5 விநாடி மீட்டிங்: சி.எஸ்.கே-வின் வெற்றி ரகசியம் சொல்லும் தோனி

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 11:59 am
m-s-dhoni-speaks-about-ipl-2018-at-star-reimagine-awards

ஐ.பி.எல் 2018ன் இறுதிப்போட்டிக்கு முன் நடந்த மீட்டிங் வெறும் 5 நொடிகளில் முடிந்து விட்டது என்றும் அது தான் சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்றும் அந்த அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

சென்னை அணியின் டிரெஸ்ஸிங் ரூம் மற்ற அணிகளை ஒப்பிடும் போது எப்போதும் வித்தியாசமாக இருக்கக்கூடியது. தோனியின் தலைமையின் கீழ் விளையாட தொடங்கிவிட்டால் அணி வீரர்களும் கூலாகி விடுவதை பார்த்து வருகிறோம். மேலும் ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் தோனி தனது அணி வீரர்களிடம் என்ன கூறுவார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உண்டு. இந்நிலையில் இந்தாண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன் சென்னை அணி நடத்திய மீட்டிங் வெறும் 5 நொடிகள் தான் நடந்தது என்று மும்பையில் நடந்த ஸ்டார் ரிஇமாஜின் விருது நிகழ்ச்சியில் தோனி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது 'தோனியுடன் உரையாடல்' என்ற சிறப்பு பகுதி நடந்தது. அப்போது இதுகுறித்து அவர் கூறும் போது, "இறுதிப்போட்டிக்கு சென்ற போது தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதை நினைத்து ரிலாக்சாக இருந்தோம். அணியில் உள்ள ஒவ்வொருவருடைய பொறுப்புக்குறித்த தெளிவு அனைவரிடத்திலும் இருந்தது. எனவே அந்த மீட்டிங்கில் பேச ஒன்றுமே இல்லை. அந்த நிலையில் கேப்டனும், பயிற்சியாளரும் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அன்றைய மீட்டிங் 5 விநாடிகள் தான் நடந்தது. அப்போது எங்கள் கோச், "Go, get it boys" என்று மட்டும் தான் கூறினார். அதன் பின் அனைவரும் மைதானத்திற்கு சென்றோம். இது போன்ற விஷயங்கள் தான் சென்னை அணி தொடர்ந்து வெல்வதற்கு காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிகிறபோது கூட்டம் நடத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை" என்றார். 

மேலும் அவர் பேசும்போது, "இந்த வருடத்தில் இருந்து தான் நான் ஜிம்முக்கு போக தொடங்கி உள்ளேன். நான் இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய போது பட்டர் சிக்கன் - நானும், மில்க்ஷேக்கும் குடித்துக்கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் அந்த உணவுகள் பக்கமே போவது இல்லை. 

போட்டியை வெல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள எப்போதும் விரும்புகிறேன். ஆனால் கடைசியாக களமிறங்கும் போது என்னால் அதனை செய்ய முடியாமல் போய் விடுகிறது. நான் முன்னதாகவே களமிறங்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த வயதில் கடைசியாக களமிறங்குவது சரியாக இருக்காது. ராயுடு, ரெய்னா, ஷேன் வாட்சன், நான், பிராவோ நல்ல ரன்கள் எடுத்ததால் எங்கள் அணியில் இருந்த மற்ற பேட்ஸ்மேன்களை எங்களால் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. 

சென்னை அணி நிர்வாகம் நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வோமா என்பதை விட அணி வீரர்களின் உடற்தகுதி குறித்தே அதிகம் அக்கறை கொண்டு இருந்தனர். கோப்பையை வென்றதும் அதனை கேப்டனே வைத்திருப்பது நியாயமற்ற ஒன்று. ஒட்டு மொத்த அணியும் தான் வெற்றி பெற்றுள்ளது. நிறைய இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடி உள்ளனர்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close