மோஜோ - 3 | செல்பேசி இதழியலின் தோற்றமும் வளர்ச்சியும்!

  சைபர்சிம்மன்   | Last Modified : 11 Jul, 2018 02:15 pm

செல்பேசி இதழியல் ஆங்கிலத்தில் 'மோஜோ' என்றே பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. மொபைல் ஜர்னலிசம் என்பதன் சுருக்கமாக அமையும் இந்த பதம், ஒரே நேரத்தில் ஈர்ப்பு மிக்கதாகவும், கம்பீரமானதாகவும் இருப்பதோடு, அதன் பின்னே உள்ள கருத்தாக்கத்தின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

செல்பேசியை பிரதான சாதனமாக கொண்டு களத்தில் இருந்தே செய்தி சேகரித்து அதே வேகத்தில் வெளியிட உதவும் நவீன இதழியல் பாணியை இது குறிக்கிறது. உள்ளங்கையில் உலகம் என்று சொல்வது போல, செல்பேசி இதழியல் உள்ளங்கையில் செய்தி வெளியிடும் ஆற்றல் வந்திருப்பதை மோஜோ உணர்த்துகிறது. சட்டைப்பையில் வீற்றிருக்கும் சக்தி என்றும் இது குறிப்பிடப்படுகிறது.

வாசகர்கள் அல்லது நேயர்கள் என்று சொல்லக்கூடியவர்களில் பெரும்பகுதியினர் ஏற்கனவே செல்பேசி பக்கம் சென்றுவிட்ட நிலையில், ஊடகங்களும் மெல்ல செல்பேசி இதழியல் மீது கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றன. பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் செல்பேசி மூலமான செய்தி சேகரிப்பை இன்னமும் ஒருவித அலட்சியத்துடன் நோக்கும் நிலை இருந்தாலும், இந்த போக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து செல்பேசி இதழியல் சார்ந்த முயற்சியில் பல ஊடக நிறுவனங்கள் ஆர்வம் காட்டத்துவங்கியிருக்கின்றன.

இனி வரும் காலத்தில் இந்தப் போக்கு மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கும் நிலையில், செல்பேசி இதழியலின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் திரும்பிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

இதழியல் வரலாற்றில் முதல் முறையாக... 

செல்பேசி இதழியலின் சுருக்கமான அடையாளமாக இருக்கும் மோஜோ எனும் சொல் பலவித அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டாலும், இதழியல் துறையை பொறுத்தவரை இது செல்பேசியால் நிகழக்கூடிய ஊடக அற்புதங்களையும், எல்லையில்லா சாத்தியங்களையும் குறிக்கிறது. மோஜோ எனும் சொல், அமெரிக்காவின் 'தி நியூஸ் பிரஸ்' நாளிதழ் நிறுவனத்தால் 2005-ல் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. ஒருவிதத்தில் செல்பேசி இதழியலின் முதல் முயற்சியாகவும் இது அமைந்தது. புளோரிடாவில் செயல்பட்டு வந்த அந்த நாளிதழ் நிர்வாகம் மாறிவரும் இணைய யுகத்தின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது நிருபர்களுக்கு புதுவித பயிற்சி அளித்து களத்தில் இறக்கியது. இந்த நிருபர்களே செல்பேசி இதழாளர்கள் (மொபைல் ஜர்னலிஸ்ட்) என அழைக்கப்பட்டனர். இந்த திட்டத்திற்கு மோஜோ என பெயர் சூட்டப்பட்டது.

உண்மையில் இந்தச் செய்தியாளர்கள் லேப்டாப், டிஜிட்டல் கேமரா கொண்டு செயல்பட்டாலும் அவர்கள் செல்பேசி இதழாளர்கள் என்றே குறிப்பிடப்பட்டனர். ஆனால் அவர்கள் இயங்கிய விதம் முற்றிலும் வழக்கத்தில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. நாள் முழுவதும் வெளியே சுற்றி, கண்ணில் படும் செய்திகளை உடனுக்குடன் நாளிதழின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதுதான் அவர்களுக்கான கட்டளையாக இருந்தது. வழக்கமான செய்தி வரையறை பற்றி எல்லாம் கவலைப்படாமல், கண்ணில் படும் செய்திகளை படமெடுத்து, தகவல் சேகரித்து அனுப்ப வேண்டும். அந்தச் செய்தி உள்ளூர் மக்களுக்கு ஆர்வம் அளிக்க கூடியதாக இருந்தால் போதும் என கருதப்பட்டது.

