தோனிக்கு 37 வயசு... அவரைப் பற்றிய 37 விஷயங்கள்!

  நந்தினி   | Last Modified : 04 Jul, 2018 04:42 pm
ms-dhoni-s-37-facts-you-need-to-know-on-his-37th-birthday

"வாழக்கையில் கற்றுக் கொள்வது" மிகவும் முக்கியம் என்ற ஒற்றை தாரக மந்திரத்தை கொண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் பல வெற்றிகளை பதித்து அனைவரது மனதிலும் நிலைத்து நின்று வருகிறார் மகேந்திர சிங் தோனி. கற்றுக் கொள்வது மட்டுமின்றி, தான் கற்றதை ஜூனியர் வீரர்களுக்கு சொல்லிக் கொடுப்பது தான் ஒரு சீனியர் வீரரின் கடமை என்றும் அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். 

இது விளையாட்டில் மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கு பொருந்தக்கூடிய ஒரு பொன்மொழி என்பதை அவர் உணர வைத்துள்ளார். மேலும் களத்தில் ஒரு தவறை செய்த பிறகு, அந்த தவறை மீண்டும் இழைப்பது கூடாது என்ற அவரது கருத்தும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான விஷயம். 

இவ்வாறு பல நிதர்சன உண்மைகளை தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமில்லாமல் அதனை பிறருக்கும் கற்று கொடுப்பதனால் தான் என்னவோ அவரை நாம் கேப்டன்ஷிப்பில் மிகவும் ரசிக்கிறோம். அணிக்கு நான் கேப்டனாக இருந்தாலும், என்னுடைய கேப்டன் தோனி தான் என்று சொல்லும் விராட்டின் அந்த நம்பிக்கை. தனது அணிக்கு மட்டுமில்லாமல் எதிரணியாக இருந்தாலும் அவர்களும் கற்றுக் கொள்ள தனது அனுபவத்தை பகிரும் தோனியின் அந்த அக்கறை என அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...

தோனியை பற்றி ரசிகர்கள் அறியாதது இல்லை என்றாலும், கேப்டன் கூல் தனது 37 வயதினை எட்ட இருக்கும் இந்த தருணத்தில் அவரைப் பற்றிய 37 சுவாரஸ்ய உண்மைகளை நாம் இங்கு பார்ப்போம்:

ராஞ்சியின் ஜார்கண்ட்டில் 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி தோனி பிறந்தார். டி.ஏ.வி ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் பயின்ற தோனி, இளம் வயதிலேயே விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். 

கிரிக்கெட் வீரராக உருவாவதற்கு முன்பு, கால்பந்து விளையாட்டை தோனி விரும்பினார். கோல் கீப்பராக பள்ளி போட்டிகளில் விளையாடி வந்தார். தவிர பேட்மின்டன் போட்டிகளிலும் அவர் சிறந்து விளங்கினார். 

சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பனர்ஜீ, தோனியை கிரிக்கெட் போட்டிக்குள் கொண்டு வந்து அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைத்தார். 

2001 முதல் 2003ம் ஆண்டு வரை தென் கிழக்கு ரயில்வே துறைக்காக மிட்னாபுரில் பயணச்சீட்டு பரிசோதகராக தோனி பணியாற்றியுள்ளார். 

1999-2000ல் பீகார் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் தன்னுடைய 18 வயதில் தோனி அறிமுகமானார். 

2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தில் டக்கவுட்டாகி வெளியேறினார் தோனி. 

நான்கு ஒருநாள் போட்டிகளுக்கு பிறகு தோனி தனது முதல் ஒருநாள் சதம் அடித்தார். விசாகப்பட்டினத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்களை அவர் பறக்கவிட்டார். 

2007ம் ஆண்டு குறுகிய ஓவர் போட்டிகளுக்காக இந்திய அணி கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார். ராகுல் ட்ராவிட் கேப்டன் பதவியில் இருந்து அப்போது விலகி இருந்தார்.

தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்தியா, 2007ம் ஆண்டு ஐசிசி உலக டி20, 2013ல் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி, 2011ல் ஐசிசி உலக கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசி-ன் மூன்று கோப்பைகளை வென்ற ஒரே ஒரு கேப்டன் என்ற பெருமையும் தோனியை சேரும்.  

2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டிக்கு பிறகு அறிவித்து, கிரிக்கெட் உலகம் உள்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் தோனி. 

2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, காதலி சாக்ஷியை தோனி திருமணம் செய்தார். 2007ம் வருடம் நவம்பர் மாதம் கொல்கத்தாவில் இருவரும் முதன்முறையாக பார்த்துக் கொண்டனர். அதன் பின் ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானுடன் இந்தியாவின் போட்டி நடைபெற்றது. 

2015ல் தோனி - சாக்ஷிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஸிவா என்று பெயரிட்டனர். ஸிவா பிறக்கும் சமயம், தோனி தனது தேசிய அணிக்காக போட்டிகளில் பங்கேற்றிருந்ததால், ஐந்து மாதங்களுக்கு பிறகு தான் தன்னுடைய குழந்தையை அவர் பார்த்தார்.

டெஸ்ட் போட்டியில், 27 வெற்றிகளை பெற்று மிகுந்த வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரை தோனி பெற்றார். சவுரவ் கங்குலி 21 வெற்றிகளை பெற்றிருக்கிறார். மேலும், டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக இந்தியா நம்பர் ஒன் இடத்தை பிடிக்க காரணமாக இருந்ததும் கேப்டன் தோனி தான்.

ஒருநாள் போட்டியில் அவருடைய மிகப்பெரிய ஸ்கோர் 183. இலங்கைக்கு எதிரான 22-வது ஒருநாள் போட்டியில் இதனை தோனி நிகழ்த்தினார். 145 பந்துகளில் அந்த ரன்களை அவர் விளாசி இருந்தார். 

2011 நவம்பரில், இந்திய பிராந்திய ராணுவம் லெப்டினன்ட் கர்னல் என்னும் உயரிய ரேங்க்கை வழங்கி கௌரப்படுத்தியது. கிரிக்கெட்டுக்கு பிறகு ராணுவத்திற்காக தான் உழைக்க விரும்புவதாக தோனி அறிவித்தார். இந்த கௌரமிக்க ரேங்க்கை கபில் தேவிற்கு பிறகு பெறும் இரண்டாவது இந்தியர் தோனி.

7ம் வரிசையில் களமிறங்கிய சதமடித்த ஒரே கேப்டன் தோனி ஆவார். 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அதனை சாதித்தார். 

மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஒரே ஒரு சர்வதேச விக்கெட் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் டிராவிஸ் டௌளின் விக்கெட்டை அவர் எடுத்திருந்தார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'எம்.எஸ். தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி', 2016ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வசூலை பெற்றது. 

டேவிட் தவானின் 'ஹூக் யா க்ரூக்' படத்தில் 2010ம் ஆண்டு தோனி நடித்திருந்தார். துரதிஷ்டவசமாக ஜான் ஆபிரகாம் நடித்திருந்த அப்படம் வெளியாகவில்லை என்பதால் தோனியை வெள்ளித்திரையில் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.

2017ம் ஆண்டு குறுகிய ஓவர் போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி20) இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

தோனி தலைமையில் இந்தியா 163 சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றிகளை கண்டுள்ளது.

புகழ்பெற்ற டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்த போதிலும், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மார்க் பவுச்சர் மட்டுமே தோனியை விட, டெஸ்டில் அதிக ரன்களை அடித்துள்ளனர்.

டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224 ரன்களை தோனி அடித்திருந்தார். ஒரு விக்கெட்-கீப்பராக அது 3-வது மிகப்பெரிய தனிநபர் ஸ்கோராக அமைந்தது.

90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, சுயேட் கிர்மாணியை அதிகமுறை அவுட்டாக்கிய சாதனையை வைத்துள்ளார்.

