மோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்!

  சைபர்சிம்மன்   | Last Modified : 20 Sep, 2018 03:55 pm

mojo-mobile-journalists-and-smartphones

இதழாளர்களுக்கு செல்போன் எத்தனை பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள நிக் கார்னெட் (Nick Garnett) மற்றும் அவரது இதழியல் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டும். நிக் கார்னெட் செய்தி சேகரிப்பிற்காக கைப்பேசிகளை முழுமூச்சில் பயன்படுத்த துவங்கிய இதழாளர்களில் ஒருவராக திகழ்கிறார். பிபிசி 5 வானொலி தொலைக்காட்சி செய்தியாளரான கார்னெட் பூகம்பம் பாதித்த நேபாளம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஸ்மார்ட்போன் மூலமாக செய்திகளை ஒலிபரப்பியிருக்கிறார். அடிப்படையில் அவர் வானொலி செய்தியாளர் என்ற போதிலும், செய்தி நிகழ்வுகளின் தேவைக்கேற்ப காணொலி செய்திகளையும் சேகரித்து அனுப்பியிருக்கிறார். உடனடி செய்தி தேவைப்படும் இடங்களில் அவர் கையில் உள்ள ஐபோன் மூலமே நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறார்.

இதழாளர்கள் பெரிய பெரிய உபகரணங்களை எல்லாம் சுமந்து திரிய வேண்டியதில்லை, ஸ்மார்ட்போன் சாதனம் பிரதானமாக இருந்தால் போதும் என்பதே அவரது நம்பிக்கையாக இருக்கிறது. களத்தில் பலமுறை இதை நிருபித்திருக்கிறார். ஏனெனில் களத்தில் எதிர்கொண்ட சூழலே ஸ்மார்ட்போனின் பலவித பயன்பாட்டை அவருக்கு உணர்த்தியிருக்கிறது.
 
செல்பேசி இதழியலை வீச்சை கள செயல்பாட்டின் மூலம் உணர்ந்தவர், பேட்டி, மாநாட்டு உரைகள், வலைப்பதிவு ஆகியவற்றின் மூலம், செல்பேசி இதழியலின் இன்றியமையாத தன்மையை வலியுறுத்தி வருகிறார். ஜர்னலிசம்.கோ.யூகே இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், செய்தி சேகரிப்பில் ஸ்மார்ட்போன் சாதனமான ஐபோன் தனக்கு கொடுத்த ஐந்து முக்கிய தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

முதல் தருணத்தில் இங்கிலாந்தின் பிராட்போர்ட் நகரில் அவர் நேரடி ஒளிப்பதிவிற்காக தயாராக இருந்திருக்கிறார். காரின் மீது செயற்கைகோள் கருவியை பொருத்தி அதை சோதித்தும் பார்த்துவிட்டு. ஆனால் ஒளிபரப்பு துவங்க ஒரு நிமிடம் இருந்தபோது காரின் பனி படர்ந்த கூரை வழியே செயற்கைகோள் கருவி நழுவிச்சென்று விட்டது. அதை தேடிப்பொருத்த நேரமில்லாத சூழலில், கார்னெட் கையில் இருந்த ஐபோனை இயக்கி, ஸ்டிரிமிங் சேவைக்கான லூசி லைவ் எனும் செயலியை திறந்து அதன் மூலம் செய்தி அறையை தொடர்பு கொண்டு நேரடி ஒளிபரப்பை துவக்கினார். அதிக தரத்திலான ஒலி வடிவிலான செய்திகளை நேரடியாக ஒளிபரப்ப அவர் லூசி லைவ் செயலியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார். சராசரி செய்தியாளர்களுக்கு இந்த செயலி கொஞ்சம் விலை உயர்ந்தது என்றாலும் பிபிசி இதை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

இரண்டாவது சம்பவத்தில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகருக்கு சென்று செய்தி சேகரித்தது பற்றி விவரிக்கிறார். விமானம் மூலம் காலையில் அந்நகரில் சென்று இறங்கியவர் நண்பகலில் செய்தி சேகரிப்பை முடித்துவிட்டு, விமான நிலையத்தில் காத்திருந்த நேரத்தில், ஐபோனிலேனே அதை எடிட் செய்து இமெயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டார். 