இணையத்தின் தாக்கம் காரணமாக நாளிதழின் வாசகர் பரப்பு மற்றும் வருவாய் வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் விழி பிதுங்கி நின்ற அந்த கால கட்டத்தில் இணைய யுகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் 'தி நியூஸ் பிரஸ்' நிர்வாகம், எப்போதும் களத்தில் இருக்க கூடிய செல்பேசி இதழாளர்கள் மூலம் நாள்தோறும் இணைய பதிப்பில் செய்திகளை வெளியிட்டு மக்களை கவரலாம் என நினைத்தது.

இந்த முயற்சி பற்றி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "மோஜோக்கள் திங்பேட், ஆடியோ ரெக்கார்டர், டிஜிட்டல் கேமரா போன்ற நவீன சாதனங்களை கொண்டிருக்கின்றனர், ஆனால் அலுவலகம், இருக்கை, பெயர் பலகை, தொலைபேசி எதுவும் இல்லாமல் இருக்கின்றனர்" என வர்ணித்துள்ளது. அதி தீவிரமாக உள்ளூர் செய்திகளை இணைய பதிப்பிலும் அச்சு பதிப்பிலும் வெளியிட வழி செய்வதுதான் இவர்கள் குறிக்கோள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் அங்கம் வகித்த செல்பேசி இதழாளர்களில் ஒருவரான சக் மைரன் (Chuck Myron) என்பவர் இந்த முயற்சி பற்றி விமர்சன நோக்கிலேயே கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இப்போது திரும்பி பார்க்கையில் இந்த தொழில்நுட்பம் தவறாக கையாளப்பட்டதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேட்டை செய்திகளை சேகரிக்க குடிமக்கள் இதழாளர்களே பொருத்தமானவர்கள், இதற்கு தொழில்முறை இதழாளர்களை பயன்படுத்தியது சரியல்ல என்று அவர் கூறியிருந்தாலும், அப்போது இதழாளர்கள் கொடுக்கப்பட்ட சாதனங்கள் எங்கிருந்தும் செய்தி சேகரிக்க வழி செய்தது என்றும், அதையே செய்தியாளர்கள் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.

செல்பேசி இதழியலின் முன்னோடி

செல்பேசி இதழியிலின் ஆதார பலமும் இந்த அம்சம்தான். எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் செய்தியை வெளியிட வழி செய்வதே செல்பேசி இதழியலை இன்றியமையாத கருத்தாக்கமாக ஆக்கியிருக்கிறது. சில வரிச் செய்திகள் அவற்றுடன் படங்கள் அல்லது மங்கலாக வீடியோவை வெளியிடுவது என இருந்த ஆரம்ப நிலை மாறி செல்பேசி இதழியல் இன்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொலைக்காட்சி தரத்திலான ஆடியோ, வீடியோ செய்திகளை உடனுக்குடன் வழங்க முடிவதோடு, தேவை எனில் அங்கிருந்தே நேரடி ஒளிபரப்பில் ஈடுபடவும் செல்பேசி இதழியல் கைகொடுக்கிறது. இது தவிர பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சேட் மற்றும் செயலிகள் என பல தளங்களில் பல வடிவங்களில் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.

தி நியூஸ் பிரஸ் நாளிதழுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடகங்களும், செய்தியாளர்களும் செல்பேசி இதழியல் சார்ந்த முயற்சியில் ஈடுபடத்துவங்கினர். செல்பேசி இதழாளர்களை மோஜோ என குறிப்பிடும் வழக்கமும் அறிமுகமானது. இதே கால கட்டத்தில் தான், முன்னணி ஊடகமான தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், செல்பேசி இதழாளர்களுக்கான பயிற்சியையும் துவக்கியது. 2007-ம் ஆண்டின் மத்தியில் இதற்கான முயற்சி ஆரம்பமானது.

