர்காணலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் நெருக்கமான காட்சி மற்றும் மத்திய நெருக்கமான காட்சிக்கு இடையே பயன்படுத்தப்படுகிறது.

* மிகவும் நெருக்கமான காட்சி - நுட்பமான விவரங்கள் மற்றும் உணர்வுகளை காண்பிக்க ஏற்றது. இதற்கு ஏற்ற லென்சை பயன்படுத்தலாம். காட்சியை ஜூம் செய்தால் கேமராவை நகர்வை உணர்த்தும்.

மேலும் காட்சி பிரேம்களில் அதிக அளவில் தலைக்கு மேல் வெற்றிடமோ, காலியான முன்பகுதியோ இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு ரூப் ஆல் தேர்ட் விதியை கடைபிடிக்க வேண்டும். பிரேமை, பக்கவாட்டிலும், நேர்வாட்டிலும் இரு பக்கத்திலும் மூன்று கற்பனை கோடுகள் கொண்டதாக பிரித்துக்கொண்டு, அவை இணையும் இடங்களில் கண்கள் போன்ற முக்கிய அம்சங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்வதை இந்த விதி வலியுறுத்துகிறது. உதாரணத்திற்கு கேமராவை பார்த்துப் பேசும் காட்சியை படமாக்கும்போது, நீங்கள் ஒரு பக்கமாக நின்று கொண்டு, எஞ்சிய இடத்தில் கதைக்களனை உணரச்செய்யலாம்.

மூலக்காட்சி மீது ஒட்ட வைக்கும் காட்சி வரிசையை படமாக்கும்போது, பிரேம் அளவை மட்டும் அல்ல கேமரா கோணத்தையும் மாற்றிக்கொள்ளலாம். 

ஒவ்வொரு காட்சியை எவ்வளவு நேரம் படமாக்குகிறோம் என்பதும் முக்கியம். புதியவர்கள் காட்சிகளை போதுமான நேரம் படமாக்காமல் இருக்கும் தவறை செய்வதுண்டு. அல்லது காட்சியை விட்டு அடிக்கடி வெளியேறிக்கொண்டே இருக்கலாம். கதைசொல்லும் போது பயன்படுத்தக்கூடிய அளவிலான நேரத்தில் சிறு காட்சிகளை படமாக்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையில் இதை அனுபவத்திலேயே உணர முடியும். காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு, எடிட் செய்ய அமரும்போது தான் காட்சிகள் எப்படி இருக்கின்றன, எப்படி தேவைப்படுகின்றன என்பது புரியும். இப்படி பலமுறை செய்யும்போது எந்த வகையான காட்சிகளை எடுக்க வேண்டும், எந்தக் காட்சிகளை தவிர்க்க வேண்டும் எனும் புரிதல் ஏற்படும். தொடர் வரிசை காட்சிகளை எடுத்துவிட்டு, நன்றாக நீளம் ஓடும் காட்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் இத்தகைய நீளமான காட்சிகள் சுவார்ஸ்யமான முறையிலும் அமையலாம். தேநீர் விருந்து காட்சிகள் என இவை குறிப்பிடப்படுகின்றன. ஜப்பானிய பாரம்பரிய பழக்கமான தேநீர் விருந்து நிகழ்ச்சி போல இதில் சிறு அசைவு கூட சுவாரஸ்யமாக அமையலாம். ஆனால் எல்லா இடங்களிலும் இந்தக் காட்சியை எதிர்பார்க்க முடியாது.

கேமரா அசைவை மேற்கொள்ளும் முறையும் முக்கியமானது. அடிப்படையில் இரண்டு விதமான நகர்வுகள் சாத்தியம். ஒன்று காட்சி பிரேமுக்குள் நிகழ்ம் நகர்வு. மற்றொன்று பிரேமிக்கு வெளியே கேமராவில் நிகழும் நகர்வு. முதல் காட்சியில் பிரேம் நிலையாக இருக்கும், இரண்டாம் காட்சியில் பிரேமை சுற்றிய நகர்வுகள் கதைக்களன் நிகவை உணர்த்தும். இது தொடர்பான காட்சி முறைகள்:

* தொடர் காட்சி - அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதி ஊகித்து அதற்கேற்ப பிரேமை விட்டு காட்சி நகரும்போது படம் பிடிக்க தயாராக இருப்பது. இதை முன்பே ஊகித்து அதற்கேற்ற இடத்தில் இருக்க வேண்டும்.

* நிலையான காட்சி - இங்கு பிரேமுக்குள் எல்லாம் நிகழும். கேமராவை நகர்த்த தேவையிருக்காது. ஆனால், தேவைக்கேற்ப கேமராவை மாற்றவும் தயாராக இருக்க வேண்டும்.

* வெளியேறுதல் காட்சி - படம் எடுக்கப்படுபவரை கேமராவால் பின் தொடர்ந்து கொண்டே இருப்பதைவிட அவர் வெளியே செல்ல அனுமதிக்கலாம். அவரை பின் தொடர்ந்து சென்று, அமர்ந்திருப்பது போல் அடுத்த காட்சியை காண்பித்தால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இந்த நபர் எப்படி இங்கு வந்து அமர்ந்தார் எனும் கேள்வி பார்ப்பவர் மனதில் தோன்றலாம். ஆனால் முதல் காட்சியில் இருந்து வெளியேறுவது காண்பிக்கப்பட்டால் இந்த சிக்கல் இல்லை.

கேமராவை பான் செய்யலாம். அதாவது பக்கவாட்டில் இருபக்கமும் கொண்டு சென்று படம் பிடிக்கலாம். டில்ட் செய்யலாம். அதாவது மேலும் கீழும் கேமராவை கொண்டு சென்று படம் பிடிக்கலாம். டிராக் செய்வது. அதாவது படம் பிடிக்கப்படும் நபரை பின் தொடர்ந்து படமாக்குவது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்லும் போது பயன்படும் காட்சி முறை.

இதேபோல திரையை நோக்கியிருக்கும் திசையும் முக்கியமானது. ஒலி மற்றும் ஒளி அமைப்பும் மிகவும் முக்கியம். காட்சிகள் பதிவாக போதிய வெளிச்சம் தேவை. கேமரா பின் பக்கத்தில் இருந்து வெளிச்சம் வர வேண்டும். மைக்கில் ஒலி துல்லியமாக பதிவாவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

சிறந்த முறையில் கதை சொல்ல, இந்த முறையில் காட்சிகளை பதிவு செய்ய வேண்டும்.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 8 | கதை சொல்லுதலின் 5 அடிப்படை அம்சங்கள் 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close