மோஜோ 22 | செல்பேசி இதழியல் இங்கே, இதழாளர்கள் எங்கே?

  சைபர்சிம்மன்   | Last Modified : 05 Oct, 2018 03:55 pm

mobile-journalism-and-mobile-journalists

செல்பேசி இதழியலின் சாத்தியங்களை களத்தில் உணர்ந்தவர் என்ற முறையில் அதன் தேவையை வலியுறுத்தி, இதழாளர்கள் இந்த இதழியல் முறையை அரவணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் வகையில் பெல்ஜியம் இதழாளரான நிக்கோலஸ் பெக்கட் (Nicolas Becquet) எழுதிய கட்டுரை இது:
 
பாரீஸ் தாக்குதல்களுக்கு பிந்தைய ஊடக செய்தி வெளியீடு நீண்ட காலமாக நாம் அறிந்த விஷயத்தை நன்றாக வெளிச்சம் போட்டுக்காட்டியது. ஸ்மார்ட்போன்கள் ஒரு நிகழ்வை அவை நிகழும்போதே, எல்லா கோணங்களிலும் படம்பிடிக்க மகத்தானவை என்பதுதான் அது. இந்தப் புரட்சியில், இத்தகைய எளிதான செய்தி வெளியீட்டு முறையின் சாத்தியங்களை அறிந்திருந்தும் கூட, இதழாளர்கள் பின்தங்கியிருப்பதை அல்லது இல்லாமல் இருப்பதையும் இந்த நிகழ்வு உணர்த்தியது.
 
செல்பேசி பயனாளிகளுக்கு ஏற்ற செய்திகளை அளிக்க வேண்டும் என்பதில் செய்தி அறைகளில் இப்போது ஒத்த கருத்து ஏற்பட்டிருந்தாலும் கூட, ஸ்மார்ட்போன் சாதனத்தில் செய்திகளை தயாரிப்பது என்று வரும்போது நிலைமை வேறாக இருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட்போனில் வீடியோவை பதிவு செய்து எடிட் செய்வது என்பது கொஞ்சம் ரிஸ்க்கான பரிசோதனை. ஆனால் இன்று தொழில்நுட்ப முன்னேற்றம் இதை மாற்றியுள்ளது. செல்பேசியின் செயல்திறன், 4ஜி சேவை, 4 கே வீடியோ, நீண்ட பேட்டரி, நேர்த்தியான செயலிகள், தொழில்முறை தரம், செல்பேசி விநியோகத்திற்கான பிரத்யேக கோப்பு முறைகள் ஆகியவை இதற்கு வழி செய்துள்ளன.

படம் பிடிப்பது, எடிட் செய்வது, நேரலை காட்சிகளை வெளியிடுவது ஆகியவை குழந்தை விளையாட்டாக ஆகியிருக்கிறது. இதற்கு குறைந்தபட்ச தயாரிப்பே தேவை. இருப்பினும், குறைந்தபட்சம் பிரெஞ்சு ஊடகத்திலேனும் இதற்கான உதாரணங்கள் குறைவாகவே உள்ளன. (இந்தக் கருத்து இந்திய ஊடகங்களுக்கும் பொருந்தும் எனலாம்).

செல்பேசி இதழியல் என்றால் என்ன?

செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை, எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட்போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதாகும்.
 
ஸ்மார்ட்போன்கள் அளிக்கும் சுதந்திரம், கதைகளைச் சொல்ல புதிய வழிகளை கண்டடைய நம்முடைய படைப்பூக்கம் மற்றும் திறமைக்கு சவாலாக அமைகிறது. வழக்கமான வீடியோ பதிவுகள் துவங்கி, நிகழ்வுகளை சிறு பகுதிகளாக செய்தியாக்குவது வரை மற்றும் நேரலை என செல்பேசி வடிவம் பலவிதமான வாய்ப்புகளை வழங்குகிறது.

மோஜோவின் மையமாக செல்பேசி விளங்கினாலும், கோ புரோ கேமரா, 360 கோண கேமரா மற்றும் டிரோன்களும் இதில் அடங்கும்.

செல்பேசி இதழியல் யாருக்காக? எப்போது பயன்படுத்தலாம்?

செய்தி நிகழ்வில், தங்கள் இருப்பை சாதகமாக்கிக் கொண்டு வீடியோ எடுக்க, படம் எடுக்க, ஒலிப்பதிவு செய்ய அல்லது நேரலை செய்ய விரும்புகிறவர்களுக்கானது செல்பேசி இதழியல். உள்ளூர் செய்தியாளர் முதல் வீடியோ இதழாளர்கள் வரை எல்லோரும் செல்பேசி இதழியலுக்கான சாதனங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் தரம்?

செல்பேசி வைத்திருக்கும் இதழாளரால் தொலைக்காட்சி ஒளிபரப்பு தரத்திலான பதிவை உருவாக்க முடியாதுதான். ஆனால், இது நோக்கம் அல்ல. செல்பேசி இதழியல் என்பது அதிக செலவு இல்லாமல், லேசான கருவுகளுடன், ஒலி மற்றும் ஒளி சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்க வழி செய்யும் சார்பு செயல்பாடாகும்.

ஆனால், சமீபத்திய ஐபோன், தொழில்முறை உபகரணங்கள், செயலிகள் ஆகியவை எந்தத் தொழில்முறை இயக்குனர் அல்லது ஆவணப்பட இயக்குனருக்கு கைகொடுக்கும்.

தொழில்நுட்பம் தயாராக இருக்கிறது. சரியான புரிதலுடன் இதை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 21 | செய்தியாளர் சுமை குறைக்கும் ஸ்மார்ட்போன்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.