பயிற்சியாளரால் அவமானப்படுத்தப்பட்டேன்... அணியில் இருந்து நீக்கப்பட்டேன்: மிதாலி பரபரப்பு குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 09:07 am
ramesh-powar-humiliated-me-at-world-t20-says-mithali

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணியில்  மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது குறித்து விசாரணை நடைபெற்றது. இதில் பயிற்சியாளர் தன்னை அவமானப்படுத்தி அணியிலிருந்து நீக்கியதாக மிதாலி தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் மேற்கிந்திய தீவுகளில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவு பெற்றன. இதில் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முன்னதாக அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

அந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அணியில் இல்லாததே தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் கூறினர் .அந்த போட்டியில் இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனால் மிதாலி ராஜ் அணியில் இல்லாதது பெரும் பிரச்னையாக உருமாறியது. 

அவ லீக் சுற்றில் 2 அரைசதங்கள் அடித்திருந்தார். அணியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார். 



இந்த நிலையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 35 வயதான மிதாலிராஜ், தனது தரப்பு விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரிடம் தெரியப்படுத்தியுள்ளார். அதில், "எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மனவேதனையையும், அவமதிப்புகளையும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை. நாட்டிற்காக நான் ஆற்றும் சேவையையும், எனது புகழ் மற்றும் நம்பிக்கையையும் அதிகாரத்தில் உள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கிறார்களோ? என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எனக்கு எதிராக தனது பதவியை பயன்படுத்துவார் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அரையிறுதி போட்டியில் என்னை வெளியே உட்கார வைத்த முடிவுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது வேதனை அளிக்கிறது. இத்தனைக்கும் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் நான் முன்பே பேசி இருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற எல்லா உண்மையும் அவருக்கு தெரியும். நான் இந்த மாதிரி ‘இ-மெயில்’ அனுப்புவதால் நான் மேலும் பாதிப்புக்குள்ளாகலாம் என்பதை அறிவேன். ஏனெனில் அவர் அதிகாரம் கொண்ட கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் உறுப்பினர். நான் வெறும் வீராங்கனை.

நான் எப்போதும் கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளை சரியாக கடைபிடிப்பவள். அதனால் தான் வெஸ்ட் இண்டீசில் இருந்த போது இந்த விஷயம் பற்றி ஊடகத்தினரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அரையிறுதி ஆட்டத்தில் என்னை நீக்க பயிற்சியாளர் எடுத்த முடிவுக்கு ஆதரவு தந்ததை தவிர்த்து, இந்திய 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் மீது எனக்கு எந்த மனக்கசப்பும் கிடையாது. இந்த உலக கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டது தான் வேதனையிலும் வேதனை. எங்களுக்குள் எந்த பிரச்சினைகள் எழுந்தாலும் அதை நானும், ஹர்மன்பிரீத் கவுரும் பேசி தீர்த்துக் கொள்ள முடியும். இந்திய 50 ஓவர் அணிக்கு நான் கேப்டனாக இருக்கிறேன். ஒரு நாள் போட்டி அணிக்கு அவர் எவ்வளவு அவசியம் என்பதை அறிவேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் அவரும் ஒருவர்.

எல்லா சர்ச்சைகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே பிரச்சினைகளும் உருவெடுத்து விட்டன. அவர் எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். 

உலக கோப்பை போட்டிக்கு முந்தைய தொடர்களிலும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களிலும் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடினேன். ஆனால் உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்கு முந்தைய நாள், ‘பேட்டிங்கில் நடுவரிசையை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீ பின்வரிசையில் இறங்க வேண்டும்’ என்று பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் கூறினார். அணியின் நலன் கருதி நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஜோடி சொதப்பியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்தோம். ஆனாலும் தொடக்க ஜோடியை வெகுவாக பாராட்டியதோடு, அடுத்த ஆட்டத்திலும் அதே ஜோடியே தொடக்க வீராங்கனைகளாக விளையாடுவார்கள் என்று சொன்னார். இதை கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன். பாகிஸ்தானுக்கு எதிராக மிடில்வரிசையை பலப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் அந்த அணிக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது உண்டு. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையும் இருந்தது. அதனால் இது பற்றி தேர்வாளர்களிடம் பேசினேன். அவர்களது தலையீட்டின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகியாக தேர்வானேன். ஆனால் ரமேஷ் பவார் என்னை ஊக்கப்படுத்தி ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன் பிறகு அவரது நடவடிக்கை எனக்கு எதிராக முற்றிலும் திரும்பியது.