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம், செல்பேசி மூலமான செய்தி சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டதோடு, தனது செய்தியாளர்களுக்கு செல்பேசி செய்தி சேகரிப்பிற்கான முழு அளவிலான பிரத்யேக சாதனங்களையும் வழங்கியது. எனவே செல்பேசி இதழியலின் முன்னோடி முயற்சியாக இது அமைகிறது. லண்டன் தலைமையகத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செல்பேசி நிறுவனமான நோக்கியாவுடன் இணைந்து இதை செயல்படுத்தியதுதான் ஆச்சர்யமான விஷயம். அப்போது நோக்கியா செல்போன் சந்தையில் முன்னணியில் திகழ்ந்தது என்பதை மீறி இது ஆச்சர்யமானது தான், ஏனெனில் செல்பேசி இதழியலின் அறிவிக்கப்படாத அதிகார்பூர்வ சாதனமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனே கருதப்படுகிறது. உண்மையில் ஸ்மார்ட்போனுக்கான சகலவித சாத்தியங்களுடன் ஐபோன் அறிமுகமான பிறகே செல்போனில் இருந்தே தரமான படங்களையும் வீடியோக்களையும் எடுத்து அனுப்பலாம், அதிலேயே நேர்த்தியாக எடிட் செய்யலாம் என்ற நம்பிக்கை பயனாளிகளுக்கு உண்டானது. இதன் பயனாக ஆரம்ப கால செல்பேசி இதழியல் முயற்சிகள் மற்றும் பயிற்சி கையேடுகள் ஐபோன் சார்ந்தே அமைந்திருந்தன. காலப்போக்கில் திறன் வாய்ந்த ஆண்ட்ராய்டு போன்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவானாலும், ஐபோனே பலரது முதல் தேர்வாக இருக்கிறது.

ஆனால் 2007-ல் தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், செல்பேசி இதழியலுக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டபோது, அதற்கேற்ற பிரத்யேக செல்போனை வழங்க நோக்கியாவையே நாடியது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு வரிவடிவ செய்திகள், ஆடியோ மற்றும் வீடியோக்களை எடிட் செய்து வெளியிடும் செயலி கொண்ட நோக்கியா 95 போன் வழங்கப்பட்டது. மைக், கீபோர்டு, டிரைபாடு, மற்றும் சோலார் சார்ஜர் உள்ளிட்ட சாதனங்களும் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் உதவி இல்லாமலே செய்தியாளர்கள் போனிலேயே எல்லாவற்றையும் செய்ய முடிந்தது.

கேமரா பதிவில் தனித்துவம்

நியூயார்க் பேஷன் ஷோ, எடின்பர்க் திரைவிழா மற்றும் கேட்ஜெட் விழா 2007 ஆகிய நிகழ்ச்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் செல்போன் மூலமே செய்தி சேகரித்து வெளியிட்டனர். மல்டிமீடியா என சொல்லப்படும் ஆடியோ, வீடியோ என பல ஊடகவடிவங்கள் இணைந்த செய்தி வெளியீட்டில் கவனம் செலுத்தும் வகையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. அப்போது நிறுவன எடிட்டராக இருந்த மார்க் ஜோன்ஸ், "செய்தி வெளியீட்டிற்கான புதிய வழியை நாடுகிறோம்" என இது பற்றி குறிப்பிட்டிருந்தார். நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைவரான இலிகோ எலியா, செய்தியாளர்கள் எடை அதிகமான சாதனங்களுக்கு பதிலாக லேசான சாதனத்தை எடுத்துச்செல்ல செல்போன் வழி செய்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்களும் செல்பேசி இதழயலின் ஆற்றலால் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக வழக்கமான கேமராக்கள் மற்றும் மைக்குகளை விட செல்போன்கள் இடையூறு இல்லாதவையாக பார்க்கப்பட்டதாக உணர்ந்தனர். 'அற்புதம் என்னவெனில், யார் அருகிலும் சென்று படம் அல்லது வீடியோ எடுக்கலாம், இதை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். முழு அளவிலான செய்தியாளர் குழு இல்லாத இடங்களில் மக்களின் உணர்வுகளை பதிவு செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு இருக்கிறது. எங்கும் எடுத்துச்செல்லும் ஆற்றலே இதை உற்சாகமானதாக ஆக்குகிறது" என்று மேட் கோவன் எனும் செய்தியாளர் இந்த அனுபவம் பற்றி உற்சாகமாக கூறியிருக்கிறார்.

