டியூட் உனக்கொரு இமெயில் 5 - அவர் கற்றுத்தந்து சென்றது என்ன?

  சைபர்சிம்மன்   | Last Modified : 08 Aug, 2018 01:44 pm

kalaignar-karunanidhi-and-writings

டியூட், இந்த மெயில், அவரது நினைவலைகளுடன் எழுதப்படுகிறது. 'அவர்' யார் என உங்களுக்கு புரிந்திருக்கும். கலைஞர் தான் 'அவர்'. இழப்பின் சுமை தாக்கினாலும், ஓயாமல் எழுதியவருக்கு எழுத்தைவிட மிகச்சிறந்த அஞ்சலி இருக்க முடியாது என்பதால், இந்த மெயில். அவரைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும்  அதன் அத்தனை கீற்றுகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வியக்க வைக்க கூடிய தலைவர் தான்.

மனித பார்வை எப்போதுமே ஏற்ற இறக்கம் கொண்டது. சார்பு நிலை உடையது. ஒரு அல்கோரிதமை உருவாக்கி கலைஞர் தொடர்பான பதிவுகளை அலசி ஆராயச் சொன்னால், அதுவே வியந்து போகும். விமர்சிக்கும் சொற்ப பதிவுகளையும் அடையாளம் கண்டு, அவருக்கான இடத்தை அழகாக சுட்டிக்காட்டி விடும். மனிதர்களாகிய நாம் உணராமல் இருப்பது என்ன நியாயம்.

முழக்கங்கள், அடைமொழிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, தகவல்களையும், தரவுகளையும் பார்த்தாலே போதும், அவர் எத்தனை பெரிய தலைவராக இருந்திருக்கிறார் என்று உணர முடியும். அதைவிட அவர் தொடர்பான அனுபவப் பகிர்வுகளை கொஞ்சம் உள்வாங்கி கொண்டால் போதும், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே" என அவரது அழைப்புக்கு தொண்டர்கள் உருகி வழிந்தது ஏன் என்று புரியும். இந்த மடலும் கூட அந்த அழைப்பு ஏற்படுத்திய தாக்கத்தின் தொடர்ச்சியே!

அவரின் பன்முக ஆளுமையை, பல்துறை பங்களிப்பை பதிவு செய்ய வேண்டும் எனில், ஒரு தனி விக்கிபீடியாவை தான் உருவாக்க வேண்டும். அதில் ஒரு சரட்டை மட்டுமே இந்த மெயிலில் பேச விழைகிறேன். அது அவர் தன் தொண்டர்களுடன் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த விதத்தை கண்டு வியப்பதும், அதை நாம் தொடர வேண்டும் எனும் வேட்கையை முன் வைப்பதும் தான்.

ஆம், கலைஞர் கட்சியை வளர்த்து கூட்டங்கள் பேசியும், கடிதங்கள் எழுதியும்தான். உடன் பிறப்பே என்று துவங்கி உணர்ச்சி பொங்க அவர் எழுதிய கடிதங்கள் மூலம் தொண்டர்களுடன் நேரடியாக பேசினார். தமிழ் மக்களுடன் பேசி, தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு ஊக்கம் அளித்தார், உத்வேகம் ஊட்டினார். கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்த போதும், முதல்வராக ஆட்சியில் இருந்த போதும் இதை தளராமல் செய்திருக்கிறார். ஒப்புக்காக எழுதவில்லை, உள்ளத்தில் இருந்து எழுதியிருக்கிறார். நேரடியாக ஒவ்வொருவருடனும் பேசும் உணர்வில் எழுதியிருக்கிறார். அது திட்டமிட்ட உத்தி அல்ல; இயல்பாக வந்த உணர்வு.
 
அவரது கடிதங்களை படித்துப் பாருங்கள் இதை எளிதாக உணரலாம். தகவல் தொடர்பில் அவர் மன்னன். ஏனெனில் அவரிடம் பகிர்ந்து கொள்ள எப்போதும் விஷயங்கள் இருந்தன. தான் கொண்ட கொள்கையை, நம்பிக்கையை பரப்ப வேண்டும் என்ற விழைதல் இருந்தது. அதை இடைவிடாமல் செய்து கொண்டிருந்தார். அவர் கடிதம் மூலம் பேசியது மட்டும் அல்ல, உடன்பிறப்புகள் பதிலுக்கு என்ன சொல்கின்றனர் என்றும் காது கொடுத்து கேட்டார். அவற்றுக்கு உள்ளத்தில் இருந்து பதில் அளித்தார்.

இன்று புதிய ஊடக பரப்பில், கலந்துரையாடல் தன்மை மற்றும் இரு வழி தகவல் தொடர்பு முக்கியமாக பேசப்படுகிறது. அதை தனது தகவல் தொடர்பில் நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர். அவர் மக்களுடன் கடிதங்கள் மூலம் பேசினார். ஒவ்வொருவருடன் நேரடியாக பேசுவது போல தான் அவர் எழுதி வந்தார். உண்மையில் அவர் விட்டுச் சென்றுள்ள பொக்கிஷங்களில் அவரது கடிதங்களும் ஒன்று. அந்தக் கடிதங்களை படித்தால் நீங்கள் கருணாநிதி யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். எல்லாமே ஆவணங்கள். ஒவ்வொரு முக்கிய நிகழ்வு குறித்தும் அவர் தன் கருத்துக்களை, எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார். (இவைத் தவிர வாழ்க்கை வரலாறான 'நெஞ்சுக்கு நீதி' வேறு இருக்கிறது.) 

