ஐபிஎல் : சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு 'செக்' வைக்குமா ஹைதராபாத்?

  கிரிதரன்   | Last Modified : 17 Apr, 2019 05:53 pm
ipl-csk-vs-srh-who-will-be-win-today

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், பலம் வாய்ந்த  சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், நாளுக்கு நாள் பலவீனம் அடைந்துவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (எஸ்ஆர்ஹெச்) ஹைதராபாதில் மோத உள்ளன.

தாம் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில், திருஷ்டி பரிகாரமாக ஒரேயொரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கே அணி, தொடர்ந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அணியின் கேப்டன்  தோனி அபாரமான ஃபார்மில் உள்ளது ஒட்டுமொத்த சிஎஸ்கே அணிக்கே மிகப் பெரிய பலம் எனச் சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அவரது அனுபவம் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பௌலிங் என எல்லா நிலையிலும் அணிக்கு கைக்கொடுத்து வருகிறது. சற்று இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள டூப்ளசிஸ்சின் சிறப்பான பேட்டிங்கும் சென்னை அணிக்கு பக்கபலமாக உள்ளது.

இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களின் மாயாஜால சுழல் பந்து வீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை, குறிப்பாக மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருவதுடன், முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையையும் ஏற்படுத்தி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும், ஆட்டத்தின் தொடக்கம், முடிவு என எந்த நிலையிலும் சிறப்பாக பந்துவீசி, அணியின் வெற்றிக்கு தன் பங்கை சரியாக அளித்து வருகிறார்.

இருப்பினும், டாப் ஆர்டர் பேஸ்ட்மேன்களான ஷேன் வாட்சன், ராய்டு போன்றவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருவது சிஎஸ்கேவின் பலவீனமாக தொடர்கிறது.

ஓபனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா ஃபினிசிங் சரியில்லயேப்பா... என சொல்லும் அளவுக்கு, சிஎஸ்கேவுக்கு நேர்மாறாக மோசமான ஃபாமில் உள்ளது ஹைதராபாத் அணி.

இந்த அணியின் தற்போதைய ஒரே பலம், துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேரிஸ்டவ். எந்த அணி பெளலர்களையும் கதிகலங்க வைக்கும் இவர்களின் அதிரடி ஆட்டம் இன்றும் தொடரும்பட்சத்தில் சிஎஸ்கேவுக்கு அவர்கள் நெருக்கடியை ஏற்படுத்தலாம். இவர்களை தவிர, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம், அந்த அணியை புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.

முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர்குமாரும், ரஷீத் கானும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தாததும் ஹைதராபாத் அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் ஒருபடியாவது முன்னேற வேண்டுமானால், சிஎஸ்கேவை இன்று வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது ஹைதராபாத். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமில்லை. ப்ளே -ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிடும் அபாய கட்டத்தில் உள்ள அந்த அணி, பேட்டிங், பெளலிங், பீல்டிங் என, எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, சிம்மசொப்பனமான சிஎஸ்கேவை வெல்ல முடியும்.

இன்றைய போட்டியில் ஜெயிக்கப் போகுவது யாரு? வாங்க மேட்ச் பார்க்கலாம் இரவு 8 மணிக்கு...

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close