ஒரு கேப்டனாக அதிக சர்வதேச சிக்ஸர்களை தோனி அடித்துள்ளர் (204).

ஒட்டுமொத்தமாக 342 சிக்ஸர்களை தோனி பறக்கவிட்டுள்ளார். அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில்  5-வது இடத்தை பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி 476 சிக்ஸருடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் அறிமுக போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1.5 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டார் தோனி. அறிமுக சீசனில் மிகப்பெரிய தொகைக்கு பெறப்பட்ட வீரர் என்ற பெயரை தோனி பெற்றிருந்தார்.

2010, 2011 மற்றும் 2018 சீசனுக்கான ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை சி.எஸ்.கே அணி கேப்டனாக தோனி பெற்றார். ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை மூன்று முறை கைப்பற்றிய 2-வது கேப்டன் தோனி. இது தவிர தோனியின் சி.எஸ்.கே, சாம்பியன்ஸ் லீக் டி20 டைட்டிலை 2010 மற்றும் 2014 சீசனில் கைப்பற்றியுள்ளது.

இருசக்கர வாகனங்கள் மீது தோனி அளவுகடந்த விருப்பத்தை வைத்துள்ளார். அவரிடம் 23 இருசக்கர வாகனங்கள் உள்ளன. தற்போதும் அதன் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தோனியின் செல்லப் பிராணிகள் சாரா மற்றும் சாம். அவருடைய வாழ்க்கையில் இந்த செல்லப் பிராணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒருமுறை தோனி, "நான் ஒரு தொடரில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் என்னுடைய செல்லப் பிராணிகள் என்னை ஒரே மாதிரி தான் நடத்தும்" என்று செல்லப் பிராணிகள் மீதான தனது பேரன்பை வெளிப்படுத்தினார்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் உலக புகழ் பெற்றது. அந்த ஷாட்டிற்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த ஷாட்டை அடிக்க தோனிக்கு கற்றுக் கொடுத்தது அவரது நண்பர் சந்தோஷ் லால்.

தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜூனாவுடன் இணைந்து தோனி, சூப்பர்சப்போர்ட் உலக சாம்பியன்ஷிப் அணியை வாங்கி உள்ளார். அதற்கு மஹி ரேஸிங் டீம் இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.

பாலிவுட் கிங்கான் ஷாருக்கானுக்கு பிறகு அதிக பிராண்ட்டுகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தோனி.

தலைச்சிறந்த விக்கெட்-கீப்பரும் பேட்ஸ்மேனுமான ஆடம் கில்கிறிஸ்ட்டின் தீவிர ரசிகர் தோனி. அசைவ உணவின் விரும்பியான தோனிக்கு, மறைந்த பாடகர் கிஷோர் குமாரின் ரசிகருமாவார். 

குத்துச்சண்டை போட்டியையும் தோனி விரும்பி பார்ப்பார். ஹிட்மேன் ஹார்ட் மற்றும் ஹல்க் ஹோகன் அவருக்கு பிடித்தமான குத்துச்சண்டை வீரர்கள்.

பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆபிரகாம், பிபாஷா பாசு, தோனியின் நெருங்கிய நண்பர்கள். தோனியின் நீண்ட கூந்தல் ஹேர்ஸ்டைலுக்கு முக்கிய காரணம் அவருடைய நண்பர் ஜான் ஆபிரகாம் என்று தோனியே ஒருமுறை பேட்டி அளித்தார். 

2011 உலக கோப்பை போட்டி வரையிலான தோனியின் வாழ்க்கை படமாக காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதன் பிறகு தோனி வாழ்கையில் நடந்த வரலாறை 'எம்.எஸ். தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தின் பாகம் 2-வில் சொல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இந்த செய்தியே, தோனி ரசிகர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பிறந்தநாள் பரிசாகும். 

ஹாப்பி பர்த்டே கேப்டன் கூல்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close