பொங்கல் ஸ்பெஷல் - உடன் பிறந்தவர்களின் நலனுக்கு ஒரு நாள் - கணுப்பிடி நோன்பு

  கோமதி   | Last Modified : 15 Jan, 2019 07:07 pm

pongal-special-one-day-for-the-well-being-of-the-sibblings

பண்டிகை என்பது பகிர்ந்தளிப்பதும், பெரியவர்களின் ஆசியைப் பெறுவதுமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும் காணும் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் கணுப்பிடி நோன்பை கடைப்பிடிப்பது வழக்கம். இந்த விரதத்தை உடன்பிறந்த சகோதரர்களின் நலனை முன்னிட்டு பெண்கள் ஏற்கின்றனர். திருமணம் ஆகாத பெண்களும் இதைக் கடைப்பிடிக்கலாம் என்பதால் கன்னிபொங்கல்.

முன்பெல்லாம் கிராமத்தில் இதை விமரிசையாக கொண்டாடுவார்கள். மணமாகாத பெண்கள் தாம்பாளத்தில் பச்சரிசி, கரும்பு,கற்கண்டு, வாழைப்பழம், பூ வைத்து வெள்ளைத்துணியால் மூடி அந்த ஊரில் இருக்கும் நீர் நிலைகளுக்கு கும்பலாக பாடல்களை பாடியபடி செல்வார்கள். நீர் இருக்கும் இடத்தில் நடுவில் மண் மேடை அமைத்து, கொண்டு வந்திருக்கும் தாம்பாளத்தை வைத்து அதைச் சுற்றி கும்மியடித்து பாடல்கள் பாடி பச்சரியுடன் சர்க்கரை நீர் கலந்து எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள். அந்த பச்சரியை அனைவருக்கு விநியோகித்து திரும்புவார்கள். இப்படி செய்தால்,அடுத்த காணும் பொங்கலன்று திருமணம் முடிந்து தலைபொங்கலை கொண்டாடுவார்கள் என்பது ஐதிகம். சுமங்கலிப்பெண்கள் பானையில் வைத்திருந்த இஞ்சிகொத்துக்களை வயதான மூத்த சுமங்கலிகளிடம் கொடுத்து ஆசிபெற்று கால்களில் தடவுவார்கள். 

கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன் பிறந்தானுக்கு என்பது பழமொழி. உடன் பிறந்த சகோதரனது நலத்தைக் கருத்தில் கொண்டு ஆற்றங்கரை அல்லது மொட்டைமாடியில் வாழை இலை வைத்து முதல்நாள் பொங்கிய பொங்கலில் ஐந்து வகை  சாதங்களைத் தயாரிப்பார்கள். மஞ்சள் கலந்து மஞ்சள் சாதமும், குங்குமம் கலந்து சிவப்பு சாதமும், பால் கலந்து வெள்ளை சாதமும், தயிர் சேர்த்த தயிர்சாதமும், வெல்லம் சேர்த்த சர்க்கரைப் பொங்கலையும் கலந்து ஒவ்வொரு அன்னத்தையும் 5 அல்லது 7 என்ற ஒற்றைப்படையில் பிடித்து இலையில் வைக்க வேண்டும். வைக்கும் போது காக்கா பிடி வெச்சேன்.. கணுப்ப்பிடி வெச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம்.. கண்டவர்கெல்லாம் சந்தோஷம் என்று உடன் பிறந்தவர்களின் நலனுக்கு வழிபட வேண்டும். மாலையில் உடன்பிறந்தவர்களிடம் ஆசிபெற்று அவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  உடன்பிறந்தவர்களும் குடும்பத்தில் உள்ளவர்களும் ஒன்றாக இணையும் இந்நாளில் வீட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். பிறகு குடும்பமாக வெளியே சென்று வருவார்கள். 

கிராமங்களில் கணுப்பொங்கலன்று விளையாட்டு போட்டிகள் நடைபெறும். உரி அடித்தல், சறுக்கு மரம் ஏறுதல், விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றங்கள் என கலகலப்பாக களைகட்டும். நகரங்களில் குடும்பத்துடன் இணைந்து சுற்றுலாத்தளங்கள், பொழுது போக்கு இடங்கள், கடற்கரைகள் செல்வது வழக்கமாகிவிட்டது. வருங்கால சந்ததியினருக்கு காணும் பொங்கல் அன்று காண வேண்டிய உறவினர்களையும், பெரியவர்களின் ஆசிர்வாதத்தையும் ஏன் பெறவேண்டும் என்ற தாத்பரியத்தை பதிய வைத்தால் தமிழன் இருக்கும் வரை காணும் பொங்கல் களையிழக்காது.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.