கடைசி ஓவர்... திக்.. திக்... நிமிடங்கள்... சிஎஸ்கே த்ரில் வெற்றி!

  கிரிதரன்   | Last Modified : 12 Apr, 2019 09:28 pm
ipl-csk-got-trilling-vectory-against-rajesthan-royals

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 152 ரன்கள் டார்கெட்டை, அசால்ட்டாக அடித்து ஜெயிக்கக்கூடிய வல்லமை படைத்த அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே). ஆனால், ராஜஸ்தான் அணியினர் தொடக்கத்தில் வீசிய சிறப்பான பந்துவீச்சின் காரணமாக, சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, டுபிளிஸ்சிஸ், கேதர் ஜாதவ் என அனைவரும் ஒன்றை இலக்க ரன்களுடன், ஒருவர்பின் ஒருவராக பெளவிலியன் திரும்பும்நிலை ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆறு ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்களை மட்டுமே சிஎஸ்கே எடுத்திருந்தது. இதுபோன்ற இக்கட்டான சூழலில், ஆபத்பாந்தவனாய் களமிறங்கி, அணியை கரையேற்றிய அனுபவம்மிக்க தோனி, ராய்டுவுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார். ராய்டு தன் பங்கிற்கு 47 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டானார்.

இருப்பினும், தோனி கடைசி ஓவர் வரை களத்தில் நின்று கொண்டிருந்ததால், சிஎஸ்கேவுக்கு எப்படியும் வெற்றி நிச்சயம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 

விறுவிறுப்பான கிளைமாக்ஸ் ஓவரும் வந்தது.  ஆட்டத்தின்  கடைசி ஓவரில்  சிஎஸ்கே அணிக்கு 18 ரன்கள் தேவை. ராஜஸ்தான் அணியின் ஸ்டோக்ஸ், ஆப் - ஸ்டெப்புக்கு வெளியே வீசிய முதல் பந்தை ரவீந்திர ஜடேஜா சிக்ஸருக்கு விரட்டினார்.

அடுத்த பந்து நோ - பால் ஆக, அதில் ஜடேஜா ஒரு ரன்கள் எடுக்கவே,  ஃப்ரீ ஹிட் வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது. ஸ்டோக்ஸ் வீசிய இரண்டாவது பந்தில் தோனி இரண்டு ரன்கள் எடுக்க, தற்போது  சிஎஸ்கே வெற்றிபெற 4 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது.

எதிர்பாராதவிதமாக, ஸ்டோக்ஸின் அருமையான யார்க்கரில் தோனி க்ளீன் போல்ட் ஆக, 3 பந்துகளில் அதே 8 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.

புதிதாக களமிறங்கிய சான்ட்னர் எதிர்கொண்ட ஃபுல்டாஸ் பந்து, அவரின் நெஞ்சுக்கு மேல் சென்றதால், அதனை  மெயின் அம்பயர் உடனே நோ -பால் என  செய்கை காட்டினாலும், லெக் - அம்பயர் அது சரியாக வீசப்பட்ட பந்துதான் என சொல்லிவிட்டார். இதனால், டென்ஷனான சிஎஸ்கே கேப்டன் தோனி, பெவிலியனிலிருந்து களத்துக்கே வந்து அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்தார். கூடவே ஜடேஜாவும், சான்ட்னரும் முறையிட்டபோதும், அந்த பந்துக்கு நோ -பால் தரப்படவில்லை.

இதனால், 2 பந்துகளில் 6 ரன்கள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணி வீரர்களும் நகைத்தை கடித்துக் கொண்டு, ஸ்டோக்ஸ் வீசிய ஐந்தாவது பந்து சிக்ஸருக்கு பறக்குமா? இல்லை விக்கெட் விழுமா? என பதற்றம் கலந்த ஆவலுடன்  எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த பந்தில் மீண்டும் சான்ட்னர் 2 ரன்களையே எடுக்க முடிந்தது.

ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்டோக்ஸ் பதற்றத்துடன் வீசிய பந்து  ஒயிட் பால் ஆனது. இதனால் கூடுதலாக ஒரு ரன்னும், ஓர் பந்தும்  சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. மீண்டும் கடைசி பந்தை ஸ்டோக்ஸ் வீச, வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில்,  சான்ட்னர் அருமையான சிக்ஸர் அடிக்கவே, சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

இக்கட்டான சூழலில் களமிறங்கி, 43 பந்துகளில் 58 ரன்களை (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசிய தோனிக்கு ஆட்டநாயகன்  விருது வழங்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனி ருசிக்கும் 100 வெற்றி இது என்பது நேற்றைய போட்டியின் கூடுதல் சிறப்பு.

 நாம் நேற்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே கணித்ததை போல, நோ - பால் நாடகத்தையெல்லாம் தாண்டி, ராஜஸ்தான் ராயல்ஸை, சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கொண்டுள்ளது. https://www.newstm.in/news/sports/cricket/60450-special-prediction-about-today-s-ipl-match.html

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close