மோஜோ 8 | கதை சொல்லுதலின் 5 அடிப்படை அம்சங்கள்

  சைபர்சிம்மன்   | Last Modified : 16 Apr, 2018 02:27 pm

செய்திகளுக்கு ஒரு வடிவம் இருக்கிறது. செய்திக் கட்டுரைகளுக்கும் ஒரு வடிவம் இருக்கிறது. இவற்றில் என்ன எல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான இலக்கணம் இருக்கிறது. தொலைக்காட்சி செய்திகளுக்கும் இவை பொருந்தும். இணைய செய்திகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

 செல்பேசி மூலம் சொல்லப்படும் கதைகளுக்கும் இந்த அடிப்படைகள் பொருந்தவே செய்யும். நவீன செல்பேசிகள் பல் ஊடகத்தன்மையோடு கதை சொல்வதை எளிதாக்கி இருக்கின்றனவேத் தவிர, செய்திக்கான அடிப்படை அம்சங்களில் எதையும் மாற்றிவிடவில்லை. எனவே, செல்பேசியில் சொல்லப்படும் கதைகளும் இந்த இலக்கணத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். 

அதாவது, செய்தியின் ஆதார அம்சங்களான யார், என்ன, எப்போது, எங்கு, ஏன் மற்றும் எப்படி (who, what, when, where, why and How) ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். செல்பேசி இதழியலில் ஈடுபடும் எவரும் இந்த இலக்கணத்தை மீற முடியாது. இந்த அம்சங்களை கடைப்பிடிப்பதற்கான எளிய வழியை செல்பேசி இதழியல் முன்னோடிகளில் ஒருவரான இவோ புரும், ஸ்கிராப் வடிவில் முன்வைக்கிறார்.

ஸ்கிராப் என்பது ஸ்டோரி, கேரக்டர்ஸ், ரிசல்யூஷன், ஆக்சுவாலிட்டி மற்றும் புரொடக்‌ஷன் ஆகிய ஐந்து வார்த்தைகளின் முதல் எழுத்துகளாக அமைகின்றன. இந்த ஐந்து கருத்தாக்கங்களையும்தான் இவோ புரும், பல் ஊடகக்கதை சொல்லலின் ஐந்து அடிப்படை அம்சங்கள் என்கிறார். தொலைக்காட்சி மற்றும் வீடியோ இதழியலில் இந்த அம்சங்களே தனக்கு வழிகாட்டியாக இருந்தன என்கிறார் அவர். இந்த அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். 

ஸ்டோரி:

ஸ்டோரி என்பது கதையைக் குறிக்கிறது. செய்தி அம்சத்தை குறிப்பதாகவும் புரிந்து கொள்ளலாம். களத்தில் இறங்கி செயல்படுவதற்கு முன் என்ன கதை அல்லது என்ன செய்தி என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அதாவது எதற்காக இந்த நிகழ்வை பற்றி சொல்ல முயற்சிக்கிறோம் என தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதை 'என்ன' எனும் அம்சமாக கருதலாம்.

கேரக்டர்ஸ்: 

 அடுத்ததாக, கேரக்டர்ஸ் என்பதை செய்தியின் பாத்திரங்கள் என புரிந்து கொள்ளலாம். செய்தியை நமக்கு சொன்னவர் அல்லது செய்தி தெரியவர காரணமானவர் என வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் இந்த அம்சமே கதை அல்லது செய்தியின் துவக்கமாக அமைகிறது. கதையின் நோக்கம், அதில் இடம்பெற வேண்டிய பாத்திரங்கள், நிகழும் இடங்கள் ஆகியவை குறித்த தெளிவை அளிக்கவும் இது உதவுகிறது. யார் எனும் அம்சமாக இது அமைகிறது.

