வெற்றி பெறுவதற்கு காது கேட்க தேவையில்லை !

  கோமதி   | Last Modified : 24 May, 2018 10:36 am


தலைப்பை பார்த்தவுடன் இதென்ன வெற்றிக்கும் , காது கேட்பதற்கும் என்ன தொடர்பு ? என்ற கேள்வி இயல்பாக எழும். இந்த கதை உங்களுக்குத்தான் . மலையடிவார கிராமம் ஒன்றில், இருந்த மூன்று தவளைகள் மலையின் உச்சியை அடைய ஆசைப்பட்டது. அந்த மலையின் சிகரத்தில் இருந்து கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த தவளைகளுக்கு.

ஒரு நாள் மூன்று தவளைகளும் மலையேற ஆரம்பித்தது. அந்த சமயத்தில் இதைப்பார்த்த ஒரு மனிதர் "இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான், உங்கள் உடம்பில் ஒன்றும் மிஞ்சாது " என்றார்.

இதைக் கேட்டவுடன் ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

ஆனாலும் இரண்டு தவளைகள் தொடர்ந்து மலையேறியது . சில நுறு அடிகள் உயரத்தை தவளைகள் அடைந்த நிலையில் , வழியில் தென்பட்ட இன்னொரு மனிதர் "மலையின் மேலே பாம்புகள் நடமாட்டம் அதிகம். நீங்கள் மலை மீது செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் உங்கள் ஆயுள் முடிந்தது." என்றார். இதைக் கேட்டவுடன் இன்னொரு தவளை, மலை சிகரம் தொடுவதை விட தனது உயிர் முக்கியம் என்று சொல்லிவிட்டு மலையை விட்டு இறங்கத் தொடங்கியது.

மூன்றாவது தவளையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலையேறி சிகரம் தொட்டது.அங்கிருந்து கிராமத்தைப் பார்த்து மகிழ்ந்து , தானாகவே மலையில் இருந்து இறங்கி மலையடிவாரத்தை அடைந்தது.

இந்த செயல் மற்ற இரண்டு தவளைகளுக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்தது. மலையேறுவதில் உள்ள ஆபத்துகளை சொல்லியும் இந்த தவளை மலையேறி திரும்பியதன் ரகசியத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டது.

மூன்றாவது தவளையை பார்த்து, “ எப்படி உனக்கு இந்த துணிச்சல் வந்தது?” என்ற கேள்வியை கேட்டது மற்ற இரு தவளைகளும். சில நிமிடங்கள் எந்த பதிலையும் மூன்றாவது தவளை தரவில்லை. மீண்டும் சைகைகளால் தங்கள் கேள்வியை முன்வைத்தன இரு தவளைகளும். அப்போது பொறுமையாக பதில் கொடுத்தது சிகரம் தொட்ட தவளை.

“எனக்கு சரியாக காது கேட்காது. இந்த மலையேற்றம் குறித்து யார் என்ன சொன்னார்கள் என்பதை எனது காதும் மனதும் கேட்கவில்லை. என்னுடைய ஒரே இலக்கு மலை உச்சியை அடையவேண்டும் என்பதே, அதை நோக்கி நகர்ந்தேன், சிகரத்தில் இருந்து கிராமத்தைப் பார்த்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி.” என்றது மூன்றாவது தவளை.

நம்முடைய வாழ்க்கையிலும் , நாம் இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகளை தடுக்க , கெடுக்க பலர் , பல வித வழிகளில் வருவார்கள்.மனத் தெளிவோடு இலக்கை நோக்கி நகரும் போது நம்மை நோக்கி வரும் எதிர்மறை வார்த்தைகளை காதில் கேட்காத மனப்பாங்கை நாம் உருவாக்கிக் கொண்டால் சிகரங்கள் தொடுவது நிச்சயம். இந்த உறுதியான சிந்தனையுடன் இந்த நாளை இனிதாக்குவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள http://www.newstm.in/

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close