போட்டியில் ஜெயித்த கோலி..! ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...!

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Apr, 2019 05:06 pm
virat-wins-the-match-dhoni-wins-our-hearts

பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், தமது அணியின் வெற்றிக்காக ஆட்டத்தின் கடைசிவரை ஒற்றை மனிதனாக போராடிய தோனி, ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினார்கள். நடப்பு தொடரில் நன்றாக ஆடி வந்த கோலி (9 ரன்) சாஹர் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோலியை தொடர்ந்து வந்த டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடினார். ஆனால், ஜடேஜா அவரது விக்கெட்டையும், நாத்தின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் டுபிளிசிஸிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். 

ஒரு பக்கம் தனது விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த பார்த்தீவ் பட்டேல் அரைசதம் அடித்தார். அதன் பிறகு அவரை பிராவோ தூக்கிவிட்டார். ஸ்டொயினிஸ் நேற்றைய ஆட்டத்தில், கெயில் சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனது போன்று, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ஆடிய மொயின் அலியும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், டுபிளிசஸ் களமிறங்கினர். முதல் ஓவர் ஸ்டெயின் வீசினார். ஆரம்பமே அதிர்ச்சி தான். வாட்சன், ரெய்னா விக்கெட்களை அவர் வீழ்த்தினார். அடுத்து டுபிளிசஸ், கேதர் ஜாதவ் விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். 

28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி திணறியது. அணி எப்போதும் தடுமாறினாலும், ஆபத்பாண்டவனாக வரும் தோனி களமிறங்கினார்.  தனது விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி வந்த ராயுடுவும், தோனியும் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வந்த நிலையில், ராயுடு 29 ரன்னில் அவுட் ஆனார். 5வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி பிரிந்தது.
பிறகு வந்த ஜடேஜா தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேற, பிராவோ வந்தார். அவரும் ஏமாற்றம் அளித்தார். இதனிடையே சிங்கிள் மேனாக ஆடி வந்த தோனி அரைசதம் அடித்தார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற  நிலையில், உமேஷ் யாதவ் பந்து வீசினார். முதல் பந்தில் தோனி பவுண்டரி விளாசினார். 2வது, 3வது பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதில், இரண்டாவது சிக்ஸில் பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றுவிட்டது. 4 -வது பாலில் தோனி தொடர்ந்து 2 ரன்கள் அடிக்க, 5வது பாலில் ஒரு மீண்டும் ஒரு சிக்ஸர்...

கடைசி ஒரு பாலுக்கு 2 ரன்கள் தேவை. ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் தோனி மீது, தோனியின் பார்வையோ பந்தின் மீது. கடைசி பந்தை உமேஷ் யாதவ் ஸ்லோ பாலாக வீச, அந்த பந்து, தோனியின் கண்களை ஏமாற்றி, ஆர்சிபியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் கைக்கு சென்றுவிட்டது. இருப்பினும், சமயோஜிதமாக பைஸ் கணக்கில் தோனி ஒரு ரன்னை ஓடி எடுத்து, ஆட்டத்தை டிரா ஆக்க தோனி முயன்றார். எதிர்முனையில் இருந்த ஷர்துல் தாகூரும் கிரீஸை நோக்கி ஓடி வர, பார்த்தீவ் பட்டேல் பந்தை ஸ்டெம்பிங் செய்து அவரை ரன்- அவுட் ஆக்கினார்.

இருப்பினும்,  மூன்றாவது அம்யரின் சிக்கலுக்கு பிறகே, ஷர்துல் தாகூரின் அவுட்டானது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மிகவும் பரப்பரப்பான போட்டியில்  1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றியை பெற்றது.

அபராமாக ஆடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி, 48 பந்துகளில் 84* ரன்கள் அடித்தார். இதில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.

கோலி நேற்று போட்டியை வென்றுவிட்டார். ஆனால், ஒற்றை மனிதனாக ஆட்டத்தின் கடைசி வரை போராடிய தோனி, ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களையும் வென்றார்.

ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் தோனி நேற்று நிகழ்த்தினார்.

2014 ஐபிஎல் சீசனுக்கு பிறகு, சென்னை அணியை பெங்களூரு அணி நேற்றுதான் வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது நடக்க வேண்டுமென சிலர் விரும்புவர்; இது நிகழ வேண்டுமென்று சிலர் வாழ்த்துவர்; ஆனால், தோனி போன்ற சிலரால் தான் விருப்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, சாதனைகளை நிகழ்த்த முடியும்.

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close