ரிசல்யூஷன்: 

அடுத்ததாக வருவது ரிசல்யூஷன். தெளிவு என இதைப் புரிந்து கொள்ளலாம். கதையின் துவக்கம், இடைப்பட்ட பகுதி மற்றும் முடிவை இது குறிக்கிறது. செய்தியின் போக்கை தீர்மானிப்பது கடினம் என்றாலும், அதன் அமைப்பு பற்றிய தெளிவான சித்திரம் இருப்பது அவசியம். ஏன் எனும் கேள்விக்கான பதிலாக இது அமைகிறது.

ஆக்சுவாலிட்டி:

நான்காவது அம்சம் ஆக்சுவாலிட்டி. நிகழ்வுகள் என இதைப் புரிந்து கொள்ளலாம். கதையை விவரிக்கத் தேவையான, நிகழ்வுகள், நேர்காணல்கள், துணைக் காட்சிகள், பின்னணி என எல்லாவற்றையும் இது குறிக்கிறது. எவற்றை, யாரை, எங்கே, எப்போது படம் பிடிப்போம் என்பதை இது உணர்த்துகிறது.

தயாரிப்பு:

ஐந்தாவது மற்றும் இறுதி அம்சம் மேல் சொன்ன எல்லாவற்றையும் களத்தில் ஒன்றிணைப்பதாகும். தயாரிப்பு நிலை இது. எங்கே செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் போன்ற முக்கிய அம்சங்கள் இதன் மூலம் நிறைவேறுகிறது.

தெளிவான திட்டமிடல் தேவை

இந்த ஐந்து அம்சங்களும் கதை சொல்லும்போது சாத்தியமாக வேண்டும் என்றால் அதற்காக திட்டமிட வேண்டும். அதற்கு முன் போதுமான ஆய்வில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நம்மிடம் வலுவான கதை அல்லது செய்தி இருக்க வேண்டும். அது சுவாரஸ்யமானதாகவோ, தகவல் நோக்கிலோ அல்லது உணர்வுபூர்வமாகவோ இருக்கலாம். ஆனால், அத்தகைய கதை அல்லது செய்தி கையில் இருந்தால் மட்டுமே களத்தில் இறங்கி செயல்பட முடியும். இல்லை என்றால் அவை வெற்று காணொலியாகவே அமையும். அவற்றில் சில பார்வையாளர்களை கவரலாம், இன்னும் சில வைரலாகி புகழ் பெறலாம். ஆனால் கவனத்தை ஈர்ப்பதால் மட்டுமே அவை செய்திகளுக்கு நிகரானவையாகிவிடாது. 

மோஜோ வடிவில் சிறந்த கதை சொல்ல வேண்டும் எனில், இவோ புரும் விவரிக்கும் ஸ்கிராப் இலக்கணத்திற்கு பொருந்தி வர வேண்டும். இந்த இலக்கணப்படி செயல்படுவதற்கு தேவையான திட்டமிடலையும், வழிமுறைகளையுமே புருமே குறிப்புகளாக வழங்கியுள்ளார்.

கதைக்கான தெளிவான கரு, அதை செயல்படுவத்தற்கான அம்சங்கள் பற்றிய தெளிவு ஆகியவற்றோடு குறிப்பேட்டையும் கையில் எடுத்துக்கொண்டு களமிறங்க வேண்டும் என்கிறார் புரும்.

முதல் விஷயம், நாம் எடுக்க விரும்பும் மோஜோ கதை சாத்தியமானதா என யோசிக்க வேண்டும். இந்தக் கட்டத்தில் ஸ்கிராப்பில் குறிப்பிடப்படும் தயாரிப்பு நிலை தொடர்பான அம்சங்களை யோசிக்க வேண்டும் என்கிறார். படமாக்க கூடிய காட்சிகளையே திட்டமிட வேண்டும். அவை களத்தில் சாத்தியமா என யோசிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வரிசையாக பனை மரங்கள் பின்னணியில் அமைந்த சாலையில் ஒரு காட்சி தேவை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் உள்ள சூழலில் பனைமரங்கள் இல்லாத நிலையில் என்ன செய்வது? இதற்காக விரும்பிய வகையில் காட்சிகளை அமைப்பது பற்றி கனவு காணக் கூடாது என்றில்லை. நீங்கள் சொல்ல இருக்கும் கதைக்கு தேவையான காட்சி அமைப்புகள் பற்றி தாராளமாக யோசிக்கலாம். ஆனால் அவற்றின் நடைமுறை சாத்தியம் பற்றியும் யோசிப்பது செயலாக்கத்தில் பேருதவியாக இருக்கும் என்பதே விஷயம்.