இந்த முயற்சி மகத்தான வாய்ப்புகளை கொண்டதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். "செல்பேசி இதழியலிக்கான செயலி தனது போனில் ஏற்றப்பட்டதுமே அந்த சாதனத்தின் ஆற்றலை உணர்ந்ததேன். மேலும் அதிக அளவிலான தினசரி வாழ்க்கையை பதிவு செய்யும் திறன் இதற்கு இருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தப் பிரிவில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மோஜோ பயிற்சி திட்டம், மோஜோ விருதுகள் ஆகியவற்றையும் வழங்கி வருகிறது. 

யுத்தக் களத்தில் மோஜோ!

இதனிடையே பிபிசி ஊடகமும் செல்பேசி இதழியலின் சாத்தியங்களை உணர்ந்து இதை நடைமுறைப்படுத்த துவங்கியிருந்தது. 2008-ம் ஆண்டில் அதன் தொழில்நுட்ப எடிட்டரான டெரன் வாட்டர்ஸ் ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து செல்போன் மூலம் செய்திகளை வழங்கி வந்தார். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலக செல்போன் மாநாட்டில் இருந்து அவர் நோக்கியா போன் மூலம் வீடியோ செய்திகளை அளித்தார். இந்தச் சோதனை முயற்சியில் வீடியோவின் தரம் அத்தனை சிறப்பாக இல்லை என்றாலும், இந்த அனுபவம் மூலம் பலவற்றை கற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த முயற்சியின் மூலம் தொழில்நுட்பம் பற்றி மட்டும் அல்லாமல் பணி அமைப்பு பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்ததாக அவர் கூறியிருக்கிறார். பிரத்யேகமானவை, உடனடி செய்தி ரகம் மற்றும் விநோதமான வீடியோக்கள், அதிக கிளிக் பெற்றதாகவும் இவை செல்பேசி இதழியலுக்கு ஏற்றவை என்றும் குறிப்பிடுகிறார். நேர்க்காணல்களைப் பொருத்தவரை குறுகிய கால அளவிலானவை ஏற்றவை என்றும் சொல்கிறார்.

பிபிசி தொடர்ந்து செல்பேசி இதழியல் சார்ந்த முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது. செய்தியாளர்கள் ஒலி மற்றும் காணொலி செய்திகளை சமர்பிப்பதற்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. பிபிசி போலவே அல்ஜஸிரா தொலைக்காட்சி நிறுவனமும் செல்பேசி இதழியலில் தீவிர கவனம் செலுத்தியது. அதிலும் குறிப்பாக கேமரா படையுடன் செல்வது ஆபத்தானதாக கருதப்படும் பிரச்சனைக்குரிய இடங்களில் செல்பேசி மூலம் செய்தியாளர்கள் செய்தி சேகரித்து அளிப்பதை ஊக்குவித்தது. யுத்த பூமிகளில் சாமானியர்கள் போல இயங்கிய அதன் செய்தியாளர்கள் செல்பேசியிலேயே ஆவணப்படங்களை தயாரித்து அளித்தனர். 

இதேபோல அயர்லாந்து நாட்டின் அரசு ஊடகமான ஆர்டிஇ செல்பேசி மூலம் செய்தி ஒளிபரப்புவதில் தனி ஆர்வம் காட்டியது. நார்வே நாட்டின் அரசு ஊடகமான என்.ஆர்.கே சார்பில் பிராங்க் பார்த் நீல்சன், செய்தியாளர்களுக்கு செல்பேசி இதழியல் பயிற்சி அளித்து ஊக்குவித்தார். செய்தியாளர்களுக்கான செல்பேசி இதழியல் சாதன தொகுப்பும் உருவாக்கி அளிக்கப்பட்டது. செல்பேசி இதழியல் அனுபவங்களை இவர் மோஜோ எவல்யூஷன் எனும் வலைப்பதிவு மூலம் பதிவு செய்துள்ளார்.

