கிரிக்கெட் உலகின் சிறந்த ஃபிரண்ட்ஷிப் பார்ட்னர்கள் தோனி - ரெய்னா! #FriendshipDay

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2018 12:17 pm
ms-dhoni-suresh-raina-are-best-friends-in-indian-team-friendshipday

கிரிக்கெட் போட்டியில் எம்.எஸ். தோனி - சுரேஷ் ரெய்னா இணை, மிகவும் அச்சுறுத்தலான பார்ட்னர்ஷிப்களில் ஒன்றாக விளங்குகிறது. இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இணைந்து, குறுகிய போட்டிகளில் பல சிறந்த பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி இருக்கின்றனர். பல போட்டிகளில் இந்த பார்ட்னர்ஷிப் வெற்றிகளை குவித்துள்ளது. 

சிறிய டவுனில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் தோனி மற்றும் ரெய்னா. தோனி ராஞ்சியை சேர்ந்தவர் மற்றும் முராத்நகரைச் சேர்ந்தவர் ரெய்னா. 2005ம் ஆண்டு ரெய்னா, சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அப்போது, ரெய்னா தரையில் தூங்குவார். இதை பற்றி அவரிடம் கேட்டால், தரையில் படுத்து உறங்கி தான் பழக்கப்பட்டு விட்டதாக கூறுவார். இதனால் அவருடன் தோனியும் தரையில் உறங்குவார். இப்படி தான் இவர்களது நட்பு காலப்போக்கில் வலு பெற்று, தொடர்ந்து வருகிறது. 

களத்தில் மட்டுமில்லாமல், களத்தை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த பார்ட்னர்களாக தோனி-ரெய்னா உள்ளனர். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இணையும் போது, இவர்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

தல மற்றும் சின்ன தல என்றே இவர்களை ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். தோனிக்காக இந்த 2018 ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல வேண்டுமென்று, ரெய்னா உணர்ச்சிவசப்பட்டு பேசியது அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இவர்களை போன்ற ஃபிரண்ட்ஷிப் வேண்டுமென ரசிகர்களும், அவர்களை போன்றே ஒற்றுமையாக இருக்க வேண்டுகின்றனர். 

இது அனைத்தையும் தாண்டி நம்மை இவர்களுக்காக உருக வைத்ததற்கு முக்கிய காரணமாக ஸிவா உள்ளார். ஸிவா பிறந்த சமயம், தோனி தேசிய அணிக்கான சுற்றுப்பயணத்தில் இருந்தார். அப்போது அவர் கையில் மொபைல் போனை வைத்துக் கொள்ளவில்லை. இதனால் ஸிவா பிறந்த செய்தியை சாக்ஷி, ரெய்னாவிடம் தெரிவித்தார். தோனிக்கு ஸிவா பிறந்த செய்தியை தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டார். இந்த தகவல் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்தது. அந்த நேரம், இவர்களின் நட்பிற்கு பெரிய மரியாதை ஏற்பட்டது. 

இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே அணியில் தோனியின் தலைமையின் கீழ் ரெய்னா விளையாடியுள்ளார். பல முறை இந்திய அணி கேப்டனாக ரெய்னாவும் செயல்பட்டுள்ளார். ஐ.பி.எல்-ல் குஜராத் லயன்ஸ் அணி கேப்டனாக ரெய்னா இருந்த போதிலும், தோனியிடம் கேப்டன்ஷிப் ஆலோசனைகளை பெற ரெய்னா தவறியதே இல்லை. தோனி மீது அளவுகடந்த மரியாதை, நம்பிக்கை வைத்துள்ள ரெய்னா, அவரிடம் இருந்து ஒரு சிஷியனாக இன்றும் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டு தான் வருகிறார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த  ஃபிரண்ட்ஷிப் பார்ட்னர்களில் தோனி - ரெய்னா இணையும் மிகவும் பிரபலம். ரசிகர்களை கவர்ந்த தோனி - ரெய்னாவின் ஃபிரண்ட்ஷிப்பை போற்றும் விதமாக, தோனி - ரெய்னாவின் ஃபிரண்ட்ஷிப் பாடல் கூட வெளியானது. இவர்களது ஃபிரண்ட்ஷிப்புக்கு முடிவில்லை என்றும், எப்போதும் இப்படியே தோனி - ரெய்னாவின் ஃபிரண்ட்ஷிப் தொடர வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆசை.

களத்தில் இவர்களது பார்ட்னர்ஷிப் குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. குறுகிய ஓவர் போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்த இணை, ஒருநாள் போட்டியில் சுமார் 3500 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் வைத்துள்ளது. சராசரி 63 ஆகும். 9 சதம், 17 அரைசதங்களும் இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்டுள்ளது. இந்திய பார்ட்னர்ஷிப் ஸ்கோர், சராசரியில், இதுவே அதிகபட்சமாகும்.

தோனி-ரெய்னா இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் வைத்துள்ள அன்பு, மரியாதையை வெளிக்காட்டத் தவறியதில்லை. ஒரு தாய் வயிற்றில் பிறக்காத போதிலும், சகோதரராகவே இருவரும் பழகி வருவதும் ரசிக்கத்தக்க அம்சமாக உள்ளது. அவர்களது உறவில் இருக்கும் ஒற்றுமை, நம்பிக்கை, மரியாதை, அவர்களுடன் சேர்ந்து மற்ற அனைத்து உறவுகளிலும் நீடிக்க வேண்டும். 

நியூஸ்டிஎம் சார்பாக ஃபிரண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close