அடுத்ததாக, நாம் எடுக்க விரும்பும் கதைக்கு ஏற்ற உபகரணங்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும். டிரைபாடு, மைக் போன்றவை தேவையா என தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 

இந்த ஆய்விற்கு பிறகு களத்திற்கு செல்பேசி கேமராவுடன் செல்லலாம். ஆனால், களத்திலும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்காக அங்கும் இங்கும் அலையும் நிலை வரலாம், தயாராக இருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் காட்சி அமைப்பு அல்லது நீங்கள் நேர்காணல் செய்ய இருக்கும் சரியான நபரை கண்டடைய மெனக்கெட வேண்டும். களத்தில் தெரிய வரும் விஷயங்களுக்கு ஏற்ப உங்கள் திட்டத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டி வரலாம். இதற்காக கவலைப்பட வேண்டாம். 

படப்பிடிப்பை துவங்கும் முன், எப்படி காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பது தொடர்பாக உங்களிடம் தெளிவான ஒரு திட்டம் இருக்க வேண்டும். கதைக்கு அடிப்படையான ஒரு வரையறை இருக்க வேண்டும். ஒரு ஆரம்பம், இடைப்பட்ட பகுதி மற்றும் முடிவு என அனுமாதித்திக்கொண்டு அதற்கேற்ற காட்சிகளை மனதில் திட்டமிட்டுக்கொள்ளலாம். ஏற்கெனவே சொன்னது போல் களத்தில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்றாலும், காட்சிகளுக்கான ஒரு அடிப்படை அமைப்பு இருப்பது வழிகாட்டியாக அமையும். கதையின் மையக்குரு பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவும்.

உதவும் காட்சிகள்:

கதை அமைப்பு என்பதை மிக எளிதாக ஐந்து புள்ளித் திட்டமாக உருவாக்கி கொள்ளலாம். அதாவது ஓர் ஆரம்பம், இடைப்பட்ட பகுதி, முடிவு மற்றும் இவற்றின் இடையே ஒரு முக்கிய அம்சம் இடம்பெறுமாறு வைத்துக்கொள்ளலாம். சிறிய குறிப்பேட்டில் இதை எழுதி வைத்துக்கொள்ளலாம். ஆரம்பக் காட்சி என்ன, அதில் இடம்பெற வேண்டிய அம்சம் என்ன, அடுத்த காட்சிகள் எவை, எங்கு நேர்காணல் வரும் என்பது போன்ற குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளலாம். படப்பிடிப்பின் போது கவனிக்கும் விஷயங்களையும் இதில் குறித்துக்கொள்ளலாம்.

கதைக்காக பலரை நேர்காணல் செய்யலாம் எனும் நிலை இருந்தால் அவர்களில் மிகவும் சுவாரஸ்யமானவர்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்தக் கட்டத்தில், கதையை உங்களுக்கு கூறியவர் அல்லது யார் மூலம் கதையை தெரிந்து கொண்டீர்களோ, அவர்கள் படத்தில் கதை சொல்ல பொருத்தமானவரா? என்றும் யோசியுங்கள். ஆம், எனில் அவரையே தேர்வு செய்து கொள்ளலாம்.