மூன்றாவது சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது. பிரிஸ்டல் நகரில் செய்தி சேகரிப்பிற்காக சென்றுக்கொண்டிருந்தவர் லிட்டில் செப் எனும் ரெஸ்டாரண்ட் நிறுவனம் பல கிளைகளை மூடும் செய்தியை கேள்விபட்டார். அவர் காரில் சென்று கொண்டிருந்த சாலையிலேயே லிட்டில் செப் ரெஸ்டாரண்ட் இருப்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கியவர் ரெஸ்டாரண்டில் இருந்து சாப்பிட்டு வெளியே வந்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் பேட்டி எடுத்து அதை செய்தியை தொகுத்து அடுத்த பத்து நிமிடங்களில் ஒளிபரப்பாக இருந்த செய்தி அறிக்கையில் இடம்பெற அனுப்பி வைத்துவிட்டார்.

அதேபோல மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கலவரம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றவர் ஐபோன் மூலமே அங்குள்ள நிலவரத்தை செய்தியாக ஒளிபரப்பினார். இந்தக் கலவரத்தின் போது செய்தியாளர்களும் குறிவைத்து தாக்கப்பட்ட நிலையில், செய்தியாளர் என அறியப்பட்டால் அவரது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் எனும் நெருக்கடியான சூழலில் கையில் ஐபோனை வைத்துக்கொண்டு அதிக கவனத்தை ஈர்க்காமல் அவர் செய்தி கடமையை நிறைவேற்றினார். பாதுகாப்பாக செயல்பட்டதோடு, போன் மூலமே புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றையும் பதிவு செய்து செய்தி சேகரித்தார்.

மற்றொரு சம்பவத்தில் இங்கிலாந்தின் ஸ்டாக்டன் ஆன் டீஸ் நகரின் வெள்ள பாதிப்பு குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார். மழை பாதிப்பு குறித்து முக்கியமான ஒருவரின் பேட்டி ஏற்பாடாகி இருந்தது. சோதனையாக அந்த இடத்தில் டிவி டிரக் எதுவும் கிடைக்கவில்லை. டிவி டிரக் வேண்டுமானால் 50 மைல் செல்ல வேண்டும் என சொல்லப்பட்ட நிலையில் போனில் இருந்த டிஜாரோ (Dejero) எனும் செயலி நினைவுக்கு வந்தது. வை-பை மற்றும் இணைய இணைப்பு மூலம் அதன் வாயிலாக இரட்டிப்பு வேகத்தை பெற முடியும் என்பதால் அதை பயன்படுத்த நினைத்தார். ஆனால் அப்போது மழை பெய்து கொண்டிருந்ததும், போனை நிலையாக வைப்பதற்கான டிரைபாடு கருவி இல்லாததும் பெரும் சவாலாக அமைந்தது. அருகே இருந்த கடைக்குச் சென்று, டிரைபாடு கருவி, மாற்று போன் மற்றும் ஐபோனுக்கான பாதுகாப்பு கவசம் ஆகியவற்றை வாங்கி வந்து அந்த இடத்தில் இருந்தே, விருந்தினரின் பேட்டியை ஒளிபரப்பினார். இந்த ஒளிபரப்பை பார்த்த பிபிசி அதிகாரி ஒருவர், எங்கிருந்து டிவி டிரக்கை வரவைத்தீர்கள் என ஆச்சர்யத்துடன் கேட்டதாகவும் கார்னெட் குறிப்பிடுகிறார். எல்லாம் ஸ்மார்ட்போன் செய்த மாயம் தான் என்பதை அந்த அதிகாரியால் நம்ப முடியவில்லை. 

