மோஜோ 12 | 'பிரேக்கிங்' செய்திகளை படம் பிடிப்பது எப்படி?

  சைபர்சிம்மன்   | Last Modified : 29 May, 2018 06:39 pm

பிரேக்கிங் நியூஸ் என குறிப்பிடப்படும் உடனடி செய்திகள் செல்பேசியில் படம் பிடித்து ஒளிபரப்ப மிகவும் ஏற்றவை. இது பரவலாக அறியப்பட்டதுதான். கடந்த சில ஆண்டுகளாகவே பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளின்போது, சம்பவ இடத்தில் தற்செயலாக இருந்தவர்கள் எடுத்த புகைப்படமோ, வீடியோ காட்சியோ அந்தச் செய்திகளுக்கான முக்கியப் பதிவாக அமைவதை பார்த்து வருகிறோம். 

பஸ் விபத்தோ, போலீஸ் தடியடி காட்சியோ செல்பேசியில் படம் பிடிக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இணையவெளி முழுவதும் வைரலாக பரவுவதை பலமுறை உணர்ந்திருக்கிறோம். 

சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையின் அடக்குமுறையை பதிவு செய்யப்பட்ட செல்போன் வீடியோக்களை சமூக ஊடங்களிலும், செய்தி ஊடங்களிலும் பார்க்க முடிந்தது. 

சில மாதங்களுக்கு முன்பாக, சென்னையில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டபோது, அந்தக் கட்டிடம் சரிந்து விழுந்த காட்சி பயனாளி ஒருவரால் செல்பேசியில் படம் பிடிக்கப்பட்டதுதான். 

எனினும், மற்ற நிகழ்வுகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கான நெறிமுறைகள் இருப்பது போலவே, உடனடி செய்திகளை செல்பேசியில் படம் பிடிப்பதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன. தற்செயலாக சம்பவ இடத்தில் இருப்பவர்களும் சரி, தொழில்முறை இதழாளர்களும் சரி, இதழியல் மாணவர்களும் சரி இவற்றை அறிந்திருக்க வேண்டும்.

செல்பேசியில் செய்திகளைப் படம் பிடிப்பதற்கான முதல் வழி, அதன் கேமராவில் படம் பிடிக்கும் அடிப்படைகளை அறிந்திருக்க வேண்டும். அனைத்து பாலபாடங்களும் தெரியாவிட்டாலும் கூட, கேமரா இயக்கத்தில் இருப்பதும், காட்சிகள் பதிவாவதும் அறிந்திருக்க வேண்டும். இயன்றவரை கேமராவில் சாத்தியமான உச்சபட்ச துல்லிய அமைப்பில் படம்பிடிக்க வேண்டும். செல்பேசியில் போதிய சேமிப்பு இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இதன் பிறகு எந்த இடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் படம் பிடிக்க நீங்கள் தயாராக இருக்கலாம். ஆனால், களத்தில் நிகழ்வுகளை படம்பிடிக்க முயலும்போது, உங்கள் பாதுகாப்பு அம்சத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நிகழ்வுகளில் கவனம் செலுத்தும்போது, அருகே வரும் வாகனத்தை கவனிக்காமல் இருப்பது போன்ற செயல்களால் ஆபத்தை உருவாக்கி கொள்ளக்கூடாது. ஆர்வ மிகுதி அல்லது பதற்றம் காரணமாக உங்களை நீங்களே பாதகமான விளைவை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். 

தொழில்முறை இதழாளர்களுக்கு இதை இயல்பாகவே கைவரப் பெற்றிருப்பார்கள். இதழியல் ஆர்வம் கொண்ட சாமானியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல கலவரம் போன்ற நிகழ்வுகளை படம் பிடிக்கும்போது, தாக்குதல் போக்கு நம் பக்கம் திரும்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பை அம்சத்தை உறுதி செய்துகொண்ட பிறகு, நிகழ்வை படம்பிடிக்க கச்சிதமான இடத்தை தேர்வு செய்து, அங்கிருந்து காட்சிகளை பதிவு செய்ய வேண்டும். இயன்றவரை நிகழ்வின் அருகே சென்று படம் பிடிக்க வேண்டும்.

பொதுவாக பரந்த காட்சியாக படம் பிடிப்பதில் துவங்கி, நிகழ்வு நடைபெறும் சூழல் மற்றும் அதன் தன்மை உணர்த்தலாம். காட்சியில் அடுத்த நிகழ்வு எங்கே தாவும் என்பதை ஊகித்து, அதை படம்பிடிக்கவும் தயாராக இருக்க வேண்டும். நிகழ்வை பின்தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

படம் பிடிக்கும்போது கேமராவில் அசைவுகள் இல்லாத வகையில் இரு கைகளாலும் வாகாக பிடித்திருக்க வேண்டும். காட்சிகள் நிலையாக பதிவாக வேண்டும். தேவை எனில் கேமரா ஹோல்டர் அல்லது டிரைபாடு சாதனம் பயன்படுத்தலாம்.

காட்சிகளை பதிவு செய்யும்போது, அருகாமையில் சாட்சியாக உள்ளவர்களின் கருத்துக்களையும் கேட்டு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். கூட்டத்தில் உள்ளவர்கள் கருத்துக்களையும் கேட்டு பதிவு செய்யலாம். காட்சிகளை ஜூம் செய்ய வேண்டாம். நெருக்கமான காட்சி தேவை எனில் அருகாமையில் சென்று படம் பிடிக்க வேண்டும். நிகழ்வு தொடர்பான ஒலியும் துல்லியமாக பதிவாவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இப்படி படம் பிடித்த பிறகு, இதை ஊடக அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். சாமானியர்கள் எனில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

காட்சிகளை படம் பிடிக்கும்போது, நமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது போலவே, எந்தவிதமான காட்சிகளை பதிவு செய்யலாம் என்பது தொடர்பான அடிப்படை அறத்தையும் மனதில் கொள்ள வேண்டும். தனிமனிதர்களை பாதிக்கும் காட்சிகளை படம் பிடிப்பது அவசியம் இல்லாதது. நாம் படம் பிடிக்கும் காட்சிகள் செய்தி நோக்கில் மக்களுக்கு எந்த அளவு அவசியமானது மற்றும் பயன் தரக்கூடியது எனும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். நிகழ்வுகள் நடைபெறும்போது செல்பேசி கேமராவுடன் நாம் அருகாமையில் இருந்தால் மிகப்பெரிய வாய்ப்பு என்றாலும், கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் படம் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. 

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 11 | செல்பேசி இதழியலில் காட்சி மொழியின் சொற்கள்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.