தூத்துக்குடி போராட்டம்: உங்கள் கைப்பேசிதான் ஆயுதம்!

  சைபர்சிம்மன்   | Last Modified : 24 May, 2018 02:19 pm

தூத்துக்குடி போராட்டத்தை திரிக்கத் துவங்கிவிட்டார்கள். துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட உயிர்கள் பலியானது தொடர்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், போராட்டம் திசை மாறியதாகவும், போராட்டக்கார்கள் மத்தியில் ஊடுருவிய கலவரக்காரர்கள் என்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறது.

 போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் எழும் நிலையில், அவற்றுக்கு அரசு பதில் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் நிலையில், இந்த நடவடிக்கை தவிர்க்க இயலாதது எனும் செய்தியை உணர்த்தும் முயற்சியாக, போராட்டக்கார்கள் மத்தியில் கலவரக்கார்கள் எனும் வாதம் அமைந்துள்ளது. இது எத்தனை வேதனையானது.

ஓர் அரசு சொந்த மக்கள் மீதே ஆயுதப் பிரயோகம் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இது அரசு பயங்கரவாதம் என சுட்டிக்காட்டுப்படுவதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. சமீபத்திய போராட்டம் 99 நாட்கள் நீடித்த நிலையில், 100-வது நாள் நிகழ்வு கைமீறிப் போய் துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கிறது. 10 பேருக்கு மேல் பலியான தகவலும், அவர்களில் 17 வயது பள்ளி மாணவி ஒருவரும் பலியானார் என்ற தகவலும் நெஞ்சை பதறச் செய்கிறது.

இந்தப் போராட்டதை அரசு கையாண்ட விதம், குறிப்பாக போராட்டத்தின் 100-வது நாளில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடந்து கொண்ட விதம் பலவித கேள்விகளை எழுப்புகிறது. துப்பாக்கிச் சூட்டிற்கு முன் எச்சரிக்கை செய்யப்படவில்லை என்பதும், வானத்தை நோக்கி சுடாமலும், வழக்கமாக செய்வது போல கால்களுக்கு கீழே சூடாமல், நெஞ்சை நோக்கி சுட்டிருப்பதாக கூறப்படுவதும் இந்த நடவடிக்கையின் உள் நோக்கம் அல்லது உண்மையான நோக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. 

காவல்துறை தரப்பில் திட்டமிட்டு குறிபார்த்து சுடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது, போராட்டக்கார்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இவ்வாறு செய்யப்பட்டதாக எண்ண வைக்கின்றன.

தமிழகம் பல்வேறு பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில், அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் தன்னெழுச்சி காணப்படும் சூழலில் போராட்ட எண்ணம் கொண்டவர்களுக்கான உளவியல் எச்சரிக்கையாகவே இது அமைவதாக குற்றம் சாட்டப்படுவதையும் மறுப்பதற்கில்லை.

அமைதியாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்று சொல்வதும், அதன் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக சொல்லப்படுவதும், அரசின் பொறுப்பற்ற செயல்பாட்டிற்கான சமாதானமாகவும், இந்தப் போக்கை தட்டிக்கேட்க வேண்டிய சிவில் சமூகத்தின் கடமையை மழுங்கடிக்கும் வாதமாக அமைந்துவிடாதா என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

நிச்சயம் இது குறித்தெல்லாம் இதழாளர்கள் கள நிலவரத்தை உள்ளது உள்ளபடி பதிவு செய்து, ஆழமான விசாரணைக்கு உட்படுத்தி செய்திகளை அளிக்க வேண்டும். இதனிடையே ஊடகங்கள் செயல்பாடு தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன. 

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட உடன், அது தொடர்பான செய்தி எல்லா ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவத்துடன் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுவது கவலை அளிக்கிறது. வழக்கமாக சிறு நிகழ்வுகளை கூட 'பிரேக்கிங் நியூஸ்' ஆக்கி, விடாமல் விவாதிக்கும் காட்சி ஊடகங்களில் சில அர்த்துமுள்ள மவுனத்தை அல்லது மென்போக்கை கடைபிடித்ததாக சொல்லப்படுகிறது. அரசு கேபிள் சேவையில் இடம் கிடைக்காமல் போகலாம் எனும் அச்சம் இதற்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

பொதுவாக ஒரு சில ஊடகங்கள் தங்கள் நிலைப்பாட்டிற்கு ஏற்ப, அரசை விமர்சிக்கத் தயங்குவதும், பிரதிபலனை எதிர்பார்த்து அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதும் வழக்கமானதுதான். ஆனால், மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட, அப்பாவி உயிர்கள் பலியாகும் சூழலில், ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது முக்கியம்.

இது போன்ற நேரங்களில் உண்மையை உரக்கச் சொல்லாமல் இருப்பது ஊடக அறமாக அமையாது. இந்தப் பின்னணியில், சுதந்திர ஊடகத்தின் இருப்பு எத்தனை அவசியமானது என்பதை எளிதாக புரிந்துகொள்ளலாம். இப்படி கற்பனை செய்து பாருங்கள்... 

தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு அது பற்றிய செய்திகள் பெரும்பாலான ஊடகத்தில் வராமல் இருந்து, அப்படி கசிந்த செய்தி வந்ததி என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். இப்படி நடக்கவில்லை என நினைத்து நிம்மதி பெருமூச்சு விடலாம்தான் என்றாலும், இதற்கான சகலவிதமான வாய்ப்புகளும் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

ஓர் ஊடகம் எந்தச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்பதை அதன் ஆசிரியர் குழு கொள்கைதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வேறு எந்த புறக் காரணிகளும் அல்ல. (ஆசிரியர் குழு கொள்கைகளும் அடிப்படை இதழியல் அறத்தை மீறாமல் இருக்க வேண்டும்). 

கேபிள் ஒளிபரப்பில் இடம்பெறாமல் போகும் அபாயம் இருக்கும் அச்சத்தில் ஊடகங்கள் செய்திகளை தணிக்கை செய்யும் நிலை ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. ஊடகங்கள் இதற்கு அடிபணியாத நிலையிலும், அரசு கேபிள் ஒளிபரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் களத்தில் என்ன நிகழ்ந்தது அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இயன்ற வரை பொது மக்கள் பார்வையில் இருந்து மறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஜல்லிகட்டு போராட்டம் உள்பட பல நிகழ்வுகளில் இது நிகழ்ந்திருக்கிறது.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இது நிகழ்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதுவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களுக்கு எல்லையற்ற சாத்தியங்களை ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ஊடகம் என்பது, இன்று 'புதிய ஊடகம்' என்று சொல்லப்படுகிறது. பழைய கட்டுப்பாடுகள் விலகி, புதிய சாத்தியங்கள் உண்டாகியிருப்பது அதன் ஆதார பலமாக அமைந்துள்ளது. உடனடித்தன்மை, பல்லூடக செயல்பாடு, மக்களின் பங்கேற்பு, அவர்களுடனான உரையாடலுக்கான வாய்ப்பு உள்ளிட்ட அமசங்கள் புதிய ஊடகத்தின் தன்மையாக அமைகிறது. மேலும், முன்பு போல அரசாலோ வேறு எந்த அமைப்பாலோ எளிதில் தணிக்கை செய்யப்பட முடியாத தன்மையை புதிய ஊடகம் பெற்றிருக்கிறது.

இந்தச் சூழலில், மக்களை உலுக்கும் ஒரு பெரும் செய்தி நிகழ்வு பற்றிய செய்தி வெளியீடு கட்டுப்படுத்தப்பட வாய்ப்பிருக்கும் நிலை உகந்ததா? நிச்சயம் இல்லை. ஊடகம் என்பது சமூகத்தின் காவல்நாய் என சொல்லப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், கேபிள் ஒளிபரப்பை அரசு கையில் வைத்திருப்பதாலேயே, செய்தி வெளியீட்டை அல்லது அதன் தன்மை மீது தாக்கம் செலுத்துமாயின் அது சரியல்ல. விநியோக வசதி அரசிடம் இருப்பது எத்தனை விபரீதமானது என்பதை இது உணர்த்துகிறது. ஆறுதல் என்னவெனில் தொழில்நுட்பம் இதற்கான தீர்வுகளை வழங்கியிருப்பதுதான்.

பெரும் ஊடகங்கள் கட்டுப்பாட்டுக்கு இலக்கானாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களே இதழாளர்களாக மாறி தகவல்களை பகிர முடியும். இவற்றில் வதந்திகளும் கலந்திருக்கலாம் என்றாலும், நடத்த சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பொது வெளியில் பதிவு செய்யப்படுவதை இது உறுதி செய்யும். ஊடகங்கள் மீதான நிர்பந்தமாகவும் இது அமையும். அவை தொடர்ந்து மேலதிக தகவல்களை வெளியிட்டாக வேண்டும்.

சமூக ஊடகங்கள் மட்டும் அல்ல, கையில் இருக்கும் செல்பேசியே மிகச் சிறந்த ஊடக ஆயுதம் என்பதை உணர்த்தும் தருணங்களாக இவை அமைகின்றன. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக அமையும். சாமானியர்கள் இதை துணிச்சலுடன் மேற்கொள்ளலாம். இதழாளர்களும் கூட, கட்டுப்பாடு மிகுந்த சூழலில் தங்கள் கடமையை செய்ய செல்பேசியை பயன்படுத்தலாம்.

செல்பேசியை முதன்மை கருவியாகக் கொண்டு அது தரும் சாத்தியங்களை பயன்படுத்து செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது 'செல்பேசி இதழியல்' என்றும் ஆங்கிலத்தில் மோஜோ என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

கைப்பேசி கையில் இருந்தால் களத்தில் இருந்தே செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்படுவதை சாத்தியமாக்கியுள்ள 'மோஜோ' எனப்படும் செல்பேசி இதழியலின் அருமையை உணர்த்தும் தருணங்களில் ஒன்றாகவும் இதைக் கருதலாம். 

உள்ளடக்க உருவாக்கம் முதல் கொண்டு அதன் வெளியீடு அல்லது விநியோகம் வரை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்பது செல்பேசி இதழியலின் முக்கிய அம்சமாக அமைகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.