நாம் முன்னேறுவதை யார் தடுத்து விட முடியும் ?

  கோமதி   | Last Modified : 22 May, 2018 09:35 am


வாழ்வியல் தத்துவங்களை மக்களிடம் மிக எளிதாக கொண்டு சேர்த்தவர் கெளதம புத்தர். ஒரு நாள் தனது பிரதம சிஷ்யரான ஆனந்தாவுடன் பிச்சை எடுக்க போனார் புத்தர்.அப்போது ஒரு வீட்டில் பிச்சை கேட்ட போது ஒரு பெண் "முட்டாளே உனக்கு பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா..?" என்று பலவாறு புத்தரையும் அவருடைய சீடரையும் திட்ட தொடங்கினாள்.

ஆனந்தாவுக்கு மிகவும் கோபம் வந்தது. அவரது பொறுமை எல்லை மீறி,அந்த பெண்ணை திட்ட முயன்றார். புத்தர் ஆனந்தாவை தடுத்து அந்த இடத்தில் இருந்து எதுவும் பேசாது விலகி வந்த பிறகு, தனது திருவோட்டை ஆனந்தாவிடம் கொடுத்து "இதை மாலைப்பொழுதில் திருப்பி கொடு..!" என்றார்.

புத்தர் ஏன் அவ்வாறு சொன்னார் என்று புரியாவிட்டாலும் ஆனந்தா, திருவோட்டை பெற்றுக் கொண்டு,மாலைப்பொழுது வந்ததும் திருவோட்டை புத்தரிடம் திருப்பி கொடுத்தார். அதற்கு புத்தர் "இல்லை இதை நீயே எடுத்து கொள்..!"என்றார்.

இரவானதும் தூங்கச்செல்லும் முன் ஆனந்தாவை பார்த்து "இந்த திருவோடு யாருடையது..?" என்று கேட்டார் . "என்னுடையது..!" என்றார் ஆனந்தர். "ஆனந்தா.. அது எப்படி, எனது திருவோடு உனது ஆனது..? எனகேட்டார். "நான் திருப்பி தரும்போது நீங்கள் ஏற்க மறுத்து விட்டீர்கள் அதனால் என்னுடையது ஆனது..!" என்றார் ஆனந்தர்.

"இதே போல் தான்.. அந்த பெண் திட்டிய வார்த்தைளை நான் வாங்கிக் கொள்ளவில்லை.. அதனால் அந்த வார்த்தைகள் அவளிடமே போய் சேர்ந்தது..!" என்றார் புத்தர்.

இதை விட எளிமையாக நமக்கு யாராவது உணர்த்தி விட முடியுமா?. என்றோ யாரோ சொன்ன சொற்களை மனதில் தேக்கி வைத்தது இன்றளவும் மனம் புழுங்கிக் கொண்டிருப்பவர் நம்மில் ஏராளம். நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் அவமதித்து விட முடியாது என்ற தெளிவு நமக்கு வந்துவிடுமானால், நாம் முன்னேறுவதை யாராலும் தடுத்து விட முடியாது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close