இந்த நிகழ்வுகள் தவிர நேபாள பூகம்பம், ஐரோப்பாவில் சார்லி ஹெப்டே பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளையும் ஸ்மார்ட்போன் மூலம் செய்தி ஒளிபரப்பாக்கி இருக்கிறார்.
 
கார்னெட் செல்பேசி செய்தியாளராக திகழந்தாலும் முழுக்க முழுக்க அவர் ஸ்மார்ட்போனை மட்டும் சார்ந்திருக்கவில்லை. ஆனால் ஸ்மார்ட்போனை முதன்மையாக பயன்படுத்துகிறார். எப்போதுமே செயற்கைகோள் கருவி போன்ற மாற்று ஏற்பாடுகளை வைத்திருந்தாலும், ஸ்மார்ட்போன் மூலம் ஒலி மற்றும் காணொலி வடிவில் செய்திகளை பதிவு செய்து ஒளிபரப்புவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
 
கையடக்கத்தன்மை மற்றும் கையாளும் வசதி ஆகியவற்றை தான் செய்தி சேகரிப்பு சாதனமான ஸ்மார்ட்போனின் சிறப்புகளாக அவர் குறிப்பிடுகிறார். வானொலி இதழாளராக 22 ஆண்டுகளுக்கு முன், அதிக எடை கொண்ட ஒலிபரப்பு சாதனங்களை எடுத்துச்செல்ல வேண்டியிருந்தபோது பல முறை இதை எளிதாக்க வழியே இல்லயா என ஏங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். அதன் பிறகு ஒலிபரப்பு சாதனங்கள் மேம்பட்டாலும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை என்கிறார். 2008-ல் ஐபோன் புழக்கத்திற்கு வந்த பிறகு அதன் தரமான ஒலிப்பதிவு வசதி, செய்திகளை பதிவு செய்ய உதவியாக அவர் குறிப்பிடுகிறார். 2011-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் ஒலிப்பதிவு கருவிகளுக்கு பதில் கைக்கடக்கமான ஐபோனை பயன்படுத்த துவங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது நேரத்தை மிச்சமாக்குகிறது, சுமையை குறைக்கிறது என்கிறார். லேப்டாப் கூட தேவையில்லாமல் ஐபோனிலேயே எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்கிறார்.
 
ஒருமுறை எம்பி ஒருவர் மீதான ஊழல் புகார் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றிருந்த போது, சம்பவ இடத்தில் வானொலி காரை நிறுத்தி ஒளிபரப்பு செய்வது சாத்தியம் இல்லாமல் போன நிலையில் ஐபோன் மூலமே சுடச்சுட அந்த இடத்தில் இருந்தே செய்தி சேகரித்த அனுபவத்தை அவர் சுவாரஸ்யமாக பிபிசி வலைப்பதிவு ஒன்றில் விவரிக்கிறார்.

ஸ்மார்ட்போனை செய்தி சேகரிப்பிற்காக பயன்படுத்தும்போது இணைய இணைப்பு முக்கியமானது என்று குறிப்பிடுகிறார். நேபாள பூகம்பம் பற்றி செய்தி சேகரிக்கச்சென்ற போது உள்கட்டமைப்பு சிதைந்து போயிருந்த நிலையிலும், செல்போன் சேவை செயல்பட்டு, இடுபாடுகளுக்கு மத்தியில் இருந்து ஐபோனில் செய்திகளை சேகரித்து வழங்கியதையும் அவர் தனியே விவரித்திருக்கிறார். மீட்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர் கண்டறியப்பட்ட நிலையில் அவரது மீட்பை ஐபோன் மூலம் நேரடியாக ஒளிபரப்பியது பற்றியும் அவர் விரிவாக குறிப்பிடுகிறார். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த முயற்சியை படபடப்புடன் விவரித்த போது ஆடியோ தரம் பற்றி எல்லாம் யாரும் கவலைப்படவில்லை, சிக்கியவரின் நிலை என்ன? அவர் உயிருடன் மீட்கப்பட்டாரா? என்பதை அறிந்து கொள்வதிலேயே நேயர்கள் ஆர்வமாக இருந்தனர் என குறிப்பிடுகிறார். இந்த முயற்சியை விவரித்ததோடு, அதில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பற்றியும் அவர் செய்தி நடுவே விளக்கி கூறினார். செல்பேசி இதழியலின் பலம் இது தான்.

