இந்திய கிரிக்கெட்டின் கெத்துக்காரர் கங்குலி! #HBDDADA

  Soundarya Ravi   | Last Modified : 08 Jul, 2018 01:43 pm
prince-of-kolkata-celebrating-his-44th-birthday-today

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இருக்கும் வீரர்கள் கெத்தாக இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறதா.. கோலியின் கோபம், கே.எல்.ராகுலின் ஆக்ரோஷம், ஹர்திக் பாண்டியாவின் திமிர்,.. ஏன் தோனியின் மிரட்டலான புன்னகை என இப்போது நாம் ரசிக்கும் அனைத்திற்கும் வித்திட்டவர் கங்குலி. 

இந்திய கிரிக்கெட் சச்சினுடன் முடிந்து விடும் என்று நினைத்திருந்த காலக்கட்டத்தில் களமிறங்கியது இந்த பெங்கால் புலி. 1992ம் ஆண்டு இந்திய அணியில் முதன்முறையாக சேர்க்கப்பட்ட கங்குலி முதல் ஆட்டத்தில் 3 ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினார். அப்போதே அவரின் அணுகுமுறை சரியில்லை என கூறி அணியை விட்டு நீக்கியது பிசிசிஐ. பின் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்வானார். தன்னை நீக்கிய நிர்வாகத்திற்கு பதில் சொல்லும் விதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்தார். இப்போது இந்திய வீரர்களுக்கு சதம் அடிப்பது என்பது மிக எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் என்பது தீபாவளிக்கு ரயில் டிக்கெட் புக் பண்ணுவது போல கடினமான ஒன்று. 

கிரிக்கெட்டின் மெக்கா லார்ட்ஸில் அறிமுக வீரராக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை இன்றும் இவரிடம் தான் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 131 ரன்கள் குவித்தார். குறிப்பாக அந்த போட்டியில் அவரும் சச்சினும் இணைந்து உருவாக்கிய பார்டனர்ஷிப் பின்நாட்களில் எதிரணிக்கு பீதியை கிளப்பும் வஸ்துவாக மாறியது வரலாறு..

கங்குலி முன்னேற முன்னேற சச்சினை விட சிறந்த வீரர் அவர் தான் பேசப்பட்டது. சச்சினின் கடவுள் பட்டத்திற்கு போட்டியிட்ட ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி என்று கூட சொல்லலாம். 

மைதானத்தில் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் ஆக்ரோஷம் காட்டும் இவர் எதிரணி பவுளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இடது கை ஆட்டக்காரரான இவர் களமிறங்கினார் மொத்த ஃபீல்டர்ஸும் ஆஃப்சைடில் நிற்பார்கள். இருந்தும் பந்துகள் அந்த பக்கமே பவுண்டரியை முத்தமிடும். கடைசி வரை ஆஃப்சைடில் அடக்கமுடியாத வீரராக திகழ்ந்தார் கங்குலி. 

தொட்டதெல்லாம் வெற்றி என கலக்கும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணிக்கு விதை போட்டவர் கங்குலி. கேப்டன் பொறுப்பை இவர் ஏற்ற பிறகு இந்தியா கிரிக்கெட் வரலாற்றை மாற்ற போகிறார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. ஒரு சிறந்த அணியாக இந்தியாவை செதுக்கியவர் இந்த கொல்கத்தா பிரின்ஸ்.. இன்றும் அவர் இளவரசராகவே தான் இருக்கிறார். 

தற்போது தோனி கூலாக அணியை வழிநடத்துவதற்கும், கோலி கோபக்கார கேப்டனாக எதிரணியை கலங்கிடத்து வருவதற்கும் மத்தியில் இருப்பவர் கங்குலி. அவர் கேப்டனாக பொறுப்பேற்ற போது சூதாட்ட புகார்கள் இந்திய அணியை சுற்றுவலைத்துக்கொண்டு இருந்தன. ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியை ஸ்லெட்சிங் செய்தே துவண்டு போக வைத்தனர். எல்லாமே மாறியது இவரது கேப்டன்சியின் கீழ்..

கேப்டன் என்பதையும் தாண்டி இவர் சிறந்த தலைவர். இளம் வீரர்களை ஊக்கவிப்பது, அணிக்காக எதையும் செய்வது என ஒவ்வொரு வீரருக்கும் இன்ஸ்பிரேஷன் இந்த 'தாதா'.

