ஜூலை மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   | Last Modified : 27 Jun, 2018 11:24 am

2018-july-astro-prediction

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த ஜூலை மாத ராசி பலன்களை உங்களுக்கு அளிக்கிறோம். குடும்பம், தொழில், வேலை, பெண்களுக்கு, மாணவர்களுக்கு என்று பிரத்தியேக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாதம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினம் வருகிறது என்பதையும் அளித்திருக்கிறோம். 

ஜூலை மாதம் முழு உடல் ஆரோக்கியத்துடன் அனைத்து நலன்களையும் அளிக்கும் சிறப்பான மாதமாக அமைய நியூஸ்டிஎம் வாழ்த்துகிறது! 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் - உத்தராயணம் - கிரீஷ்ம ரிது - ஆனி மாதம் 16ம் தேதி பின்னிரவு ஆனி - 17ம் தேதி முன்னிரவு - ஞாயிற்றுக்கிழமையும் - கிருஷ்ண திருதியையும் - திருவோண நக்ஷத்ரமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு மீன லக்னத்தில் 2018 - ஜூலை மாதம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:

சூரியன் - திருவாதிரை -3ம் பாதம் - பகை

சந்திரன் - மகரம் - பகை

செவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்

புதன் - பூசம் -2ம் பாதம் - நட்பு

குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு

சுக்கிரன் - ஆயில்யம் -3ம் பாதம் - பகை

சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு

ராகு - பூசம் - 3ம் பாதம் - பகை

கேது - திருவோணம் - 1ம் பாதம் - நட்பு

மேஷம்

சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்னைகள் தீரும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்னைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

குடும்பத்தில் கணவன் மனைவி அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள்,  நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம்.  

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அ மையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு உற்சாகமான கால மாக அமையும்.  கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். 

பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:  முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

ரிஷபம்

எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் ரிஷபம் ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும்  பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்னையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்துறையினருக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.

மாணவர்கள் விளையாட்டு  போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

சந்திராஷ்டம தினங் கள்: 25, 26

மிதுனம்

அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

 குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

பெண்கள் வார்த்தைக ளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 27, 28, 29

கடகம்

நளினமாக பேசி காரியங்களை சாதிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். 

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். 

மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். 

பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

சிம்மம்

அனுபவ ஞானத்தைக் கொண்டும் சமயோசித சாமர்த்தியத்துடன் செயலாற்றி காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்ற வரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான கா லமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல்துறையினருக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். 

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறூம் சிவனை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

கன்னி

எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வா கனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். 

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். 

மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரிய  அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்னை தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8, 9

துலாம்

கடின உழைப்பால் வளர்ச்சி அடையும் அதே நேரத்தில் மற்றவர்களின் இடையூறுகளையும் சாதகமாக்கிக் கொள்ளும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உ ண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். 

தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம்.

கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. 

பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11

விருச்சிகம்

எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய் வது நன்மையைத் தரும். 

தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்னை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்னைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பெண்கள் எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள். 

பரிகாரம்: நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13

தனுசு

மற்றவர்களுக்கு மதிப்பும், கவுரவமும் தரக் கூடிய அதே நேரத்தில் தேவையான உதவிகளையும் தயங்காமல் செய்யும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் பிரச்னையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் த டங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். 

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். 

கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்னை முடிந்ததும் இன்னொரு பிரச்னை உருவாகலாம். 

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். 

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். 

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்: பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். 

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

மகரம்

திட்டங்களை தீட்டுவதில் கெட்டிக்காரரான மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும்.  நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். 

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். 

கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். 

அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.  

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

கும்பம்

எப்போதும் விழிப்புடன் இருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். 

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.

மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

மீனம்

அடுத்தவர் ஆலோசனை கேட்டு செயல்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் சிந்தித்து செயலாற்றும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். 

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். 

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம். 

மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும். 

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close