பொங்கல் ஸ்பெஷல்- நமது அங்கமாகிவிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்ல ஒரு நாள்

  கோமதி   | Last Modified : 15 Jan, 2019 07:05 pm

pongal-special-one-day-to-thank-our-livestock

எப்போதும் நம்மை அலங்கரித்துக் கொள்வதில் கவனம் செலுத்துவது இயல்புதான். ஆனால் இன்றைய நாளின் முக்கிய நாயகன் கால்நடைதான்.  இன்று முழுக்க அவைகளுக்காக நன்றி செலுத்தும் நாள் என்பதால் அவற்றை அலங்கரிப்பதிலும் கவனிப்பதிலும் தான் நம் முக்கிய நோக்கமாக இருக்கும். உலகில் எத்தனையோ ஜீவராசிகள் ஜீவித்திருக்க, கால்நடைகளுக்கு மட்டும் என்ன தனிசிறப்பு என்றுதானே கேட்கிறீர்கள். அதற்கு சுவாரசியமான புராணக் கதை உண்டு. சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடந்த திருவிளையாடலில் தான் மாட்டுப்பொங்கல் உருவாயிற்று. .

உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் சிவப்பெருமானுக்கு பூலோகத்தில் இருந்த அத்தனை உயிரினங்களையும் பார்த்துக் கொள்வது சிரமமாக இருந்தது.அவரது பணியை சுருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். சரி நமக்கு துணையாக இருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வேலையைப் பகிர்ந்தளிப்போம் என்ற முடிவுக்கு வந்தார். யாருக்கு என்ன வேலை தருவது என்று யோசித்தபோது அவர் அருகிலேயே இருந்த நந்திதேவன் அகப்பட்டுகொண்டார். சிவப்பெருமான் அருகில் அழைத்ததும் நந்திக்கு உற்சாகம் பொங்கிற்று. சிவபெருமான் நந்தியிடம் உனக்கு ஒரு வேலை சொல்கிறேன் சரியாக செய்வாயா என்றார். உலகை ஆளும் பரம்பொருளுக்கு வேலை செய்வது அடியேனின் பாக்கியம்.. தாங்கள் சொல்லும் அனைத்தும் சிறப்பாக நடக்க நான் துணை நிற்பேன் என்றார் உற்சாகம் குறையாமல். சிவபெருமானுக்கு  நந்தியின் மீது நம்பிக்கை வந்தது. நீ உடனடியாக பூலோகம் சென்று, உலகமக்களிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை உணவை எடுத்துக்கொள்ள சொல்.. சரியாக செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறினார். சொல்லும் போது தலையைத் தலையை ஆட்டிய நந்திபகவான் சிவபெருமானிடம் விடைபெற்று பூலோகம் வந்தார்.

பூலோகம் வந்த நந்தி, சிவபெருமான் தன்னை நம்பி கொடுத்த பொறுப்பை நினைத்து நினைத்து மகிழ்ந்தார். பரம்பொருள் சொன்னதைச் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நந்தி சரியாக மாற்றி செய்துவிட்டார். அதாவது மாதம் ஒருமுறை எண்ணெய்க் குளியலும்… தினசரி உணவும் உட்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். கையோடு சிவபெருமானிடமும் தாங்கள் கூறியபடி மாதம் ஒருமுறை எண்ணெய் குளியலும், தினமும் உணவும் உண்ணும்படியும் சொல்லிவிட்டேன் என்று சாந்தமாக  சந்தோஷமாக கூறினார் நந்திபகவான். நந்தி சொன்னதைக் கேட்ட சிவபெருமானுக்கு ஆவேசம் வந்துவிட்டது. சிவபெருமான் என்ன சாந்தமான ஆளா... கோபம் பொங்கிவிட்டது. நான்  உன்னிடம் என்ன சொன்னேன்..எத்தனை முறை சரியாக செய்ய வேண்டும் என்று சொன்னேன். நீயானால் அதை மாற்றி விட்டாயே இனிமேல் பூலோகத்திலேயே நீ இருக்க வேண்டும். உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மனிதர்களுடன் இணைந்து உணவை அதிகரிக்க நீயும் உழைக்க வேண்டும் என்று சாபம் கொடுத்துவிட்டார்.

செய்த தவறுக்கு தண்டனையாக நந்தியும் பூலோகத்தில் வசிக்க தொடங்கியது. மனிதர்களுடன் இணைந்து மாளாமல் உழைக்கவும் தொடங்கியது. அதனால் தான் அதிகமாக வேலை செய்பவர்களை மாடு போல் உழைக்கிறான் என்று கூறுகிறோம். அன்று முதல் மாடு நம்முடைய வாழ்வில் அங்கமாகிவிட்டது. அதுமட்டுமல்ல கோமாதா என்று அழைக்கப்படும் பசுவில் எல்லா தேவர்களும் அடங்கியிருப்பதாலும் இந்நாள்  கால்நடைகளுக்கு உகந்ததாயிற்று என்று சொல்வார்கள்.

நமக்காக உழைக்கும் கால்நடைக்கு நன்றி தெரிவிக்கவே மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுகிறோம். பொங்கலோ பொங்கல்.. மாட்டுப்பொங்கல் என்று சத்தமிட்டு... ஜல் ஜல் என  சலங்கைப்பூட்டி ஜோராய் செல்லும் மாட்டுபொங்கல் மாட்டுவண்டி பயணம் ஏரோப்ளேனுக்கு ஈடாகுமா என்ன? 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.