ஆயுஷ்மான் பாரத் திட்டம்: பயனாளிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

  Padmapriya   | Last Modified : 26 Sep, 2018 07:19 pm
ayushman-bharat-health-scheme-here-s-all-you-need-to-know

ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ நலக் காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தபடி, பண்டித் தீனதயாள் உபத்யாய் பிறந்த நாளில் இந்த திட்டம் நாடு முழுவதும் துவக்கப்பட்டது. 

''இனி ஏழைகள் உடல் நலக்குறைவினால் இறக்க வேண்டியதில்லை. அவர்களது மருத்துவ செலவிற்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படும்'' என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம் குறித்த புரிதலை மக்கள் பெறவேண்டியது அவசியம். ஏனெனில், இது வெறும் மருத்துவ காப்பீட்டு திட்டமாக மட்டுமே செயல்படாது. மாறாக நாட்டின் எந்த மூலையிலும் உள்ள ஒரு சாமானிய நபரின் நோயை கண்டறியவும் அல்லது பரவக் கூடிய ஒரு நோயைத் தடுக்க ஏதுவான நடவடிக்கையை எடுக்க உதவிடும். முழுமையான சுகாதார சுழற்சியை பாதுகாத்திடும். இதற்கான விளக்கத்தை பெற திட்டத்தை சற்று உற்று நோக்குவோம். 

கவனிக்கத்தக்க முக்கிய அம்சங்கள்: 

* ஜன ஆரோக்கிய அபியான் அல்லது ஆயுஷ்மான் பாரத் எனப்படும் இந்தத் திட்டம் முழுவதுமே தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை பயன்படுத்தி எளிமையாக பயனடையும் அளவில் உள்ளது.  வரும் வாரங்களில் திட்டம் தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்களும் சோதிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த உள்ளன. 

* இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 10 கோடி குடும்பங்களுக்கு அல்லது 50 கோடி இந்தியர்களுக்கு இந்தத் திட்டம் கை கொடுக்கும். 

* சமீபத்திய சமூக பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தைச் சேர்ந்த 8.03 கோடி மக்களுக்கும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த 2.33 கோடி மக்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிக்கை கூறுகிறது. 

* பெயருக்கு ஒரு காப்பீட்டுத் திட்டமாக இல்லாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக 1,354 திட்டங்களை சேர்த்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக திகழும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை,  இதய அறுவை சிகிச்சை, மூளை நோய்க்கான அறுவை சிகிச்சை ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது. 15-20% வரை குறைந்த கட்டணத்தில் இந்தத் திட்டத்தில் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
* சாமான்ய மக்களுக்கு தோழமையோடு உதவிட ஒவ்வொரு மருத்துவமனையிலும் 'ஆயுஷ்மான் மித்ரா' எனப்படும் உதவி குழுக்கள் செயல்படும். இவர்கள் திட்ட பயனீட்டாளர்களுக்கு மருத்துவமனைக்கும் இடையில் இருந்து இரு தரப்பிலும் உதவிடுவார்கள். திட்டத்திற்கு பயனீட்டாளர் தகுதியானவரா? எனவும் ஆவணங்களை சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளிலும் இவர்கள் ஈடுபடுவார்கள். 

* இந்தத் திட்டம் பயனீட்டாளர்களுக்கு எளிமையாக இருக்கவும் திட்டத்தை முழுமையாக எந்தத் தடையும் இன்றி செயல்படுத்திடவும் 2 வலுவான கூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

* அவற்றில் ஒன்று பயனீட்டாளர் பதிவேடு (Beneficiary registry) மற்றுமொன்று பதிவேடு (Provider registry).  வழங்குனர் பதிவேடு என்பதில் திட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. முற்றிலும் ரொக்கப் பயன்பாடு இல்லாத எளிமையான தரவுகளை சேகரித்து பாதுகாக்கக் கூடிய நிலையில் இந்த பதிவேடு உதவிடும். 

* பயனீட்டாளர் பதிவேடு என்பதில் திட்டத்தில் பயன்பெறும் பொதுமக்களின் உடல் தகுதிகள் குறித்த விவரங்கள், மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பல முனைகளிலிருந்தும்  இயக்கக் கூடிய வகையிலும் அவசியம் ஏற்படும் நிலையில் பகுப்பாய்வு செய்யவும் வழிவகுத்திடும். 

* நாடு முழுவதிலும் எந்த மருத்துவமனையில் அல்லது பரிசோதனை மையத்திலிருந்தும்  அல்லது சுகாதார மையத்திலிருந்தும் பயனீட்டாளரின் விவரத்தையும் உடல் தகுதியையும் அல்லது முந்தைய உடல் நலம் சார்ந்த முந்தைய குறிப்புகளையும் சரிபார்த்திட உதவிடவும் முடியும். 

* இந்த பதிவேடு முறை பயனீட்டாளரையும் வழங்குனரையும் பாலமாக இணைத்திடுகிறது. அதன்படி கே.ஒய்.சி (KYC)-யை சரிப்பார்த்த பயனீட்டாளர் இந்த திட்டத்தில் பயனடைய கூடியவராயின் அதற்கான அடையாள அட்டையை பெற்றிடுவார். இந்த பணிக்கு பின் பயனீட்டாளரின் அதாவது நாட்டின் எந்த மூலையிலும் இருக்கும் நபரின் மருத்துவ உதவிக்காகவும் உடல் நலன் சார்ந்த பயனுக்காகவும் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு எளிமையாக பயன்படுத்த வகைப்படுத்தப்பட்டிருக்கும். 

* மொபைல் ஃபோன் செயலிகள் மூலமும் இவற்றை பயன்படுத்திடலாம். இதனால் அனைத்து விவரமும் மாறுதல்களும் எந்தக் குழப்பமும் இல்லாமல் பொதுவாகவே  இருக்கும். ஒருவரின் மருத்துவ குறிப்பு முழுமையாக சேகரிக்கப்படும். உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

* இதில் பயனீட்டாளர்களுக்கு நவீன முறைப்படி QR கோடு வழங்கப்படும். அதன் மூலம் பயனீட்டாளர்களின் விவரங்கள் நம்பகத் தன்மையோடு சரிப்பார்க்கப்படும்.  இதனால் உதிரி ஆவணங்கள் குவியாது. பாதுகாப்பான தகவல் உள்ளடக்கம் மட்டுமே இருக்கும். தகவல்கள் தவறான நோக்கத்துக்காக பயன்படாமல் இருக்க பயனீட்டாளருக்கு தனிப்பட்ட OTP அளிக்கப்படும். 

* குறைந்தது 10 படுக்கைகள் இருக்கும் மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்திட முடியும் என்பது மேலும் ஒரு சிறப்பு. இதனை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம். 

* அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ள இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.11,000 கோடி தொகையை மத்திய மாநில அரசுகள் இணைந்து செலவிட போகின்றன. இதில் மத்திய அரசு 60% தொகையையும் மாநில அரசு 40% தொகையையும் பகிர்ந்தளிக்கும். 

ஆக ஆயுஷ் மான் பாரத் திட்டம் வெறும் காப்பீட்டு திட்டமாக இல்லாமல் ஒரு சராசரின் மனிதரின் முழு உடல்நலனையும் பாதுகாக்க உதவுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close