நட்புக்காக உயிரைக் கொடுத்தவர்! - சினிமா இல்லை... தமிழ் இலக்கியம் சொல்வது தெரியுமா?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 04 Aug, 2018 11:15 am
friendship-day-special

இன்றைக்கு சினிமாவில் நட்பு பற்றி வாய் கிழிய பேசும் வசனங்களை கேட்டிருக்கிறோம். நண்பன் கேட்ட உயிரைக் கூட தருவேன் என்று சொல்வார்கள்... ஆனால் அப்படி உயிரைத் தந்ததாக யாரையும் இந்தக் காலத்தில் நாம் கண்டது இல்லை...

ஆனால், நம்முடைய தமிழ் இலக்கியத்தில் நட்புக்காக தன்னுடைய உயிரையே கொடுத்த வரலாறு இருக்கிறது. இன்றுவரை தமிழ் இலக்கியத்தில் சிறந்த நட்பு என்று அதைத்தான் போற்றுகின்றனர். அவர்கள் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்... இவர்களின் நட்பைப் பற்றி பள்ளிப் பாடத்தில் பலரும் படித்திருக்கலாம்.

பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர் பிசிராந்தையார். இவருக்கும் சோழ மன்னன் கோப்பெருஞ் சோழனுக்கும் மிக நெருங்கிய நட்பு. தமிழ் மேல் கொண்ட காதலால் புலவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருபவன் கோப்பெருஞ் சோழன். இதனால், பிசிராந்தையாருக்கு கோப்பெருஞ் சோழன் மீது நட்பு ஏற்பட்டது. ஆனால், பிசிராந்தையாரால் கோபெருஞ் சோழனை காண முடியவில்லை. நெடுந்தூரம் பயணம் செய்து காணும் அளவுக்கு பிசிராந்தையாரால் முடியவில்லை. ஆனால், இருவருக்கும் இடையேயான நட்பு மட்டும் நீடித்து வந்தது.

தந்தையின் செயல்பாட்டில் மகன்களுக்கு விருப்பமில்லை. இதனால், தந்தைக்கு எதிராக போரிட அவர்கள் முடிவு செய்தனர். கோப்பெருஞ் சோழனும் போரிட தயாரானான். அப்போது, அவனிடம் பேசிய புலவர் எயிற்றியனார், மன்னா நீ மறைந்த பிறகு இந்த நாட்டை ஆளப்போவது அவர்கள்தானே... பிறகு ஏன் அவர்களுடனே சண்டையிட போகிறாய் என்று தடுத்தார். இதில் உண்மையை உணர்ந்த கோப்பெருஞ்சோழன், தன்னுடைய நாட்டை தன்னுடைய புதல்வர்களுக்கு கொடுத்துவிட்டு, வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார்.

இந்த விஷயம் எதுவும் பிசிராந்தையாருக்குத் தெரியாது. வடக்கிருக்கச் செல்லும்போது, என்னுடைய நண்பன் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். அவரிடம் என்னுடைய அன்பை தெரிவித்துவிடுங்கள் என்று கூறினார். இதைக் கேட்ட புலவர் பொத்திரையார், மன்னா இங்கு நடந்த விஷயம் எதுவே பிசிராந்தையாருக்குத் தெரியாதே... பிறகு எப்படி அவர் வருவார் என்று கேட்டார்.

அதற்கு கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நிச்சயம் வருவார் என்று கூறி வடக்கிருந்தான். உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் உயிர் நீத்தான் கோப்பெருஞ்சோழன்.

தன் மனதில் ஏதோ தோன்றவே, பிசிராந்தையாரும் புறப்பட்டு சோழனைக் காண வந்தார். வந்தவருக்கு அதிர்ச்சி மன்னர் வடக்கிருந்து உயிரிழந்தது தெரியவந்தது. துயருற்ற பிசிராந்தையார், மன்னன் வடக்கிருந்து உயிரிழந்த இடத்திற்கு அருகே தானும் வடக்கிருந்து உயிரைவிட்டார்.

இருவரும் உயிரிழந்ததை 

“இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக

இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்

வருவன்  என்ற  கோனது  பெருமையும் 

அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்

வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே." (புறம் 217)

என பொத்தியார் தன்னுடைய பாடலில் பதிவு செய்துள்ளார். காலம் கடந்தும் அவர்கள் நட்பு இன்றும் பேசப்படுகிறது.

இதேபோல், அதியமான் - அவ்வையார் நட்பும் பெருமையுடன் சொல்லப்படுகிறது. அதியமான் தனக்குக் கிடைத்த நெல்லிக் கனியை அவ்வைக்கு கொடுத்ததும், மூவேந்தர்கள் அதியமானுக்கு எதிராக போர் புரிய வந்தபோது, அவ்வை அதைத் தடுத்ததையும் நாம் கேள்விபட்டதுதானே!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close