மோஜோ 24 | இதழியலில் கதை சொல்லும் கலை!

  சைபர்சிம்மன்   | Last Modified : 18 Oct, 2018 11:38 am
mobile-journalism-and-story-telling

'நீங்கள் ஓர் இதழாளர் என்றால் என்னிடம் ஒரு நல்ல கதையை காட்டுங்கள்' என்கிறார் ஸ்காட் ரென்ஸ்பர்ஜர் ( Scott Rensberger). ஓர் இதழாளராக அவர் கதை சொல்லுதலைதான் முதன்மையாகக் கருதுகிறார். அதனால்தான் தன்னைப்போன்ற இதழாளர்களுக்கான 'செய்தியாக கதை சொல்லுங்கள்' என வலியுறுத்துகிறார். 

ரென்ஸ்பர்ஜர் என்பவர் பல்வேறு விருதுகளை வென்ற பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளராக அறியப்படுகிறார். சிறந்த புகைப்பட கலைஞர் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளவர். கையில் கேமரா சாதனங்களை எடுத்துக்கொண்டு கதைகளுக்காக அலைந்து திரியும் ஒரு நபர் படையாக திகழ்கிறார்.
 
செல்பேசி இதழியலுக்கான 'மோஜோகான்' மாநாட்டில் பேசும்போதுதான் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்: "என்னதான் தொழில்நுட்பம் வரட்டும், தயாரிப்புக்கான புதிய முறைகள் வரட்டும், இதழாளர்களைப் பொறுத்தவரை கதைதான் எல்லாமும்" என்கிறார். 
"கதை சொல்லுதல்தான் உலகின் சக்தி வாய்ந்த விஷயம், அது சமூகத்தில் உள்ள புள்ளிகளை இணைக்கிறது" என்று மேலும் குறிப்பிடுகிறார்.

இங்கு கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு கதை சொல்லுதல் பற்றி பேசியாக வேண்டும். 

கதை என்றால் என்ன? 

ஒரு இதழாளருக்கும் கதைகளுக்கும் என்ன தொடர்பு? 

இதழாளர்கள் ஏன் கதை சொல்ல வேண்டும்? 

இதுபோன்ற கேள்விகள் எழலாம். கதை எனும் போது புனைவு என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. சொல்லப்படும் எல்லாமே கதைகள்தான். பதிவு செய்யப்படும் எல்லாமே கதைகள்தான். உண்மையில் மனிதகுல வரலாறே கதைகள் மூலம்தான் சொல்லப்படலாயிற்று. எனவேதான், பத்திரிகைகளில் படிக்கும் செய்திகளும், காட்சி ஊடகங்களில் காணும் செய்திகளும், எல்லாமே அடிப்படையில் கதைகள்தான்.

பொதுவாக இதழியல் உலகில் செய்தியை, அதிலும் குறிப்பாக புதிய பார்வை கொண்ட செய்திகள் கதைகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. இதற்கு காரணம், அவை சுவாரஸ்யமாக இருப்பது மட்டும் அல்ல; உயிரோட்டமாக இருப்பதும்தான்.
 
இதழியல் அடிப்படை அம்சங்களை கச்சிதமாக விளக்கும் அமெரிக்கன் பிரஸ் இன்ஸ்டிடியூட் இணையதளம், ஒரு நல்ல கதைக்கான அம்சத்தை அழகாக விளக்குகிறது. எது வேண்டுமானாலும் செய்தியாக இருக்கலாம். ஆனால் எல்லாமே செய்தியாகச் சொல்ல தகுதி வாய்ந்தவை அல்ல. 'ஒரு செய்தியை செய்தியாக சொல்லும் தகுதி கொண்டதாக மாற்ற இதழாளர்கள் பின்பற்றும் சரி பார்த்தல் மற்றும் கதை சொல்லுதல் ஆகிய செயல்முறையே இதழியலாகும்.'

ஒரு நல்ல கதை என்பது தகவல் சொல்வதைவிட, குறிப்பிட்ட அந்தத் தலைப்பிற்கு மதிப்பை சேர்க்கிறது. உண்மையில் இதழியல் என்பதே ஒரு குறிக்கோளுடன் கதை சொல்லுதல் ஆகும். 

பின்னணி, நோக்கம், பல்வேறு கோணங்கள், சொல்லப்படாத விஷயங்கள், பொங்கும் உணர்வுகள் என பலவற்றை பேசுவதால் செய்திகளை, குறிப்பாக கட்டுரை (காட்சிக் கட்டுரை) வடிவிலான செய்திகளை 'கதை' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக மொபைல் போன் மூலம் செய்தி சேகரிப்பில் ஈடுபடும்போது சொல்லப்படும் விஷயங்களுக்கு இது இன்னும் கச்சிதமாக பொருந்தும். இதை எப்படி சரியாக செய்வது என்பது பற்றிதான் ரென்ஸ்பர்ஜர் பேசுகிறார். அவர் மொபைல் போனுக்கான கதை சொல்லல் பற்றி தனியே குறிப்பிடவில்லை. பொதுவாக காணொலிக் கதை சொல்லல் குறித்தே பேசுகிறார்.
 
