கார்கில் போரின் வெற்றித் திருநாள் இன்று!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 12:22 pm

இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ளது கார்கில். திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலைச் சிகரங்கள். அதை சுற்றி காணப்படும் பனிப் படலங்கள். இத்தகைய அழகு வாய்ந்த கார்கில், ஸ்ரீநகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கரடு முரடான இந்த மலைப் பிரதேசத்தில் போக்குவரத்துக்கான ஒரே வழி ஸ்ரீநகர்-லே நகர் தேசிய நெடுஞ்சாலை மட்டுமே.

கார்கில் யுத்தம் (1999ல் மே- ஜூலை) முடிந்து பதினெட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் இன்றும் நம் இந்திய வீரர்களின் குருதி படிந்த இடங்கள் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பறை சாற்றுகின்றன. இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியின் வெப்பம் மைனஸ் 48 டிகிரி.

1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் படி, பனி சூழ்ந்த அந்த குளிர் காலத்தில் இரு நாட்டு ராணுவப் படைகளும் தங்கள் பாசறைகளை விட்டுச் சென்று விட வேண்டும் மேலும், போர் தொடுக்க அனுமதியில்லை. காஷ்மீரை கைப்பற்றும் நோக்கில், 1999ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாசறைக்குத் திரும்பாமல் குளிர் காலத்தில் அங்கேயே தங்கி இருந்தனர். ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால், இந்திய ராணுவத்தைத் தாக்கி எளிதாக காஷ்மீரை கைப்பற்றலாம் என பாகிஸ்தான் எண்ணியது.

பாகிஸ்தான் ஒரு புறம் இந்தியாவிடம் நட்பு பாராட்டினாலும், மறுபுறம் காஷ்மீரை கைப்பற்ற ஊடுருவல் வேலைகளை செய்து கொண்டிருந்தது. குளிர் காலத்தில் முஷ்கோ பள்ளத்தாக்கில் முகாமிட்டு இருந்த பாகிஸ்தான் படைகளுடன் அப்போதைய ராணுவத் தளபதி பர்வேஸ் முஷராப் சதி ஆலோசனை மேற்கொண்டார். சத்தமில்லாமல் ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தது பாகிஸ்தான்.

இந்தியப்படைகள் இல்லாத நேரத்தில் கார்கில் பகுதியில் ஊடுருவி, எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தனர். இந்தியப் படைகளின் பாசறைகளை அழித்ததோடு, புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்தனர். தகவல் தெரிந்ததும் விரைந்து அப்பகுதிக்குச் சென்ற இந்திய ராணுவத்தினர் சிலரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். இதைத்தொடர்ந்து, போர் தொடங்கியது.

2 லட்சம் இந்திய வீரர்கள் நம் நாட்டைக் காக்க புறப்பட்டனர். இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு பகுதியும் கடுமையான போராட்டங்களுக்கு பின் மீட்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக இழந்து, மண்ணை கவ்விய பாகிஸ்தான், உலக நாடுகளின் எச்சரிக்கையாலும், இந்திய வீரர்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமலும் தன் படைகளை பின் வாங்குவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்டார்.

1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா அறிவித்தது. தோராயமாக 1000 பாகிஸ்தான் வீரர்களை இந்தியா கொன்று குவித்தது. இதில் 527 இந்திய வீரர்கள் நம் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் நினைவிடம் காஷ்மீர் ட்ராஸ் பகுதியில் உள்ளது. "நாடு உனக்காக என்ன செய்தது என்பதை விட, நீ நாட்டுக்காக என்ன செய்தாய்" என்ற வரிகள் நம் இந்திய ராணுவப் படைக்கு சரியாக பொருந்தும்.

ஜெய்ஹிந்த்!!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close