யார் நம்முடைய குரு?

  கோமதி   | Last Modified : 23 May, 2018 11:53 amகுரு தன் சீடர்களுக்கு அன்றைய பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார்.  அப்போது அவருடைய சீடர்களில் ஒருவன்அவரிடம், “ சுவாமி உங்கள் குரு நாதர் யார்’? ” என்று கேட்டான். அதற்கு குரு , “எனக்கு ஞானத்தை தந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் அல்ல,ஆயிரக்கணக்கான ஆசான்கள் இருக்கிறார்கள். இருப்பினும் மூவரை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். என்னுடைய முதல் குரு ஒரு திருடன் என்றார்.

 

இதைக் கேட்டதும் சீடர்களிடம் ஒரு சலசலப்பு. குருவும் புன்னகை மாறாமல், “ஒருமுறை நான் ஒரு கிராமத்தை அடைந்த போது இருட்டிவிட்டது. வீட்டுக்கதவுகள் எல்லாம் மூடியிருந்தன. கடைசியில் திருடன் ஒருவன் எதிர்பட, நான் அவனிடம் தங்குவதற்கு இடம் கேட்க உங்களுக்கு ஒரு திருடனுடன் தங்குவதில் ஆட்சேபணை இல்லையென்றால் என்னுடன் தங்கலாம் என்றான். நான் அவனுடன் ஒரு மாதம் தங்கினேன்” என்று சொல்லி நிறுத்தி விட்டு சீடர்களைப் பார்த்தார்.

 

பின் அவரே தொடர்ந்து , “தினமும் அவன் இரவில், “நான் வேலைக்குப் போகிறேன் நீங்கள் வீட்டில் தியானம் செய்யலாம் அல்லது ஓய்வெடுக்கலாம்” எனச் சொல்லிவிட்டுப் போவான். அவன் திரும்பி வந்ததும், “ஏதாவது கிடைத்ததா?” என்று கேட்பேன் அவன் , “இன்று ஒன்றும் கிடைக்கவில்லை ஆனால் நாளை மறுபடியும் முயற்சி செய்வேன். கடவுள் அருள் இருந்தால் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் பதில் சொல்வான். “நான் தியானம் செய்யும்போது ஒரு பலனும் இல்லையே” என பலமுறை நம்பிக்கை இழந்திருக்கிறேன். உடனே அந்தத் திருடனின் திட நம்பிக்கை நினைவுக்கு வரும் உடனே கடவுள் அருள் கிட்டினால் நாளை நமக்கு ஞானம் பிறக்கும் என்று உற்சாகமடைவேன்” என்றார்.

 

அடுத்த குரு யார் என்று சீடர்கள் கேட்க ,“என்னுடைய அடுத்த குரு ஒரு நாய். நான் தண்ணீர் பருக ஒரு நதிக்குச் சென்றேன். அங்கு ஒரு நாய் வந்தது. நீர் குடிக்க வேண்டி நதியை நோக்கிக் குனிந்தது. அங்கே தனது பிம்பத்தைப் பார்த்து இன்னொரு நாய் இருப்பதாக எண்ணி பயந்து குறைத்துக்கொண்டே ஓடியது. மீண்டும் தாகத்தால் வரும் ஓடும் இப்படி பலமுறை செய்த பின் நதியில் குதித்தது. பிம்பம் உடனே மறைந்து விட்டது. பயங்களை வென்று செயலில் இறங்க வேண்டும் என்பதை அந்த நாய் எனக்கு உணர்த்தியது” என்றார்.

 

தன்னுடைய மூன்றாவது குருவைப் பற்றி அறிந்துக்கொள்ள சீடர்கள் ஆர்வமாய் இருப்பதை அறிந்துக் கொண்ட குரு , “ஒரு சிறுவன்  நான் ஒரு ஊருக்குள் சென்றபோது அவன் எரியும் மெழுகுவர்த்தியுடன் வந்து கொண்டிருந்தான். அவனிடம்,“மெழுகுவர்த்தியின் ஒளி எங்கிருந்து வந்ததென்று உன்னால் சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.

 

உடனே சிறுவன் சிரித்துக்கொண்டே மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்து விட்டு,”ஒரு வினாடி முன் ஒளி இருந்தது இப்போது இல்லை அது எங்கே போயிற்று? நீங்கள் சொல்லுங்கள்” என்றான் என்னிடம். நான் அதிர்ச்சியில் பேச்சிழந்து போனேன். மெத்தப் படித்த அறிவாளி என்ற என் அகங்காரம் ஒரு நொடியில் மாயமாயிற்று.அன்றிலிருந்து அகங்காரப்படுவதை விட்டோழித்து விட்டேன். அதனால் என்னுடைய மூன்றாவது குரு அந்த சிறுவன்” என்றார்.

 

அன்றாடம் நாம் சந்திக்கும், நம்மை கடந்து செல்லும் அனைவருமே நமக்கு எதோ ஒரு விதத்தில் குரு தான். நாம் காணும் நபர்களிடம் நமக்கான விஷயத்தை நாம் கற்றுக்கொள்ளத் தயார் நிலையில் இருந்தால் போதும் எல்லா நாளும் இனிய நாளே.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.