மோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி?

  சைபர்சிம்மன்   | Last Modified : 17 Jul, 2018 05:06 pm
mobile-journalism-and-cell-phone-photography

உலகின் மிகச் சிறந்த கேமரா எது எனத் தெரியுமா? 

இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு வியப்பளிக்கலாம். ஏனெனில், மிகச் சிறந்த கேமரா தொழில்நுட்பமோ, செயல்திறனோ சார்ந்தது அல்ல; மிகவும் தேவைப்படும்போது எந்த கேமரா உங்கள் கைகளில் இருக்கிறதோ அதுவே சிறந்த கேமரா என சொல்லப்படுகிறது. 
புகைப்படக் கலை உலகில் இந்த கருத்து மிகவும் பிரபலமானது. (சேஸ் ஜார்வின் எனும் பிரபல புகைப்பட கலைஞர் இதே தலைப்பில் புகைப்படக் கலை தொடர்பான புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.) நவீன செல்பேசி யுகத்தில் இந்தக் கருத்து இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

அநேகமாக செல்பேசி எப்போதும் உங்கள் கைகளிலேயே இருக்கலாம் என்பதாலும், செல்பேசி கேமராவையும் உள்ளடக்கியிருப்பதாலும், செல்பேசிதான் சிறந்த கேமராவாகும். 

ஆக, சிறந்த கேமரா எப்போதும் உங்கள் கைகளிலேயே இருக்கிறது. இதழியல் நோக்கில் இது மிகப் பெரிய வரப்பிரசாதம். செய்தி நிகழும் போது, புகைப்படக் கலைஞர் உடன் இல்லை என்றோ, டி.எஸ்.எல்.ஆர் கேமரா கைவசம் இல்லை என்றோ வருந்த வேண்டாம். கையில் உள்ள செல்பேசி கொண்டே காட்சியை கிளிக் செய்துவிடலாம். கேமரா போன்கள் அறிமுகமான பிறகு, இப்படி எத்தனையோ செய்திப் படங்கள் தற்செயலாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல அருமையாகவும் இருக்கின்றன.

தேவைப்படும் இடங்களில் படம் எடுக்க உதவும் செல்பேசி கேமராவின் ஆற்றலை எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடும் என்றாலும், அதன் தரம் தொடர்பான கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்படுவதை தவிர்ப்பதற்கில்லை. நிச்சயம் சக்தி வாய்ந்த டி.எஸ்.எல்.ஆர் கேமராவின் தரத்திற்கு செல்பேசி கேமரா ஈடாகாது தான். அதற்கு மாற்றாகவும் விளங்க முடியாது தான். ஆனால் அதே நேரத்தில் செல்பேசி கேமராவை இரண்டாம் பட்சமாக கருதுவதும் தவறு. 'மோஜோ டூல்கிட்' எனப்படும் செல்பேசி இதழியல் சாதன தொகுப்பில் கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது.

உண்மையில் படம் எடுக்கக் கூடிய ஆற்றலே செல்பேசியை இதழாளர்களுக்கான எல்லாம் வல்ல சாதனம் என சொல்ல வைத்திருக்கிறது. எந்த இடத்திலும் படம் எடுக்க செல்பேசி வழி செய்வதே இதழியலின் எல்லையை விரிவாக்குவதாக அமைந்துள்ளது. 
இந்தத் தன்மையோடு, செல்பேசி கேமராக்களின் செயல்திறனும் தொடர்ந்து மேம்பட்டு வருவது அவற்றை இதழாளர்களுக்கான இன்றியமையாத சாதனமாக்கியிருக்கிறது. 

கேமரா வசதி என்பது ஒரு புதுமையாக இருந்த காலத்தில் செல்பேசியில் எடுக்கப்பட்ட படத்தில் துல்லியம் என்பது ஒரு பிரச்சனையாக இருந்தது. அந்தப் படங்கள் செய்திப்படங்களாக பயன்படுத்திக் கொள்ளலாமேத் தவிர புகைப்படங்களாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்த நிலை மாறிவிட்டது. செல்பேசி கேமராக்கள் அதிக் பிகசல் திறன் கொண்டதாக மாறி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐபோன் வருகைக்கு பிறகு செல்பேசி கேமராக்களின் தரமும், துல்லியமும் முன்னேறி வந்துவிட்டன.

ஐபோனின் தாக்கம்!
 
