கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு !!

  கோமதி   | Last Modified : 18 May, 2018 03:58 pm


கிராமத்து பால்காரர் ஒருவரிடம்  இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன. அதில் கிடைக்கும் பாலில் தான் அந்த குடும்பம் நடந்து கொண்டிருந்தது. சொற்ப வருமானம்  என்பதால் குடும்பம் வறுமையில் தத்தளித்தது. அந்த ஊருக்கு ஒரு முறை ஆன்மிகப் பெரியவர் ஒருவர் வந்தார். அவர் அற்புதங்கள் செய்கிறார் என்ற தகவல் கிடைத்ததால் பால்காரர் , அந்த ஆன்மிகப் பெரியவரை சந்தித்து தனது குடும்பம் படும் சிக்கல்களை சொல்லி அழுதார்.

 

ஆன்மிகப் பெரியவர் , “இனி துன்பம் இல்லை. பெரும் பொருள் செல்வம் சேரும்” என்று ஆசி வழங்கிய  நாள், முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.பால் விற்பனை பெருகி பெரும் லாபம் கிடைத்தது.இரண்டு மாடுகள் இருபது , நாற்பது என பல்கிப் பெருகியது. கூரை வீடு மாடி வீடாக மாறியது. பால்காரர் பணக்காரராக மாறிவிட்டார். சில வருடங்களுக்கு பிறகு அதே கிராமத்துக்கு மீண்டும் வருகை புரிந்தார் ஆன்மிகப் பெரியவர், தான் ஆசி வழங்கிய பால்காரர்  இன்று பெரும் செல்வந்தராக மாறியது பற்றி கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தார். அதே நேரம் , அந்த பணக்கார பால்காரர் தன்னை வந்து சந்திக்காதது குறித்து கோபம் கொண்டார். நன்றி கெட்டவன் என்று தூற்றிய ஆன்மிகப் பெரியவர் நேராக பால்காரர் வீட்டுக்குப் போனார்.

 

பால்காரர் அப்போது மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் .ஆன்மிகப் பெரியவரை வரவேற்ற  பால்காரரின் மனைவி, அவரது வருகையை கணவரிடம் தெரிவித்தார். கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் காத்திருக்க சொல்லவும் என தனது மனைவியிடம் தகவல் சொல்லி அனுப்பினார் பால்காரர். இதைக் கேட்டவுடன் கோபமடைந்த ஆன்மிகப் பெரியவர், “ இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழைய படி ரெண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும்.” சபித்து விட்டு சென்று விட்டார்.

 

ஆன்மிகப் பெரியவர்  சொன்னது காதில் விழ பதறிப்போனார் பால்காரர் . வேலைகளை அப்படியே விட்டு விட்டு ஆன்மிகப் பெரியவரை சந்தித்து காலில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டி அவரைத் தேடினார். எங்கு தேடினாலும் அவர் கிடைக்கவில்லை. புலம்பியபடி வீட்டுக்கு திரும்பினால் மாட்டு கொட்டகையில் வெறும் இரண்டு மாடுகள் மட்டுமே இருண்டஹ்து. இது பால்காரர்  துக்கத்தை மேலும் அதிகரித்தது.

 

"என் அலட்சியத்தால் எல்லாம் போச்சு . இனி பழையபடி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினார் பால்காரர். அவரது புலம்பலைக் கேட்ட பால்காரரின் மனைவி, கணவனைப் பார்த்து "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க. " என்றாள், பால்காரர் கடுப்பின் உச்சத்தில் இருந்தார். மிஞ்சிய இரண்டு மாடுகளையும் சந்தையில் விற்று விட்டால் அடுத்த வேலை கஞ்சிக்கு என்ன வழி என்ற கவலை அதிகமாகிவிட்டது, ஆனாலும் பால்காரர் , அவரது மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் ,இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினார் .

 நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால்  சந்தையில் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.கண்ணீர் மல்க பணத்துடன் வீடு திரும்பினார் பால்காரர். வீட்டில் நுழைந்தால் மனைவியோ பெரு மகிழ்சியுடன் இருந்தார். பால்காரருக்கு எதுவும் புரியைல்லை . அப்போது அவரது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவரை வரவேற்றாள்.

 பால்காரருக்கு  ஒன்றுமே புரியவில்லை. மனைவி சொன்னாள்.

"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க." உடனே கொல்லைப்புறத்தில் உள்ள தொழுவத்துக்கு ஓடினார் பால்காரர்.அங்கு இரண்டு புது மாடுகள் இருந்தது. தொடர்ந்து பேசிய மனைவி , "எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்? அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா?" இப்படி சொன்னதும் புரிந்தது.

அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்த பால்காரர் முன்பை விடப் பெரிய பணக்காரர் ஆனார்.இரண்டு படிப்பினைகளை இந்த  கதை நமக்கு தருகிறது. வசதி வந்தாலும் பழையதை மறக்கக் கூடாது. புத்தி பலத்தால் சாபத்தையும் நாம் வரமாக மாற்றிக்கொள்ளலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.