சாதனைகளை முறியடிக்க பிறந்த ரஷீத் கானின் மெகா 15 சாதனைகள்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 11:41 am

record-breaking-king-rashid-khan-s-world-records

கிரிக்கெட் உலகின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார் ஆப்கானிஸ்தானின் 19 வயது இளம் புயல் ரஷீத் கான். நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர் முழுக்க நம்மை கவர்ந்த வீரர்களில் முன்னிலை பெற்றவர் ரஷீத். தோனி, விராட்டுக்கே டஃப் ஃபைட் கொடுத்த இந்த புயல், பேட், பால் என எதை கையில் கொடுத்தாலும் அதிரடி காட்டுகிறார். இந்த அதிரடி ஆல்-ரவுண்டரால், அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை ஈஸியாக கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் (நல்லவேளை, வங்க தேச வீரர்களின் பாம்பு டான்ஸில் இருந்து ரசிகர்கள் தப்பினார்கள்). 

ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்ற குறுகிய காலத்திலேயே பல சாதனைகள் இவரால் முறியடிக்கப்படும், பல புது சாதனைகள் படைக்கப்படும் உள்ளது. இவரை முன்னாள் ஜாம்பவன்கள் முதல் அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரையும் தன் பக்கம் சாய வைத்த இந்த புயலின் தனித்துவமான சாதனைகள் பின் வருமாறு:

1. 19 வயதான ரஷீத் கான், தேசிய அணியை வழி நடத்திய இளம் கேப்டன் ஆவார். 2018 மார்ச் மாதம், உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றில், முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

2. 100 ஒருநாள் விக்கெட்களை அதிவிரைவாக எட்டி, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடித்தார். வெறும் 44 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தினார் ரஷீத் கான். ஸ்டார்க், 52 போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்தினார்.

3. ஐ.சி.சி-ன் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசை வரலாற்றில், நம்பர் ஒன் இடத்தை பிடித்த இளம் வீரர் ரஷீத் கான். 2018 பிப்ரவரி மாதம் ரஷீத் முதலிடம் பிடித்தார். தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

4. ஐசிசி-ன் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை வரலாற்றில், நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள இளம் வீரரும் ரஷீத் கான் தான். 2018 பிப்ரவரி மாதம் ரஷீத் முதலிடத்தை எட்டினார். இப்போதும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

5. ஐ.சி.சி போட்டியாளர்கள் தரவரிசையில், இளம் வீரராக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் முன்னிலை பெற்று, பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் சாதனையை முறியடித்தார் ரஷீத் கான் (7,092 நாட்கள்). 1998ம் ஆண்டு முஸ்டாக் (7,683 நாட்கள் கொண்ட வயது) பந்துவீச்சாளர் பட்டியலில் டாப்பில் இருந்தார்.

6. ஐசிசி-ன் ஆண்டின் சிறந்த அசோஸியேட் (வெளிநாட்டுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சிறப்பாக விளையாடியவர்) வீரர் விருதை பெறும் இளம் வீரரும் இவர் தான். 2017ம் ஆண்டு இந்த விருதை ரஷீத் பெற்றிருந்தார்.

7. நேரம் அடிப்படையில், அதிவிரைவாக 50 டி20 விக்கெட்களை வீழ்த்தியவர். 2015ம் ஆண்டு அறிமுகமான ரஷீத், 2 வருடம், 220 நாட்களில் இதனை நிகழ்த்தினார்.

8. அதிவிரைவாக 50 டி20 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வீரர் ரஷீத். 31 போட்டிகளில் இந்த சாதனையை அவர் படைத்தார். இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 26 போட்டிகளில் இதனை எட்டியுள்ளார். 

9. இரண்டே ஓவரில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ரஷீத் கான். 2017ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்த சாதனையை அவர் படைந்திருந்தார். வெறும் மூன்று ரன்களை கொடுத்து, 5 விக்கெட்களை அவர் வீழ்த்தினார்.

10. அயர்லாந்துக்கு எதிராக இவர் எடுத்த மூன்று ரன்னுக்கு ஐந்து விக்கெட் என்பதுதான் ஆப்கானிஸ்தானின் மிகச்சிறந்த பந்துவீச்சு ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் இது நான்காவது மிகச்சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது.

11. 2017ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 18 ரன் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார் கான். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் எடுத்த முதல் சர்வ தேச கிரிக்கெட் வாரியத்தின் முழு உறுப்பினராக இல்லாத நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்ற பெயரை பெற்றார். சர்வதேச ஒருநாள் பந்துவீச்சில் இதற்கு நான்காவது இடம் கிடைத்தது.

12. 2017ல் ஆப்கானிஸ்தானுக்காக மொத்தம் (டி20, ஒருநாள்) 60 விக்கெட்கள் வீழ்த்தினார். ஒரே ஆண்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சர்வ தேச கிரிக்கெட் வாரியத்தின் முழு உறுப்பினராக இல்லாத நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

13. 2017ல் ஒருநாள் போட்டியில் 43 விக்கெட் வீழ்த்தினார். இதிலும் சாதனையைப் படைத்தார் ரஷீத்.

14. 2017 பிப்ரவரி மாதம், ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஐ.சி.சி-யின் உறுப்பினராக இல்லாத நாட்டைச் சேர்ந்த வீரரானார். ரூ.4 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை வாங்கியது. 

15. 2017 செப்டம்பர் மாதம், கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். சி.பி.எல் வரலாற்றில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை ரஷீத் எடுத்தார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இதனை சாதனைகளை நிகழ்த்திய ரஷீத், அடுத்ததாக டெஸ்ட் போட்டியில் களமிறங்க இருக்கிறார். டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பல புது வியூகங்களை ரஷீத் கான் செயல்படுத்தி மேலும் நம் கவனத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியை முன்மாதிரியாக கொண்டு வளர்ந்த ரஷீத் கான், குறுகிய ஓவர் போட்டிகளை போல, டெஸ்ட் போட்டிகளிலும் முத்திரை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close