ஐபோன் 4 அறிமுகமான காலத்தில், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் அதை விரும்பி பயன்படுத்தும் நிலை இருந்தது. தொடர்ந்து அறிமுகமான ஐபோன் மாதிரிகளில் கேமராவின் தரம் மேலும் பலமடங்கு மேம்பட்டிருப்பதோடு, பல ஆண்ட்ராய்டு போன்களின் கேமராக்களும் இதற்கு ஈடு கொடுக்கின்றன.

எனவே செல்பேசி கேமராக்களை அவற்றின் திறம் மற்றும் தரம் மீதான சந்தேகத்தால் அலட்சியம் செய்வது அறியாமையாகவே இருக்கும். அது மட்டும் அல்லாமல், நவீன செல்பேசியை கொண்டே நேர்த்தியாக படம் எடுத்து கவரும் தொழில்முறை கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஐபோனை கொண்டு அருமையான படங்களை எடுக்கும் கலைஞர்கள் இன்னும் அதிகம் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே, செல்பேசியின் எங்கும் கொண்டு செல்லும் மற்றும் கையடக்கத்தன்மை அளிக்கக் கூடிய சுதந்திரத்தை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் இந்தத் தன்மையை பிரதிபலிப்பதை பார்க்கலாம்.
 
ஐபோனில் எடுக்கப்படும் படங்களை குறிக்க, ஐபோனோகிராபி எனும் வார்த்தை உருவாக்கப்பட்டிருப்பதில் இருந்தே கேமரா கலை மீது ஐபோன் தாக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். ஐபோனில் எடுக்கப்படும் படங்களுக்கான விருதுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. செல்பேசி படங்களுக்கான விருதுகளும் பிரபலமாக உள்ளன.

இதழியலில் ஆர்வம் உள்ள எவரும் இந்தப் போக்குகளை அலட்சியம் செய்ய முடியாது. தவிர, கேமரா கண் கொண்டவர்கள் செல்பேசியில் படம் எடுத்துப் பார்த்தாலே அது தரும் சாத்தியங்களை தானாக உணர்ந்து கொள்வார்கள்.

செல்பேசியின் படம்பிடிக்க பயிற்சி தேவையா?

நவீன செல்பேசி கொண்டு சிறந்த படம் எடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்பதால் இதழாளர்கள் செல்பேசி புகைப்படக் கலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

இந்த இடத்தில், ஓயாமல் எடுக்கப்படும் சுய படங்களும், சமூக ஊடக வெளியில் வெள்ளமென பகிரப்படும் மிக சாதாரணமான படங்களும் நினைவுக்கு வந்து சங்கடம் தரலாம். செல்பேசி படம் எடுப்பதை எளிதாக்கி இருப்பதோடு, சாதாரணமாகவும் ஆக்கிவிட்டதே என நினைக்கலாம். பொதுவாக செல்பேசி இதழியலுக்கு எதிராகவும் இந்த வாதத்தை வைக்கலாம்.

இந்த கேள்விக்கான பதில்: செல்பேசி கொண்டு படம் எடுப்பது எளிதானது. ஆனால் செல்பேசி மூலம் நல்ல படம் எடுக்க வேண்டும் எனில் அதற்கு பயிற்சி தேவை. கேமரா கண் வேண்டும். புகைப்படக் கலை தொடர்பான அடிப்படை புரிதலும் தேவை. மேலும் செய்தி நோக்கில் புகைப்படங்களை எடுப்பதற்கான ஆற்றலும் தேவை. 

சுருக்கமாக சொன்னால், செல்பேசி கேமராவை திறம்பட இயக்குவதற்கான பயிற்சி தேவை. செல்பேசி என்பது ஒரு சாதனம் தான். அதுவே திறனாகிவிடாது. பயிற்சி மூலமே திறன் பெற முடியும். எனவே செல்பேசி இதழியலில் தேர்ச்சி பெற விரும்பிகிறவர்கள் செல்பேசி புகைப்படக் கலையை கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

செல்பேசி புகைப்படக் கலை என்று தனியே ஒன்று கிடையாது என்பதை இங்கே நினைவில் கொள்வதும் பொருத்தமாக இருக்கும். செல்பேசி  கேமராவில் படம் எடுப்பதில் சில தனித்தன்மைகள் இருந்தாலும், அடிப்படையில் அது இன்னமும் புகைப்படக்கலை தான். படச்சுருளில் இருந்து டிஜிட்டல் கேமராவுக்கு மாறியது போல, இப்போது செல்பேசி கேமராவுக்கும் மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி புகைப்படக் கலை அடிப்படைகளில் எந்த மாற்றமும் இல்லை. அதன் தேவையிலும் மாற்றுக்கருத்து இல்லை.

