’தவத்தின் நிறைவில் தோன்றும் பிறை’ ரம்ஜான் பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து!

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Jun, 2018 11:20 am

ramzan-festival-leaders-wishes

நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ: உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகள், ரமலான் மாதத்தில் 30 நாட்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும். இன்நாளில் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அரண் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்:  இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்று போல் என்றும் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு மனிதர்களை மேன்மைப் படுத்துகிறது.  அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக என வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: நோன்பிருப்பதன் மூலம் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம்பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன.  ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்: அன்பு, நன்மை, ஈகை, இச்சையடக்கம் என்னும் மேன்மைகளைப் படைத்த திருக்குர்ஆன்! மனித வாழ்வின் ஒளியாகவும் வழியாகவும் திகழும் திருக்குர்ஆன்! பேரண்டத்தின் திருமறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம் நம்பிக்கை அளிக்கும் மாதம்! ஈகைப் பெருநாளில் வறியவர்க்கு "ஜக்காத்" வழங்குவதன் மூலம் பிறர்க்கீந்து மகிழ்ச்சிகொள்ளும் எம் இனிய இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.

வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பதிவில்... ஈகைத் திருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களே! உங்கள் உள்ளத்தில் சாந்தியும் உலகத்தில் சமாதானமும் நீடு நிலவ நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.