ஆசிய நாடுகளைப் பொருத்தவரை பிலிப்பைன்சின் டெய்லி என்கொயரர் நாளிதழ் அதன் இணைய பதிப்பிற்காக 2007-ம் ஆண்டிலேயே செல்பேசி இதழியலை அறிமுகம் செய்தது. செய்தியாளர்கள் நோக்கிய போன் மூலம் செய்தி வழங்கினர். செய்தி மற்றும் புகைப்படங்களை அனுப்புவது எளிதாக இருந்தாலும் காணொலிகளை அனுப்பி வைப்பது பெரும் சோதனையாக இருந்தது. செய்தியாளர்கள் காணொலிகளை எடுத்துவிட்டு, இணைய மையங்கள் அல்லது வீட்டிற்கு சென்று அதிவேக இணைப்பு மூலம் அனுப்பி வைக்க முயல்வார்கள். 

இதனிடையே ஐபோனின் அறிமுகம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐபோனின் நேர்த்தியும் ஆற்றலும் பயனாளிகளை கவர்ந்ததோடு, இதழாளர்களையும் கவர்ந்தது. குறிப்பாக செய்தி சேகரிப்பு மற்றும் கதை சொல்லலுக்கான புதிய நுட்பங்களை எதிர்பார்த்திருந்தவர்களை மிகவும் ஈர்த்தது. அது மட்டும் அல்ல, செல்போன் பயன்பாட்டில் இருந்த போதாமைகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும் ஐபோன் அமைந்திருந்தது. தொடர்ந்து வந்த மாதிரிகளில் கேமரா மற்றும் ஒலியின் தரம் மேலும் மேப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக ஐபோனுக்காக அறிமுகமான கேமரா, எடிட்டிங் சார்ந்த பிரத்யேக செயலிகள் அதன் பயன்பாட்டை பன்மடங்கு உயர்த்தின. முன்னாள் பத்திரிகையாளர் உருவாக்கப்பட்ட வெரிகோடர் நிறுவன செயலிகள் செல்பேசி இதழியலுக்கான முழுவீச்சிலான வசதிகளை வழங்கியது. இதன் விளைவாக பல முன்னணி ஊடகவியலாளர்கள் ஐபோன் சார்ந்த காணொலி உருவாக்கத்தில் ஈடுபட்டு செல்பேசி இதழியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். 

ஆஸ்திரேலியாவின் இவோ புரும், அயர்லாந்தின் கிளன் மெக்லஹே, ராப் மாண்ட்கோமெரி (Robb Montgomery) ஸ்டீபன் குவின் உள்ளிட்டோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். (இவர்களைப்பற்றி முன்னோடிகள் பகுதிகளில் தனியே காணலாம்). ஐபோனின் வருகை மட்டும் அல்ல, செல்பேசி மூலம் இணைய இணைப்பின் வேகம் 3ஜி, 4ஜி என அதிகரித்தது மற்றும் பொதுவாகவே ஸ்மார்ட்போன்களின் செயல்திறன் அதிகரித்தது ஆகியவையும் செல்பேசி இதழியல் வளர்ச்சிக்கு உதவியது. பிளாக்பெரி போன் இமெயில் அனுப்பும் ஆற்றலுக்காக செய்தியாளர்களின் உற்ற நண்பனாக இருந்திருக்கிறது. பின்னர் ஆண்ட்ராய்டு போன்கள் பிரபலமாகத்துவங்கின. ஐபோனோடு ஒப்பிடும் போது இவை விலை குறைந்தவையாக இருந்ததும், அதே நேரத்தில் தரத்தில் நிகரானவையாகவும் இருந்தது செல்பேசி இதழியல் மேலும் பரவலாக வித்திட்டது.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ - 2 | செல்பேசி இதழியலின் தேவை என்ன?

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close