11 நாடுகளுக்கு எதிராக சதமடித்த வீரர்கள்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 03:07 am
list-of-players-in-odi-history-to-hit-centuries-against-11-countries

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில், ரசிகர்களை டெஸ்ட் ஆட்டத்தைவிட கவர்ந்திருப்பது குறுகிய ஓவர் போட்டிகள் தான். தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒருநாள் போட்டியின் மீதுள்ள ஆர்வம் எகிறியே உள்ளது. 12 டெஸ்ட் போட்டி விளையாடும் நாடுகள், ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்தை நிரந்திரமாக பெற்றுள்ளன. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் செஞ்சுரி என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. 

ஒருநாள் போட்டியில் அதிக செஞ்சுரி அடித்த வீரர்களில் 49 சதங்களுடன் முன்னிலையில் இருப்பது ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர். ரிக்கி பாண்டிங், ஹெர்ஸ்செல்லே கிப்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரோஸ் டெய்லர், ஹஷிம் ஆம்லா, விராட் கோலி ஆகியோர் மட்டுமே 9 டெஸ்ட் அணிகளுக்கு எதிராக ஒருநாள் சதங்களை விளாசியுள்ளனர்.

பாண்டிங், 10 நாடுகளுக்கு எதிராக ஒருநாள் சதங்கள் அடித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் ஒரு கேப்டனாக 22 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு பாண்டிங் சொந்தக்காரர். 

ஒருநாள் போட்டி வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 11 நாடுகளுக்கு எதிராக செஞ்சுரிகளை பறக்கவிட்டுள்ளனர். அந்த சாதனையாளர்களின் விவரம் பின் வருமாறு:-

சச்சின் டெண்டுல்கர்:

கிரிக்கெட் தலைமுறையில் தலைச்சிறந்த வீரர் சச்சின் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. 11 நாடுகளுக்கு எதிராக ஒருநாள் சதத்தை பறக்கவிட்ட வீரர் என்ற சாதனையை அவர் 2012ம் ஆண்டு நிகழ்த்தி இருந்தார். டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிராக 114 ரன் அடித்ததன் மூலம், அந்த பெருமையை அவர் பெற்றார். அது தவிர, அன்று டாக்காவில் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லை சச்சின் எட்டினார். 

மேலும், 11 நாடுகளுக்கு எதிராக ஒருநாள் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெயரையும் பெற்றார். தவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 200 ரன் அடித்த முதல் வீரரும் சச்சின் ஆவார். 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 200 அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தார், ஜாம்பவன் சச்சின். 

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, கென்யா, நமிபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக சச்சின் ஒருநாள் சதம் அடித்துள்ளார்.

ஹஷிம் ஆம்லா:

ஒருநாள் வரலாற்றில் 11 நாடுகளுக்கு எதிராக சதமடித்த இரண்டாவது வீரர் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர் ஆம்லா. 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்லா, 26 சதம் அடித்திருக்கிறார். 

2015ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது, இந்த சாதனையை அவர் படைத்திருந்தார். உலக கோப்பை போட்டியான அதில், 128 பந்துகளில் 154 ரன் அடித்தார். அயர்லாந்துக்கு எதிரான ஆம்லாவின் முதல் சதம் அது. ஒருநாள் போட்டியில் 20-வதாக அமைந்தது. 

ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆம்லா உள்ளார். இன்னும் நான்கு சதங்கள் அடித்தால், மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவார். 

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான்,  இலங்கை வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக இவரது சதங்கள் விளாசப்பட்டது.

கிறிஸ் கெய்ல்:

ஜமைக்காவின் அதிரடி மன்னன், இவரது வாணவேடிக்கை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. யுனைடெட் அரபு அமீரகத்துக்கு எதிராக 91 பந்துகளில் 123 ரன் அடித்து அசத்தினார். ஹராரேவில் நடந்த இப்போட்டியில் 11 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளை அவர் விரட்டினார். இதன் மூலம், டெண்டுல்கர் மற்றும் ஆம்லாவின் 11 நாடுகளுக்கு எதிராக ஒருநாள் சதமடித்தவர்களின் பட்டியலில் கெய்ல் இணைந்தார். 

வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, கென்யா, கனடா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே, யுனைடெட் அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு எதிராக சதங்களை பதிவு செய்துள்ளார் கெய்ல்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close