அவரது கடிதங்களை படித்துப் பார்த்தால், நிகழ்வுகளுக்கும், விமர்சனங்களுக்கும் எப்படி எல்லாம் பதில் அளித்திருக்கிறார், தனது நிலையை விளக்கியிருக்கிறார் என்று புரியும். ஆட்சி போன நாளில் கூட பதற்றம் இல்லாமல் கடிதம் எழுதி தொண்டர்களை தயார்படுத்தியுள்ளார். அவரது கடிதங்களில் அண்ணாவை அடிக்கடி நினைவு கூர்ந்துள்ளார். பெரியாரை சுட்டிக்காட்டியுள்ளார். சமூக நீதி பற்றி பேசியிருக்கிறார். நாட்டின் நலன் குறித்து குறிப்பிட்டுள்ளார். திரைப்படம் பற்றி பேசியுள்ளார். தனது நண்பரும், அரசியல் போட்டியாளருமான எம்.ஜி.ஆர் குறித்து கூட நட்புடனும், நயத்துடனுமே பதில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். 

அவரது கடிதங்கள் வரலாற்று ஆவணம் தான் சந்தேகமில்லை. அதில் தற்பெருமை கிடையாது. ஆனால் அவரது ஆளுமையை, ஆற்றலை பார்க்கலாம். கருணாநிதியை நீங்கள் தாராளமாக எடை போட்டு பாருங்கள். ஆனால் அவரது கடிதங்களை படித்துப் பாருங்கள். அப்போது அவரது ரேட்டிங் எப்படி எகிறுகிறது என புரிந்து கொள்ளலாம்.

கலைஞர் கடிதங்களில் மின்னுவது எழுத்தாற்றல் மட்டும் அல்ல. அவர் முழங்கிய கூட்டங்களில் கேட்டது பேச்சாற்றல் மட்டுமா என்ன? அதன் பின்னே உள்ள உயிர்த்துடிப்பை ஒவ்வொரு தொண்டனும் உணரவில்லையா? அதேபோல தான் அவரது கடிதங்களிலும் ஒரு மாபெரும் ஆளுமையை நாம் சந்தித்துக்கொண்டே இருக்கலாம். நம்முடன் பேச விரும்பிய ஆளுமை அது. 

ஒரு மகத்தான தலைவர் போல அவர், நாம் பின்பற்றி நடக்க தனது கருத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார். இதில் அவரது கடிதங்களுக்கு விஷேச பங்கு இருக்கிறது. கடிதங்களை தனியே குறிப்பிட்ட சொல்ல காரணம், முன்பே சொன்னது போல, கலந்துரையாடல் தன்மை என புரிந்து கொள்ளப்படும் இண்ட்ரியாக்டிவிட்டிக்கு அவை சரியான உதாரணம். அது மட்டும் அல்ல, அந்த கடிதங்கள் உண்மையில் ஒரு வலைப்பதிவின் வடிவமாக திகழ்கின்றன.

பிலாக் (Blog) எனப்படும் வலைப்பதிவுகள் இணையம் தந்த கொடைகளில் ஒன்று. வெற்றிகரமான வலைப்பதிவுக்கு முக்கியமாக சொல்லப்படும், நேரடியாக பேசும் தன்மை, பதிவை பெறும் வாசகனை சரிசமமாக நடத்தி அவர்கள் கருத்துகளை கேட்டறியும் தன்மை, தவறாமல் தொடர் பதிவுகளை வெளியிடும் ஆற்றல், தனிப்பட்ட குரலில் பேசும் நெருக்கம் போன்ற எல்லா அம்சங்களையும் அவரது கடிதங்களில் உணரலாம். 

உண்மையில், அவர் ஒரு வலைப்பதிவாளர். வலைப்பதிவு எனும் தொழில்நுட்ப பதிப்பு சாதனம் இல்லாமலேயே முரசொலி மூலம் வலைப்பதிவு செய்வது வந்தவர். வலைப்பதிவு நுட்பங்களை அவரிடம் இருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம். வெறும் எழுத்து நுட்பங்கள் மட்டும் அல்ல, நம் கொள்கைகளை செம்மையாக பகிர்வது, நாட்டு நலனுக்காக சிந்திப்பது, சமூக நலனோடு பேசுவது, விமர்சனங்களை தயங்காமல் எதிர்கொள்வது ஆனால், தன்னிலை இழக்காமல் பதில் அளிப்பது போன்ற அம்சங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இன்று இணையத்தில் டிரால்கள் துள்ளி விளையாடுவதை பார்க்க முடிகிறது. உலகம் முழுவதும் உள்ள பிரச்னை அது. ஆனால், டிரால்களை எல்லாம் எப்படி கையாள வேண்டும் என்றும் அவரது பதிலடிகளில் இருந்து கற்றுக்கொள்ளாலாம். ஏனெனில் ஊடகத்தை அவர் எப்போதும் மக்கள் நலனுக்கான கருவியாக தான் கருதினார். அப்படியே பயன்படுத்தி வந்தார்.

இந்த மெயில் வடிவமே அவரும், அவரைப்போன்ற தலைவர்கள் மக்களுடன் தொடர்பு கொள்ள தேர்வு செய்த கடித வடிவின் தொடர்ச்சி தான். எனவே, மறைந்தும் வாழும் அவரை வாழ்த்தி வணங்குவோம்.

அன்புடன்,
சைபர்சிம்மன்

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: டியூட் உனக்கொரு இமெயில் 4 - நீலப்படம் பார்த்துண்டா?- குவோரா சுவாரஸ்யங்கள்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.