செல்பேசி என்றில்லை எந்த கேமராவிலும் நல்ல படம் எடுக்க வேண்டும் எனில் பயிற்சியும், தேர்ச்சியும் அவசியம். புகைப்படக் கலையில் இது போட்டோகிராப் மற்றும் ஸ்னேப்ஷாட் எனும் பதங்களுக்கு இடையிலான வேறுபாடு மூலம் உணர்த்தப்படுகிறது. போட்டோகிராப் என்பது கேமரா மூலம் எடுக்கப்பட்ட கலையம்சம் கொண்ட படம். ஸ்னேப்ஷாட் என்பது வெறும் படம். கேமரா கண் கொண்டு பார்க்கும்போது இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள் புரியும். ஒரு நல்ல புகைப்படம் பேசாமல் பேசி பல விஷயங்களை உணர்த்தக் கூடியது. அது உணர்வுகளை புரிய வைக்க கூடியது. மனித தருணங்களை படம் பிடிக்க கூடியது. வெறும் படம் என்பது வெறும் படம் தான்.

வழக்கமான கேமராவுக்கும், செல்பேசி கேமராவுக்கும் முக்கிய வித்தியாசம் என்னவெனில், கேமராவை இயக்குவதற்கான குறைந்தபட்ச தொழில்நுட்பத் திறன் கூட செல்பேசி கேமராவை இயக்க தேவையில்லை என்பதுதான். இது அதன் கையாளும் எளிமையை குறிக்கிறதே தவிர படங்களின் தரத்தை அல்ல.

தரமாக படப்பிடிக்க சில குறிப்புகள்
 
செல்பேசியில் தரமான படங்களை எடுக்க வேண்டும் எனில், புகைப்படக் கலையின் அடிப்படையை கற்றுத் தேர்வதில் இருந்து விலகிச் செல்ல முடியாது. புகைப்படக் கலை அடிப்படை என்று சொல்லும்போது அதற்கான அழகியல் மற்றும் கலை அம்சங்களை உறுதி செய்ய உதவும் ஆதாரமான விதிகளையும், நுணுக்கங்களையும் என்றே புரிந்துகொள்ள வேண்டும். இந்த விதிகளும், நுணுக்கங்களும் அழகானவை. எளிமையானவையும் தான்.
 
செல்பேசி கேமராவை ஆடாமல் அசையாமல் வைத்திருக்க வேண்டும் என்பது முதலில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நுணுக்கம். இது வீடியோவுக்கும் பொருந்தும். செல்பேசியில் எடுக்கப்படும் படங்களின் தரம் மோசமாக இருக்க முக்கிய காரணம் கேமரா நிலையாக இல்லாமல் எடுக்கப்பட்டதுதான். கைகளின் அசைவுகள் படம் பதிவாகும் விதத்தை பாதிக்கிறது. இதை தவிர்க்க கேமராவை அசையாமல் பிடிக்க பயிற்சி எடுக்க வேண்டும். தேவை எனில் டிரைபாடு அல்லது மோனோபாடு போன்ற செல்பேசியை நிலையாக வைக்க உதவும் சாதனங்களை நாடலாம்.

இரண்டாவதாக கவனிக்க வேண்டிய விஷயம், காட்சிகளுக்கான ஒளி அமைப்பு. நாம் எடுக்க முற்படும் காட்சிக்கு போதுமான வெளிச்சம் இருக்கிறதா என்பதை மனதில் கொள்ள வேண்டும். நல்ல ஒளி இருந்தால் பதிவாகும் காட்சி அதற்கேற்ப சிறப்பாக இருக்கும். ஒளி மோசமாக இருந்தால் காட்சியின் தரமும் பாதிப்பிற்குள்ளாகும். அனுபவம் வாய்ந்த புகைப்படக் கலைஞர்கள் ஒளியை வைத்துக்கொண்டு விளையாடக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். எனினும் துவக்க நிலையில் இருப்பவர்கள், தேவையான இயற்கை ஒளி இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தினால் போதுமானது. அதோடு வெளிச்சம் கேமராவுக்கு முன் வரக்கூடாது, அதன் பின் பக்கத்தில் இருந்து வரவேண்டும் என்று சொல்லப்படும் அடிப்படையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பக்கவாட்டில் இருந்து ஒளி வருவதையும் தவிர்க்க வேண்டும்.