உதாரணமாக வலை பயிற்சிக்கு அவர் வரும் போது நான் பேச முயற்சித்தால், உடனே அவர் செல்போனை பார்ப்பது போல் அங்கிருந்து சென்று விடுவார். நான் அருகில் உட்கார்ந்து இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்தும் வகையில், மற்றவர்களின் பயிற்சியை மட்டும் கவனிப்பது போல் செயல்படுவார். இத்தகைய அவமதிப்புகளால் மனம் காயப்பட்டது. ஆனாலும் நிதானத்தை இழக்கவில்லை. இது போன்ற பிரச்சினைகளால் அணியின் முன்னேற்றத்துக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று கருதி அணியின் மேலாளரிடம் எனது வேதனைகளை கொட்டி தீர்த்தேன். மேலாளர், அணி வீராங்கனைகளின் கூட்டத்தின் போது இது பற்றி பேசினார். அப்போது ரமேஷ் பவார் சில விஷயங்களில் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். நானும், அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளை தொடக்க ஜோடியாக அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்ததால், அப்படியே செய்யுங்கள் என்று கூறினேன். இத்துடன் எங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக நம்பினேன்.

ஆனால் அதற்கு பிறகு அவரது நடவடிக்கை மேலும் மோசமானது. என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அவரிடம் ஏதாவது யோசனை கேட்க முயற்சித்தால் உடனே வேறு பக்கம் திரும்பி தொடர்ந்து என்னை வெறுப்பேற்றும்படி நடந்து கொண்டார். இந்த சூழலில் அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடினமான ஆடுகளத்தில் களம் கண்டு அரைசதம் விளாசி மறுபடியும் ஆட்டநாயகி விருதை பெற்றேன். துரதிர்ஷ்டவசமாக பீல்டிங்கின் போது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. காய்ச்சலும் வந்து விட்டது. உடல்நிலை சரியாக சில நாட்கள் ஓய்வு தேவை என்று அணியின் உடல்தகுதி நிபுணர் அறிவுறுத்தினார்.



இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆட முடியாமல் போனது. போட்டியை பார்க்க மைதானத்திற்கு வரக்கூடாது என்று ரமேஷ் பவார் திடீரென கட்டளையிட்டார். மிகப்பெரிய ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா விளையாடும் போது அணி வீராங்கனைகளுடன் நான் இருக்கக்கூடாது என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக அணி மேலாளரிடம் பேசினேன். ‘காயம் பயப்படும்படி இல்லை, உடல்நிலை தான் கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். இதையடுத்து மேலாளர், நான் மைதானத்திற்கு செல்ல ஒப்புக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் ரமேஷ் பவாரிடம் இருந்து செல்போனில் ஒரு தகவல் வந்தது. வீராங்கனைகளுக்குரிய அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரது நடவடிக்கை எல்லாமே வினோதமாகவே இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர், மைதானத்தில் வீராங்கனைகள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு வரும்படி அழைப்பு வந்தது. நானும் வீராங்கனைகளுடன் இணைந்து வெற்றியை கொண்டாடினேன். இருப்பினும் போட்டி நடந்து கொண்டிருந்த போது அறையிலேயே முடங்கி கிடந்தது, ஏதோ சிறைபிடிக்கப்பட்டு போல தவித்தேன்.

அரைஇறுதி சுற்றை எட்டிய பிறகு 3 நாட்கள் இடைவெளி இருந்தது. முதல் நாளில் யாரும் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை. பீல்டிங் பயிற்சி மட்டுமே நடந்தது. ஆனால் ரமேஷ் பவார் 5 வீராங்கனைகளுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு நான், ‘இரண்டு நாட்களாக பேட்டிங் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதனால் நானும் கூடுதல் பயிற்சியில் இணைகிறேன்’ என்று பவாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. மறுநாள் அவர் பின்வரிசையில் உள்ள வீராங்கனைகளுடன் சேர்த்து என்னை பேட்டிங் பயிற்சி செய்ய வைத்தார். இதில் இருந்தே அரையிறுதியில் நான் விளையாடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

வழக்கமாக போட்டிக்கு முந்தைய நாளோ அல்லது போட்டி நாள் அன்றோ ஆடும் லெவன் அணியை அறிவிப்பார். ஆனால் அரையிறுதியில் போட்டி நாள் அன்று காலையிலேயோ அல்லது மாலையிலேயோ அணி குறித்து அவர் வாய் திறக்கவில்லை. இரவில் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். ‘டாஸ்’ போடுவதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்திற்குள் நுழைந்த போது, என்னை நோக்கி ஓடி வந்தார். ‘கடைசி லீக்கில் ஆடிய அதே அணியுடன்தான் விளையாடப்போகிறோம்’ என்று கூறினார். அப்போது தான் அணியில் எனக்கு இடம் இல்லை என்பது தெரிந்தது. ஆடும் லெவன் அணியினர் தவிர மற்ற யாரும் வீராங்கனைகளின் பகுதியில் இருக்கக்கூடாது என்று சொன்ன போது மேலும் நொந்து போனேன். எனது அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் சிந்தினேன். இவ்வளவு ஆண்டுகள் அளித்த பங்களிப்புக்கு என்ன மதிப்பு? என்று நினைக்கத் தோன்றியது.

ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இதுவரை எனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். உங்களிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

இதுகிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close