கதைக்கேற்ற அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு தேவையான பின்னணி காட்சிகள் என்ன என யோசிக்க வேண்டும். முடிந்தவரை விதவிதமான காட்சிகளை படம் பிடித்துக்கொள்ள வேண்டும். கதையின் தன்மைக்கேற்ப கிரிக்கெட் விளையாடும் மாணவர்கள், பள்ளியில் இருந்து திரும்பும் மாணவர்கள். பேரணியாக செல்பவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்கள், பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் போன்ற காட்சிகளை படமாக்கி கொள்ளலாம். (காட்சிகளை படமாக்கும் விதம் பற்றி தனியே பார்க்கலாம்). மூல காட்சியின் மீது இணைக்க, அல்லது விவரணை செய்ய இந்தக் காட்சிகள் உதவும். கதை நிகழும் இந்தக் காட்சிகள் உயிர்த்துடிப்புடன் பார்வையாளர்களை கவரும்.

நேர்காணலின்போது...

கதைக்கான நேர்காணலில் ஈடுபடும்போது கேமரா முன் பேசுபவர்களை சகமனிதர்களாக, உங்களைப்போன்ற கதைச்சொல்லிகளாக பார்ப்பது அவசியம். இந்த உணர்வு இருக்கும்போது அவர்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் தோன்றும். அவர்களை சரியான சூழலில் வைத்து பேச வைக்க முடியும். நேர்காணல் காண்பவர் சொல்லும் விஷயத்தை அப்படியே பயன்படுத்திக்கொள்வதைவிட, அவர் சொல்லும் கருத்துக்களை பகுதி பகுதியாக பிரித்து, பொருத்தமான இடங்களில் சிறந்தப் பகுதியை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான படத்தொகுப்பு ஏற்றதாக இருக்கும்.

காட்சி அமைப்புகளின் வரிசையில் நேர்காணல் காண்பவரை நேரடியாக அறிமுகம் செய்யலாம் அல்லது, அவர்களைப் பற்றிய அறிமுக குறிப்புகளை அளித்துவிட்டு பேச வைக்கலாம். நீங்கள் அறிமுகம் செய்து வைக்கிறீர்கள் எனில், அவர்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் திரையில் காண்பிக்கப்பட வேண்டும். இதுதான் மரபு என்பதோடு கதை ஓட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கும். கதையின் கருவுடன் தொடர்புடைய ஒரு விஷயத்தில் நேர்காணல் செய்யப்படுபவர் ஈடுபட்டிருந்தால், அது தொடர்பான ஒரு காட்சியை பதிவு செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக அவர் நெசவு தொழிலாளி என்றால், நெசவு செய்வது போன்ற காட்சி அவசியம். இதை மறக்காமல் இருப்பது நல்லது.

கதையை விவரிக்க பொதுவாக பி.டி.சி எனப்படும் பரசன் டு கேமரா முறையை நீங்கள் கையாளலாம். அதாவது கேமராவை பார்த்து பேசிய படி அறிமுகம் செய்வது. இது தவிர ஒரு சில காட்சிகளை காண்பித்து, இசைக்கோர்ப்புடன் துவங்கும் முறையையும் கையாளலாம்.

ஆனால், முதலில் கதை எங்கே நிகழ்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு குழப்பம் இல்லாமல் உணர்த்தி விடவேண்டும். நாம் வயல்வெளியில் இருக்கிறோமோ அல்லது கால்பந்து மைதானத்தில் இருக்கிறோமா என்பதை உணர்த்த வேண்டும். இதற்காக வைடு ஷாட் எனப்படும் அகன்ற காட்சியை பயன்படுத்தலாம். இதை கதை நிறுவும் காட்சி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்தக் காட்சி நீளமாக இல்லாமல், நறுக் என இருப்பது நல்லது. இதனுடன் இணைந்த காட்சிகளை வரிசையாக படமாக்கி கொள்ளவும்.