ஒளியை கவனித்த பிறகு கேமராவில் காட்சியை சிறைப்பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்தில் இதை கம்போசிஷன் என்று சொல்கின்றனர். கேமரா திரையில் தோன்றும் காட்சியில் உள்ள சங்கதிகள் எப்படி அமைகின்றன என்பதை கூடுதலாக கவனிக்க வேண்டும். குறிப்பாக பின்னணி எது, சங்கதி எது, இரண்டுக்குமான முக்கியத்துவம் என்ன என்பதை தீர்மானித்து அதற்கேற்ப காட்சியை அமைக்க வேண்டும். ஃபிரேமை சரியாக அமைத்தாலே நல்ல புகைப்படத்திற்கான அடிப்படையை உறுதி செய்துவிடலாம்.
 
சில அடிப்படை விதிகள்

கேமரா காட்சியில் சங்கதிகள் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க சில அடிப்படை விதிகள் இருக்கின்றன. முதல் விதி, ரூல் ஆப் தேர்ட்ஸ் எனப்படுகிறது. அதாவது கேமரா காட்சியை, குறுக்கும் நெடுக்குமாக மூன்று கற்பனை கோடுகளால் பிரித்துக்கொள்ள வேண்டும். இந்த கோடுகள் இணையும் இடங்களில், காட்சியின் முக்கிய சங்கதிகள் இருப்பது சிறந்தது. உதாரணத்திற்கு மலைச்சிகரத்தை படம் பிடிக்கும் போது கோடுகள் இணையும் இடத்தில் சிகர நுனி இருப்பது நல்லது. மனிதர்களை படம் பிடிக்கும் போது, கோடுகள் சந்திப்பில் அவர்கள் கண்கள் இருந்தால் சிறப்பு. இந்த விதியின்படி புகைப்படத்தை பார்க்கும் போது, முக்கிய பொருள் படத்தின் மையத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புரியும். பல நேரங்களில் பின்னணிக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் முன் தோன்றும் மனிதரை பக்கவாட்டில் கூட அமைக்கலாம். இது புகைப்படத்தின் அழகியலையும், அது பேசும் பொருளையும் இன்னும் கூர்மையாக்கும். இந்த விதியை மனதில் வரித்துக்கொண்டால், கால்கள் அதற்கேற்ப நகர்த்து, கேமராவை அதற்கேற்ற அமைப்பில் வைத்து காட்சிகளை கிளிக் செய்ய வைக்கும்.

இதற்கு பொறுமை அவசியம். ஒரு நல்ல படத்தை எடுக்க காத்திருக்க வேண்டும் என்கின்றனர். எடுத்த எடுப்பில் படம் எடுத்துவிட முடியாது. சூழலை நன்றாக உள்வாங்கி கொண்டு, அதற்கேற்ப படம் எடுக்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் புகைப்பட தருணங்கள் வாய்க்கும். ஒரு நண்பரை படம் எடுக்க முயற்சிக்கும் போது கூட இத்தகையை பொறுமையுடன் செயல்பட்டால், அவரது புன்னகை படத்தில் பதிவாகி இருப்பதையும், அது தோழமையை சொல்வதையும் உணரலாம்.

இன்னொரு விதி லீடிங் லைன்ஸ் என்று சொல்லப்படுகிறது. அதாவது, கேமரா காட்சியில் காணப்படும் கோடுகள் செல்லும் திசையில் காட்சிகளை அமைப்பதாகும். உதாரணத்திற்கு ஒரு காட்சியில் சாலை அமைப்பு அல்லது பாலம் ஒரு கோடு போல இருக்கலாம். ஆனால் கோடு சுட்டிக்காட்டும் திசையில் பார்வையாளர்கள் கவனம் குவியும் வகையில் காட்சியை அமைத்தால் படத்தின் அழகியல் அம்சம் அதிகரிக்கும்.