நிக் கார்னெட் வானொலி செய்தியாளர் என்பதில் இருந்து மாறி, தற்போது எதையும் டிஜிட்டல் முறையில் முதலில் வெளியிடுபவராக செயல்பட்டு வருகிறார். சமூக ஊடகம் என பல தளங்களில் அவர் செய்திகளை பகிர்ந்து கொள்கிறார். 

செல்பேசி இதழியலின் ஆற்றலை போற்றுபவர் என்றாலும், நிக் கார்னெட் ஸ்மார்ட்போன் மட்டுமே போதுமானது எனும் கருத்து கொண்டவரல்ல. மேலும் முழு மோஜோ எனப்படும் எல்லா வகை செய்தி சேகரிப்புக்கும் ஸ்மார்ட்போனை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. இது செல்பேசி சார்ந்ததே இல்லை என்கிறார் அவர். செல்பேசி இதழியல் என்பது கருவியை அடிப்படையாக கொண்டது அல்ல, அது செய்தியாளர் எங்கும் உலா வருபவராக இருப்பது என்கிறார். கூடுதல் இணைப்புகள் கொண்ட சுவிஸ் ராணுவ கத்தி போன்ற சாதனத்தை கையில் வைத்திருக்கிறோம் என்பதை இதழாளர்கள் உணர்வதும், அவற்றில் இருந்து சூழலில் தேவைக்கேற்ற சாதனங்களை பயன்படுத்திக்கொள்வதும் தான் செல்பேசி இதழியல் என்கிறார் அவர்.

இதற்கு முன்னர் செய்தி ஒளிபரப்பு செய்ய வாய்ப்பில்லாததாக கருதப்படும் ஓட்டல்கள், மருத்துவமனைகள், விமான நிலைங்கள் உள்பட எந்த இடத்தில் இருந்தும் ஒளிபரப்பு செய்ய முடியும் என்பதும், தொழில்நுட்ப சாதனங்களுக்கான சிறிதளவு முதலீடு மற்றும் பயிற்சி மூலம் ஒரு செய்தியாளரை ஒளிபரப்பு திறன் கொண்டவராக மாற்றிவிட முடிவதுமே செல்பேசி இதழியலின் உண்மையான ஆற்றல் என்கிறார். 

நிக் கார்ண்ட் தனது அனுபவத்தின் அடிப்படையில் செய்தியாளர்களுக்கான குறிப்புகளையும் வழங்கியுள்ளார். அவற்றில் அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய பயனுள்ள குறிப்பு இது:

"எங்கு செய்தி சேகரிக்க சென்றாலும் 10 நிமிடம் முன்னதாக சென்று அங்கு அமர்ந்து கொண்டு பொறுமையாக கவனியுங்கள். நிலைமையை கவனிக்கவும். பதற்றமாக இருக்கிறதா? உள்ளூர் மக்கள் சகஜ நிலையில் உள்ளனரா? மக்கள் முகங்கள் சொல்லும் செய்தி என்ன? அவர்களை சில நிமிடங்கள் கவனித்து அங்கிருந்தே, அதே மனநிலையில் செய்தி அளிக்கவும். நீங்கள் பரபரப்பாக இருப்பதால் அவசரமாக செயல்பட்டால் களத்தில் உள்ள உணர்வுகளை தவறவிட அல்லது தவறுதலாக புரிந்து கொள்ள நேரலாம்."

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 20 | ஐபோன் நிருபர் அகஸ்டீன்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.