எல்லா நேரங்களிலும் பரந்த காட்சியை தான் முதல் காட்சியாக வைக்க வேண்டும் என்றில்லை. கதைக்கேற்ப குளோஸ் அப் காட்சிகளை காண்பித்துவிட்டு, நிறுவும் காட்சிக்கு வரலாம். அறிமுக வர்ணனையை இந்தக் காட்சிகளுடன் இணைத்துக்கொள்ளலாம். அறிமுக வர்ணனையை கதை சூழலில் படமாக்கி கொள்ள வேண்டும். அறிமுகம் வர்ணனையை துவக்கத்தில் தான் வைக்க வேண்டும் என்றில்லை, பொருத்தமான எந்த இடத்திலும் பயன்படுத்தலாம்.

அறிமுக வர்ணனை துடிப்புடன் இருக்க வேண்டும். வெற்று பரப்போ, அர்த்தமில்லா அமைதியோ நிலவக்கூடாது. நடந்தபடி பேசவும் முயற்சிக்கலாம். பேசுவதை கேமரா பார்த்து பேச வேண்டும். குறிப்புச்சீட்டை பார்த்து பேசக்கூடாது. இதை முன்கூட்டியே பேசிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

கதை மற்றும் நேர்காணலில் பேசுபவர் குறிப்பிடும் விஷயங்களுக்கு பொருத்தமான காட்சிகளை படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதை தொடர்புடைய இடத்தில் இணைத்துக் காட்டலாம். உதாரணத்திற்கு உள்ளூர் மக்கள் பற்றிய குறிப்பு வந்தால், திரையில் உள்ளூர்வாசிகளை இணைத்துக் காட்டலாம்.

காட்சிகளை படம் பிடிப்பதில் நாம் கவனம் செலுத்தினாலும், ஒலி முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. பேசுபவர்கள் சொல்வது தெளிவாகப் பதிவாக வேண்டும். தேவை எனில் தனி மைக் பயன்படுத்தலாம் அல்லது பேசுபவர் அருகே சென்று பதிவு செய்யலாம். ஆனால் ஒலி முக்கியம். சுற்றுப்புற ஒலிகளையும் கவனிக்க வேண்டும். கட்சிகள் பதிவாக போதுமான வெளிச்சம் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். 

இயன்றவரை பலவிதமான ஷாட்கள் எடுத்து வைத்துக்கொண்டால் காட்சிகளை தொகுக்கும்போது கைகொடுக்கும். இதன் மூலம் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும் வகையில் கதை சொல்லலாம். (ஷாட்கள் அமைப்பு பற்றி தனியே பார்க்கலாம்.)

கதையின் முக்கிய அம்சங்களை உணர்த்த சுவரொட்டிகள், கையேடுகள், புள்ளிவிவரங்கள் போன்றவற்றை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தலாம். திட்டமிடலின் போதே இவற்றை யோசித்து வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

கதை என்ன?

*கதை ஈர்ப்புடையதா?

* இதை விவரிக்க வலுவான விஷயங்கள் உள்ளனவா?

* கதையின் தாக்கம் என்ன?

கதை மாந்தர்கள் யார்?

* கதையில் வரும் பாத்திரங்கள் சுவாரஸ்யம் அளிப்பவர்களா?

* கதையின் பிரதான பாத்திரம் ஈர்ப்பு மிக்கவரா?

* கதை மாந்தர்களின் ஊக்கம் என்ன? அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

* அவர்கள் நமக்கு கற்றுத்தருவது என்ன?

கதை அமைப்பு

* கதை அமைப்பு சுவாரஸ்யமாக, பார்வையாளர்களுக்கு தகவல் அளிக்கும் வகையில் உள்ளதா?

* தெளிவான அமைப்பு இருக்கிறதா?

* கதை எப்படி முடிகிறது. அது சொல்லும் செய்தி என்ன?

* மேற்கொண்டு புரிதலை அளிக்க வல்லதாக இருக்கிறதா?

நிகழ்களம் என்ன?

கதையை எப்படி படமாக்குவது என அறிந்திருக்க வேண்டும்.

கதை பாணி

கதையை திட்டமிட்டபடி எடுத்து முடிக்க முடியும் என்ற உறுதி வேண்டும்.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 7 | செல்பேசி இதழியலில் கதை சொல்வது எப்படி? 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close