'தாதா' என்றதும் ஒன்று நினைவிற்கு வந்திருக்க வேண்டுமே.. அதே தான்.. லார்ட்ஸ் மைதானத்தில் டி-ஷர்ட்டை கழட்டி சுற்றிய காட்சியை எப்படி மறக்க முடியும். 2002ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டி அது.  அதற்கு முன் இந்தியாவின் வான்கடே மைதானத்தில் நடந்த போட்டி ஒன்றில் இந்திய அணி 6 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க முடியாமல் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. அப்போது அந்த அணியின் ஆண்ரூவ் ஃபிலின்டாஃப் தனது டி-ஷர்ட்டை கழட்டி சுழற்றினார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே லார்ட்ஸ் போட்டியில் இந்திய அணி வென்ற போது அப்படி கொண்டாடினார் கங்குலி. இந்திய அணி எதற்கும் பயப்படவில்லை என்று உலக அரங்கில் தெரிவித்த காட்சி அது. 

ஆனால் லார்ட்ஸில் இப்படி செய்யலாமா என்று கேட்டார் இங்கிலாந்தின் பாய்காட். உங்களுக்கு லார்ட்ஸ் மெக்கா என்றால் எங்களுக்கு வான்கடே தான் மெக்கா என்று பதில் அளித்தார் கங்குலி. பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அப்படி செய்திருக்க கூடாது என்றும்  அவரே தெரிவித்து இருந்தார். 

2003 ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் போது தரவரிசைப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்த இந்திய அணியை இறுதிவரை அழைத்து சென்றது இந்த சிங்கம் தான். அந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தால் வெற்றிப்பெற்றிருக்கும் என்ற கருத்து இன்றும் உண்டு. 

கங்குலி 2008ம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அப்போது சில ஓவர்களுக்கு கேப்டனாக இருக்கும் படி அவரிடம் கேட்டுக்கொண்டார் அப்போதைய கேப்டன் தோனி. அதன்படி அந்த போட்டியில் வெற்றிப்பெற்றதோடு சக்சஸ்ஃபுல் கேப்டனாக ஓய்வுபெற்றார். 

தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் யாரை அணியில் சேர்க்கலாம் என்று தேர்வுக்குழு கங்குலியிடம் கேள்வி கேட்கும். அதற்கு மஹி என்று பதிலளிப்பார் கங்குலி. அந்த காட்சிக்காகவே தியேட்டருக்கு சென்ற தாதா ரசிகர்கள் இருக்கின்றனர். அது  தான் அவர். 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் ஐபிஎல் மூலம் விருந்தளித்தார் கங்குலி. ஆனால் 2011ம்ஆண்டு கங்குலியை கொல்கத்தா அணி ஏலம் எடுக்கவிலலை. அப்போது அந்த அணி ரசிகர்கள் நோ தாதா நோ கேகேஆர் என்று தொடர்ந்து போட்டிகளை புறக்கணித்தனர். அவரது ரசிகர்கள போலவே தனது ஊர் மீது மிகுந்த பற்று வைத்திருப்பவர் கங்குலி. இந்தாண்டு ஈடன் கார்டன் மைதானத்திற்கு ஐபிஎல் தொடரில் சிறந்த மைதானம் என்ற விருது கிடைத்த போது கூட அத்தனை சந்தோஷமாக அந்த விஷயத்தை பகிர்ந்துக்கொண்டார். 

இன்றும் வர்ணனையாளராக தொடர்ந்து கிரிக்கெட் களத்தில் இருந்து வருகிறார். மேலும் அவரது நிர்வாக திறமை இன்றும் ஐபிஎல்குழுவிலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆட்சி மன்றக் குழுவிலும் அவரை நிலைத்து இருக்க வைத்திருக்கிறது. இன்றும் அவரது குரல் கேட்கவும், முகம் பார்க்கவும் கூடுகிறது ரசிகர் கூட்டம்..

கிரிக்கெட் கடவுள் சச்சினாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கு கங்கலியை போல ரசிகர்கள் கூட்டம் கிடைக்கவில்லை. 

ஹேப்பி பர்த்டே தாதா! #HBDDADA

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close