ஐபிஎல் : இன்றும் தொடருமா சிஎஸ்கேவின் வெற்றிப் பயணம்?!

  கிரிதரன்   | Last Modified : 14 Apr, 2019 03:55 pm
ipl-csk-vs-kkr-match-prediction

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியும் மீண்டும் பலபரீட்சை நடத்துகின்றன.

 கேகேஆர் அணியுடன், சொந்த மண்ணில் (சேப்பாக்கம்) நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக, அவர்களின் சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் பெற்ற த்ரில் வெற்றி ஆகியவை தந்துள்ள உற்சாகத்தால், முழு தெம்புடன் சிஎஸ்கே அணி இன்று களமிறங்க உள்ளது.

அத்துடன், இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்ற ஏழு போட்டிகளில்,  ஆறு போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சிஎஸ்கே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அந்த அணிக்கு உறுதியாகிவிடும். எனவே, இந்த போட்டியில் வெல்வதற்கான அனைத்து வித்தைகளையும் கேட்பன் தோனி களத்தில் காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், ஆட்டம்  நடைபெறவுள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சிஎஸ்கே அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த சவாலை  எதிர்கொள்ளும் வல்லமை சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான வாட்சன், ரெய்னா, ராயுடு, ஜாதவ், தோனி ஆகியோருக்கு உண்டு என்றாலும், இவர்கள் யாரும்  இத்தொடரில்  இதுவரை தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன், அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன், பிற எந்த அணி வீரர்களை காட்டிலும், "பவர் - ப்ளே" ஓவர்கள் முடிவதற்குள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பி விடுவதும், சிஎஸ்கேவுக்கு அதிக ரன்கள் சேர்ப்பதில் சிக்கலாக அமைந்துள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வாட்சன் நிலைத்து ஆட வேண்டியது அவசியம்.

புள்ளிகள் பட்டியலில், சிஎஸ்கேவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் இருக்கும் அணி கேகேஆர். இருப்பினும் இந்த அணி தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக, சென்னை அணியுடனான போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு பதிலடி தரும் வேகத்தில்தான். கொல்கத்தா அணி இன்று களமிறங்கும் என்பதிலும் ஐயமில்லை.

அந்த அணியின் "ஒன்மேன் ஆர்மி" என சொல்லும் அளவுக்கு ஆன்ட்ரூ ரசுல், எல்லா போட்டிகளிலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் அவரது ரன் மழையை கொஞ்சம் கட்டுப்படுத்திய பெருமை சென்னை அணியையே சாரும்.

கடந்த போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக அவர் அரைசதத்தை கடந்தாலும், பிற அணிகளுடனான ரசுலின் ஸ்ட்ரைக் ரேட்டை ஒப்பிடும்போது, சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் ரன் எடுக்கும் வேகம் குறைவாகதான் இருந்தது. இதற்கு சிஎஸ்கே அணியின் ஹர்பஜன் சிங் போன்ற அனுபவம்மிக்க சுழல்பந்து வீச்சாளர்கள், ரசுலை "வெச்சு செஞ்சது"தான் காரணம்.

சென்னை அணியின் சுழலை ரசுல் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதும், இன்றைய போட்டியின் முக்கிய அம்சமாக இருக்கக்கூடும். ரசுலுக்கு பக்கபலமாக இருக்கவே இருக்கிறார் சுபன் கில்!

காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம்பெற்றால், அவர்கள் சிஎஸ்கேவுக்கு கட்டாயம் நெருக்கடி தருவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா, ஹெரி கார்னி ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்யும்பட்சத்தில், சிஎஸ்கேவுக்கு இப்போட்டி  கடுமையானதாகவே இருக்கும்.

மொத்தத்தில்,  வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு போன்ற காரணிகளை வைத்து பார்க்கும்போது, இன்றைய போட்டியில் வெற்றிபெற கேகேஆர் அணிக்கு 51%, சிஎஸ்கேவுக்கு 49% வாய்ப்புகள் உள்ளன. அணிகளின் வெற்றி தீர்மானிப்பதில் டாஸுக்கும்  முக்கிய பங்குண்டு.

சிஎஸ்கே அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? அல்லது அதன் தொடர் வெற்றிக்கு கடிவாளம் போடுமா கேகேஆர்?... வாங்க மேட்ச்சை பார்க்கலாம்...

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close