'ஒவ்வொரு நல்ல கதையும் உள்ளம், இதயம் அல்லது பர்சின் மீது தாக்கம் செலுத்த வேண்டும்' என்கிறார் அவர். 'இதற்கு பெரிய பட்ஜெட்டோ, அதிகப்படியான நவீன சாதனங்களோ தேவையில்லை' என்கிறார் அவர். 'நன்றாக கதை சொல்லுவதற்கான தேவை எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது, ஆனால், 4-கே திறன் கொண்ட கேமராவில் மோசமாக கதை சொன்னால் அது 4-கே கேமராவில் பதிவான குப்பைக் கதையாகதான் இருக்கும்' என்கிறார்.

'இதற்காக அதிகம் யோசிக்க வேண்டாம், உங்களை ஒரு பயண வழிகாட்டியாக நினைத்துக்கொண்டு ஓர் இடத்திற்கு சென்று நிகழ்வதை பார்த்து, ஒவ்வொரு அம்சமாக தெரிந்துகொண்டு அவற்றை ஒன்றிணைத்துக் கொள்ளுங்கள்' என்கிறார். 

'அதி நவீன சாதனங்களும், செயலிகளும் குவிந்திருக்கும் நிலையில் இதழாளர்கள் தொழில்நுட்பவாதிகளாக மாறிவிடுவதில் ஆர்வம் காட்டாமல், பார்வையாளர்களுக்கு தெரியாத தகவல்களை சொல்லுங்கள், அவர்கள் பார்த்திராத காட்சிகளை காட்டுங்கள்' என்று மேலும் சொல்கிறார்.

சரி, 'எப்படி நன்றாக கதை சொல்வது? நல்ல கதை சொல்லுதலுக்கு நான்கு முக்கிய அம்சங்கள் தேவை' என்கிறார் அவர். ஹே, நீங்கள், பாருங்கள் மற்றும் ஆகையினால் ('hey', 'you', 'see' and 'so') எனும் நான்கு அம்சங்கள்தான் அவை. 

இதை அழகாக அவர் விளக்குகிறார். கதைக்கு மகத்தான ஆரம்ப காட்சி வேண்டும். அதன் பிறகு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, கதைகளின் அடுக்குகளை முன்வைத்துவிட்டு, கதையின் செய்தியை சொல்ல வேண்டும். 

அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ் நகரில் அவர் உருவாக்கிய காணொலி இதற்கான உதாரணமாக அமைகிறது. 

ஆக, முதலில் நல்ல கதையை தேடுங்கள். அதை செல்பேசி மூலம் சொல்லுங்கள். 

கதைகளைத் தேடிச் செல்வதற்கான வழிகளையும் அவரே சொல்கிறார். 'ஒன்றுக்கும் உதவாத கதைகளை நான் சொல்லச் செல்வதில்லை. முதலில் நல்ல கதைகளுக்காக தூண்டிலிடுகிறேன். எப்போதும் கதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்' என்கிறார். 

என்பிபிஏ இதழுக்காக ரென்ஸ்பர்ஜர் பற்றி பிபிசி செய்தியாளர் லாரா எல்லிஸ் எழுதிய கட்டுரையில், 'அவர் கதைகளை வேட்டையாடும் தன்மையை அழகாக விவரித்திருக்கிறார். ஒரு கதைக்கான கரு தகுதி வாய்ந்ததா என்பதை அவர் தீர்மானிக்கும் விதத்தைப் பார்த்தால் தங்க வேட்டை நடத்துவது போல இருக்கிறது' என குறிப்பிடுகிறார் லாரா. 

நிறைய யோசனைகளை அசைப்போட்டபடி, அவை தொடர்பான கேள்விகளை கேட்டு பரிசீலிக்கிறார். தான் எதிர்பார்க்கும் தங்க துகள் இல்லாவிட்டால், மனதில் இருந்த திட்டத்தை கைவிட்டு முற்றிலுமாக புதிதாக துவங்கவும் அவர் தயங்குவதில்லை. ஒரு நல்ல கதை என்றால் முதுகில் மயிர் கூச்செறியச்செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணம். 

'லண்டனில் டவர் பாலத்தை பராமரிக்கும் குழுவிடம் சென்றவர், சில நிமிடங்களில் ஐந்து பேரிடம் பேச்சு கொடுக்கத் துவங்கிவிட்டார். பாலத்திற்கு என பூனை இருந்ததா? இதில் படுக்கையறை உண்டா? இது பற்றி யாருக்கு அதிகம் தெரியும்? அவசர காலம் என்றால் இதை முன் பக்கம் இருந்து இயக்கலாம் என கேள்விப்பட்டேனே? என அவர் அடுக்கடுக்காக கேட்கிறார். இந்தக் கேள்விகளை எழுப்பும்போதே அவரது மயிர் கால்கள் தூக்கி நிற்பதை உணர முடிகிறது' என பாராட்டுகிறார் லாரா.

இந்தத் தன்மையை ரென்ஸ்பர்ஜரை மகத்தான கதை சொல்லியாக்கி இருக்கிறது. அவர் சொல்லும் காணொலிக் கதைகளை பார்த்தால் நாமும் இதை உணர்ந்து கொள்ளலாம்.

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 23 | அகதிகள் வலியை உணர வைத்தவர்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close