எதை சுமக்கிறோம்? ஏன் சுமக்கிறோம்?

  கோமதி   | Last Modified : 19 May, 2018 07:37 am


ஒரு நாட்டின் அரண்மனைக் கதவில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் , “ மன்னர் விருந்தளிக்கப் போகிறார்.அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே மன்னர் விருந்தில் அனுமதிக்கப்படுவர்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பை படித்த பிச்சைக்காரர் , தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே ,

தான் ஏன் இந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற திடீர் எண்ணம் ஏற்பட்டது. இதைப்பற்றி யோசித்த போதே, பிச்சைக்காரருக்கு நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் என்ன ஆகிறது பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு,அரண்மனை வாசலை அடைந்தார் .

வாயிற்காவலனிடம், ''அரசரைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரரிடம், ''உனக்கு என்ன வேண்டும் ? '' என்றார் அரசர்.

'' நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணி

ந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றார் பிச்சைக்காரர்.

அதே நேரம், அரசர் என்ன சொல்வாரோ என நடுக்கமும் இருந்தது. ஆனால் அரசரோ , பிச்சைக்காரருக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்ட பிச்சைக்காரர் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தார். தனது கம்பீரத் தோற்றம் மகிழ்வை தந்தது.

அப்போது அரசர் பிச்சைக்காரரிடம் , ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.

அதைவிட, முக்கியமான ஒன்று...

இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்பிய பிச்சைக்காரர்,மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தார் .மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவர் , சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாததால் அந்த பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தார். மன்னர் அளித்த இரவு விருந்தையும் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

அரச உடையும் கம்பீரமும் வந்த பிறகும் பழைய துணி மூட்டை, பிச்சைக்காரரின் வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியை பறித்து விட்டது. நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் வேதனையில் தவிக்கிறோம். பழைய மூட்டையை தூர எறிவோம். எல்லா நாளும் இனிய நாளாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.