இவைத் தவிர, கோல்டன் ரேஷியோ எனும் விதியும் இருக்கிறது. ரூல் ஆப் தேர்ட்ஸ் விதியின் நீட்சி இது. காட்சியை கோடுகளால் பிரிக்கும் போது, அதன் முக்கிய இடங்களில் படத்தின் ஆதார அம்சங்கள் அமைந்திருக்கும் என்பது இந்த விதியின் சுருக்கம். இவைத் தவிர, காட்சியில் பின்னணியில் இருந்து தேவையில்லாத சங்கதிகளை விலக்குவது, பின்னணியில் இன்னும் அடர்த்தியை ஏற்படுத்த முயற்சிப்பது, ஒயிட் பாலன்ஸ் எனப்படும் சமநிலையை ஏற்படுத்துவது என பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

இத்தகைய அடிப்படை அம்சங்களை அறிந்து பின்பற்றும்போது எடுக்கும் படங்களின் தரம் தானாக மேம்படும். புகைப்பட விதிகளை பொருத்தவரை வழிகாட்டி தன்மை கொண்டவை தான். அனுபவமும் தேர்ச்சியும் இருந்தால் அவற்றை மீறியும் படங்கள் எடுக்கலாம் என்கின்றனர்.

விஷயம் என்னவெனில், புகைப்படக்கலையின் அடிப்படையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இது புகைப்படக் கலைஞரின் பணி என இதழாளர்களின் விலகி கொள்ள முடியாது. செல்பேசி இதழியலில் தேர்ச்சி பெற வேண்டும் எனில் இது அவசியம். மேலும் டிஜிட்டல் நுட்பத்தின் அடிப்படைகள் மற்றும் செல்பேசி கேமராவின் அடிப்படை அம்சங்களையும் புரிந்து கொள்வது நல்லது.

செல்பேசி கேமராவை பொருத்தவரை, அதன் மையமாக விளங்கும் சிலிக்கான் சிப்பின் ஆற்றல் மற்றும் கேமராவில் உள்ள சென்சாரின் ஆற்றல் ஆகியவை தான் படத்தின் துல்லியத்தை தீர்மானிக்கின்றன. இந்த இரண்டும் தான், காட்சிகளில் பதிவாகும் ஒளியை உள்வாங்கி கொள்ள உதவுகிறது. இரண்டுமே வரம்புக்குட்பட்டவை என்பதால் சக்திவாய்ந்த கேமராவில் ஏதிர்பார்க்கும் ஜாலங்களை இதில் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால் இந்த வரம்புகளை புரிந்து கொண்டால், செல்பேசி கேமரா அளிக்கும் சுதந்திரத்தை சாதகமாக்கி கொண்டு கலை வண்ணம் மிக்க படங்களை எடுப்பது சாத்தியம் என்கிறார் செல்பேசி இதழியல் பயிற்சியாளர்களில் ஒருவரான டி.ஜே.கிளார்க். இவரது 'மல்டிமீடியாடிரைன்' (www.multimediatrain.com) இணையதளத்தில் இது குறித்து மேலும் அறியலாம். டிஜிட்டல் இதழயிலுக்கான அடிப்படை நுணுக்கங்களை இந்தத் தளம் கற்றுத் தருகிறது.

செல்பேசி கேமராவில் ஜூம் செய்யும் வசதி இருந்தாலும் அதைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவது இந்த வரம்புகளை மனதில் வைத்துதான். கேமராவில் ஜூம் செய்ய முயலும் போது, உண்மையில் காட்சிகளின் பிக்சல் தன்மை பாதிக்கப்படுகிறது. படம் எடுத்தபின் இதை உணரலாம். இது கிட்டத்தட்ட படத்தை பெரிதாக்கி பார்ப்பது போல தான். இதை தவிர்க்க, நெருக்கமான காட்சி தேவை எனில் அருகாமையில் சென்று படம் பிடிக்க வேண்டும்.
 
இதே போல கேமரா செட்டிங்கில் உள்ள அடிப்படை அம்சங்களையும் அறிந்து, அவற்றை இயக்க கற்றுக்கொள்ள வேண்டும். பல கேமராக்களில், கேமரா கவனம் செலுத்தும் பகுதியை லாக் செய்து நமது விருப்பம் போல் காட்சிகளில் கவனம் செலுத்த வைக்கும் வசதி இருக்கிறது. இது போன்ற நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்த நுணுக்கங்களை எல்லாம் அறிந்திருந்தால், கேமரா செயல்திறனை மேம்படுத்தும் நவீன செயலிகள் கொண்டு, வழக்கமான கேமராவில் படம் எடுப்பது போலவே மாயங்களை செய்யலாம்.

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம் > மோஜோ 14 | செல்பேசி இதழியல் செயல்முறை திட்டம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close