• ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!
  • மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா ராஜினாமா - பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்

இந்திய சுதந்திரம் - புதைந்த உண்மைகள்!!

  shriram   | Last Modified : 14 Aug, 2018 12:43 pm

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. எல்லோருக்கும் தெரிந்த சரித்திரத்தை திரும்பிப் பார்ப்பதை விட, நம்மில் பலர் தெரிந்துகொள்ளத் தவறிய சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்...

1948ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்தது. இதற்காக இந்தியா அனுப்பப்பட்ட லார்ட் மவுண்ட்பேட்டன், காங்கிரஸ் தலைவர் நேருவையும் முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாததால், இரு தரப்பினரை வேகமாக பணியாற்ற வைக்க, சுமார் 10 மாதங்கள் முன்னதாகவே சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தார்.

இந்து முஸ்லீம் கலவரங்கள் நாடு முழுவதும் உச்சகட்டத்தை எட்டியதை பார்த்த அவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்ற ரீதியில் திட்டம் போட்டார். இரண்டாம் உலகப்போரில் தென்கிழக்கு ஆசியாவின் கமேண்டராக இருந்தவர் மவுண்ட்பேட்டன். 1945ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போர் முடிவில், அமெரிக்க- பிரிட்டன் கூட்டணி படைகளிடம் ஜப்பான் ஆகஸ்ட் 15ம் தேதி சரணடைந்தது. சரணடையும் சம்பிரதாயங்களை தனது கையால் முடித்து வைத்தார் மவுண்ட்பேட்டன்.

தனக்கு மிகவும் ராசியான அந்த நாளை இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கும் தினமாகவும் அவர் தேர்வு செய்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்துவிட்டால், அதன் பிறகு பாகிஸ்தானை பிரிக்க முடியாது. அதற்கு இந்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும். அதனால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்து முதலில் சுதந்திரம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14ம் தேதியும், இந்தியாவுக்கு அடுத்த நாளும் சுதந்திர தினமாக மவுண்ட்பேட்டன் அறிவித்தார்.

ஆனால், மவுண்ட்பேட்டன் குறிப்பிட்ட தேதி நல்ல தேதியல்ல, என இந்திய ஜோதிடர்கள் எச்சரித்தனர். தனது முடிவை மாற்றிக்கொள்ள மவுண்ட்பேட்டன் மறுத்ததால், இந்தியாவுக்கு 14ம் தேதி நள்ளிரவு சுதந்திரம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாகவே, தான் பிரதமராவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே சுதந்திரத்தை கொண்டாடி உரையாற்றத் துவங்கினார் பிரதமர் நேரு.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை கொண்டாட மகாத்மா காந்தி, டெல்லியில் இல்லை. பாகிஸ்தான் பிரிவை ஒட்டி இந்து முஸ்லீம் கலவரங்களை கட்டுப்படுத்த கல்கத்தாவில் அவர் இருந்தார். இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கோடுகளை வரைய, பிரிட்டன் நீதிபதி சிரில் ராட்கிளிஃப் நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு 40 நாட்கள் தான் கெடு கொடுக்கப்பட்டது. இந்திய பாகிஸ்தான் எல்லைகளை பற்றியும், கலாச்சாரம் பற்றியும் தெரியாத ராட்கிளிஃப், அவசர அவசரமாக ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் எல்லையை வரையறுத்து முடித்தார். ஆனால், அதை மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 17ம் தேதி வரை வெளியிடவில்லை.

இரு நாட்டிற்கும் சொந்தமான பஞ்சாப் பகுதியில் இந்து முஸ்லீம் கலவரங்கள் அதிகரிக்கத் துவங்கியதை கண்ட பஞ்சாப் கவர்னர், உடனடியாக எல்லையை வரையறுக்க வலியுறுத்தினார். ஆனால், சுதந்திரம் பெற்று இரு நாட்கள் வரை, தாங்கள் எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாமல் லட்சக்கணக்கான மக்கள் விழித்தனர். இதன் விளைவாக, இரண்டு நாட்களுக்கு பின்னர் லட்சக்கணக்கான முஸ்லீம் மக்கள் பாகிஸ்தானுக்கும், இந்து மக்கள் இந்தியாவுக்கும் வர, எல்லையை கடக்க ஆரம்பித்தனர். அடுத்து வந்த சில வாரங்களை, இந்திய சரித்திரத்திலேயே மிக மோசமான பகுதியென்றே கூறலாம்.

எல்லையில் நடந்த இந்து முஸ்லீம் கலவரங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மதவெறி பிடித்த கும்பல்கள், இரக்கமில்லாமல், சுமார் 75,000 பெண்களை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தனர். இரு நாடுகளிலும், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதிலிருந்து தப்பவில்லை.

யூதர்களை, ஹிட்லரின் நாஸி படைகள் கொடுமைபடுத்தியதை நேரில் பார்த்த சில இங்கிலாந்து வீரர்கள், இந்திய பிரிவினை நாட்களில் நடந்த கலவரங்கள், தங்களை தூக்கம் இழக்க வைத்ததாக தெரிவித்துள்ளனர். மொத்தம் 10 லட்சம் மக்கள் இந்த கலவரங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும், சாதனைகளையும் போற்றும் நாம், சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த ரத்த சரித்திரத்தையும் மறந்துவிடக் கூடாது.

Newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.